நினைத்தாலே முக்தி தரும் அண்ணாமலையார்.. திருவண்ணாமலை கோவில் சிறப்புகள்!

Swarnalakshmi
Nov 28, 2025,11:22 AM IST

- ஸ்வர்ணலட்சுமி


பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான திருவண்ணாமலை கோவிலை நினைத்தாலே முக்தி தரும் சிறப்புடையது. அண்ணாமலையார் திருக்கோவில் சுமார் 25 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்த பிரம்மாண்ட ஆலயமாகும். இந்த கோவிலில் நான்கு புறமும் பெரிய கோபுரங்கள் மற்றும் உள் கோபுரங்கள் 5 கோபுரங்கள் "கட்டை கோபுரங்கள் "என்று அழைக்கப்படும் சிறிய கோபுரங்கள்  என மொத்தம் ஒன்பது கோபுரங்கள் இருக்கின்றன. 


இந்த ஒன்பது கோபுரங்களும் கோவிலின்  9 நுழைவாசல்களாக அமைந்துள்ளன. இதனால் "நவ துவாரபதி "என்றும் திருவண்ணாமலை திருத்தலத்தை அழைப்பார்கள்.




இங்கு அமைந்துள்ள ஒன்பது கோபுரங்கள் பற்றிய சிறு தகவல்களை  பார்ப்போம்...


1. ராஜகோபுரம் (கிழக்கே அமைந்துள்ளது )

2. மேற்கு கோபுரம் ( பேய் கோபுரம் ) மேற்கு

3. திருமஞ்சன கோபுரம்  (தெற்கு )

4. அம்மணி அம்மாள் கோபுரம்( வடக்கு ).

5. வல்லாள மகாராஜா கோபுரம்.

6. கிளி கோபுரம்.

7. வடக்கு கட்டை கோபுரம்.

8. தெற்கு கட்டை கோபுரம்.

9. மேற்கு கட்டை கோபுரம்.


இந்த ஒன்பது கோபுரங்களை பற்றிய சிறு தகவல்கள் இதோ.


1. ராஜகோபுரம் :


இந்த கோபுரத்திற்கு சிறிய வரலாறு உண்டு. 15 ஆம் நூற்றாண்டில் தென்னகத்தை ஆண்ட கிருஷ்ண தேவராயர் அவருடைய வெற்றிகளை நினைவு கூறும் வகையில் திருவண்ணாமலையில் பிரம்மாண்டமான ராஜகோபுரத்தை அமைக்க வேண்டும் என்று நினைத்தார்.  ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோவில் கோபுரத்தை விட அதிக உயரம் கொண்டதாக திருவண்ணாமலை கோவிலின் ராஜகோபுரம் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். 


1550 களில் கிருஷ்ணதேவராயர்  இந்த ராஜகோபுரத்தை கட்டும் பணியை தொடங்கி தீவிர படுத்தினார். 135 அடி நீளம், 98 அடி அகலம் அடித்தளம் அமைத்து ராஜகோபரத்தை அவர் எழுப்பினார். ஆனால் கோபுரம் கட்டும் பணிகள் முடிவதற்குள் கிருஷ்ணதேவராயர் மறைந்துவிட்டார். இதனைத் தொடர்ந்து ராஜகோபுரத்தை கட்டும் பணிகள் சிவனேசர், லோகநாதன் என்ற முனிவர்கள் தஞ்சை ஆண்ட செவ்வப்ப நாயக்கரிடம் முறையிட்டனர். அவரும் ஒப்புதல் தெரிவித்து கிருஷ்ணதேவராயரின் ஆசைப்படி தஞ்சை பெரிய கோவில் கோபுரத்தை விட ஒரு அடி உயரமாக 217 அடி உயரத்துடன் திருவண்ணாமலை ராஜகோபுரம் பிரம்மாண்டமாக கட்டி முடிக்கப்பட்டது.


இந்த கோபுரத்தில் விஜயநகர மன்னர்களின் கட்டிடக்கலைகளை அதிகமாக செதுக்கி இருப்பர். கோபுரத்தின் சுற்று பகுதிகளில் பல நாட்டிய சிற்பங்கள், விநாயகர்,முருகர்,பிரம்மா, துர்க்கை, காளை வாகனம், அன்னப்பறவை, மயில் மேல் அமர்ந்த முருகன், லிங்கத்திற்கு பால் வார்க்கும் பசு உள்பட பல்வேறு அழகான சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. ஆங்காங்கே மன்னர் காலத்து கல்வெட்டுகளும் செதுக்கப்பட்டுள்ளன. பல்வேறு புலவர்கள் இந்த கோபுரத்தின் அழகை புகழ்ந்து பாடியதாக கூறப்படுகிறது. இந்த கோபுரத்திற்கு "ராயர் கோபுரம்,"என்றும் இன்னொரு பெயர் உண்டு. இந்த கோபுரத்தின் கீழ் பகுதி கற்களாலும் மேற்பகுதி செங்கல் மற்றும் சுதையாலும் கட்டி முடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ராஜகோபுரம் பல கிலோமீட்டர் தூரத்திற்கு சாரம் கட்டி பெரிய பெரிய பாறாங்கற்களை கொண்டு அழகுற கட்டி, சிற்பங்கள் செதுக்கி பிரம்மாண்டமாக தற்போது காட்சியளிக்கின்றது.


2. மேற்கு கோபுரம் (பேய் கோபுரம்)


ராஜகோபுரத்திற்கு நேரே மேற்கு பகுதியில் திருவண்ணாமலையை பார்த்த வண்ணம் இந்த கோபுரம் அமையப்பெற்றுள்ளது. கிருஷ்ணதேவராயர் ராஜகோபுரத்தை கட்டும் திருப்பணிகள் தொடங்கிய போது இந்த மேற்கு கோபுரத்தையும் தொடங்கி வைத்தார்.ஆனால் இந்த கோபுரத்தின் பணிகளை செவ்வப்ப நாயக்கர் தான் முடித்தார்.இதன் உயரம் 160 அடி ஆகும். ஆனால் இந்த கோபுரத்திற்கு ஒரு சுவாரஸ்யமான தகவல் உண்டு. மேற்கு கோபுரம் என்பது பேச்சு வழக்கில் 'மே க்கோபுரம் 'என்றும் பிறகு 'பே கோபுரம் 'என்றும் அது பிற்காலத்தில்' பேய் கோபுரம் 'என்று மக்கள் அழைக்கின்றனர். 


இந்த கோபுரத்தில் ஒன்பது நிலைகள் அமையப்பெற்று மகிஷாசுரனை துர்க்கம் வதம் செய்த காட்சி,காளை வாகனத்தில் சிவன் அமர்ந்த காட்சி,உமை அம்மை, முருகன், பிரம்மா சரபேஸ்வரர்,முனிவர்கள், பூதகணங்கள் அழகாக செதுக்க ப்பட்டுள்ளன. மேலும் கோபுரங்களை பற்றிய சுவாரசியமான தகவல்களை நாளைய பதிவில் காணலாம். தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். எழுதியவர் உங்கள்  ஸ்வர்ணலட்சுமி.