திருவண்ணாமலை தீபத் திருவிழா.. கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது
- ஸ்வர்ணலட்சுமி
விசுவாவசு வருடம் 20 25 நவம்பர் 24 ஆம் நாள் திங்கட்கிழமையான இன்று பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் கொடியேற்றத்துடன் இன்று காலை தொடங்கியது தீபத்திருவிழா.
கார்த்திகை தீபம் என்றாலே "திருவண்ணாமலை தீபம்" தான் உலக பிரசித்தி பெற்றதாக விளங்குகிறது. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக பத்து நாட்கள் விழாவாக தொடங்கியது.
இந்த ஆண்டு கார்த்திகை தீப திருவிழா அடுத்த மாதம் வரும் டிசம்பர் 3ஆம் தேதி மிக பிரம்மாண்டமாகவும், கோலாகலமாகவும் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து தீபத் திருவிழாவிற்கு வெளி மாநிலங்கள்,வெளிநாடு மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் இங்கு வருகை புரிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா தங்க முலாம் பூசப்பட்ட 63 அடி உயரம் கொடி மரத்தில் மேள தாளங்கள் முழங்க, இன்று காலை 6:00 மணியில் இருந்து 7:15 மணி அளவில் சாமி சன்னதியில் கொடியேற்றம் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. கார்த்திகை மகா தீபம் விழாவினை முன்னிட்டு கொடியேற்றத்திற்கு மூன்று நாட்கள் முன்பு காவல் தெய்வ வழிபாடு நடைபெறுவது வழக்கம்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை விநாயகர் உற்சவ நிகழ்ச்சி சிறப்பாக விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் ரிஷப வாகனத்திலும் எழுந்தருளி மாடவீதி உலா வரும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. கொடியேற்ற விழாவினை தொடர்ந்து இன்று காலை மற்றும் இரவில் விநாயகர், வள்ளி,தெய்வானையுடன் முருகர்,உண்ணாமலை அம்மன், சமேத அருணாச்சலேஸ்வரர், துர்க்கை அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகள் மாட வீதி உலா நடைபெறுகிறது.
இந்த நிலையில் திருவண்ணாமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.பக்தர்கள் எவ்வித சிரமமும் இன்றி தரிசனம் செய்வதற்கான, தேவையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் 10 நாட்கள் நடைபெறும் தீபத் திருவிழாவின் கடைசி நாளான டிசம்பர் 3ஆம் தேதி புதன்கிழமை அதிகாலை கோவிலில் பரணி தீபமும், மாலையில் கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் கொண்ட அண்ணாமலையார் கோவிலின் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்.
"ஓம் நமசிவாய,ஓம் நமசிவாய, ஓம் நமசிவாய"
இது போன்ற சுவாரசியமான தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன் எழுதியவர். உங்கள் ஸ்வர்ணலட்சுமி.