திருவண்ணாமலை 2026 வசந்த உற்சவம் கோலாகலம்!
- ஸ்வர்ணலட்சுமி
அக்னி ஸ்தலம், நினைத்தாலே முக்தி கிடைக்கும் தலமான திருவண்ணாமலையில் சித்திரை திருவிழா 10 நாட்களுக்கு சிறப்பாக வசந்த உற்சவம் நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் ஆண்டு முழுவதும் பல உற்சவங்கள் சிறப்பாக நடைபெறும்.அதில் ஒன்று கோடை காலத்தில் பத்து நாட்களுக்கு நடைபெறும் வசந்த உற்சவம் ஆகும்.
வசந்த உற்சவம் தொடங்கிய நாள்- ஏப்ரல் 21, சித்திரை மாதம் எட்டாம் தேதி செவ்வாய்க்கிழமை .
வசந்த உற்சவம் முடியும் தேதி: ஏப்ரல் 30, 20 26 சித்திரை மாதம் 17ஆம் தேதி வியாழக்கிழமை.
ஏப்ரல் 20 திங்கட்கிழமை அன்று அண்ணாமலையார் கோவிலில் உள்ள சம்பந்த விநாயகர் சன்னதியில் பந்தக்கால் நடும் நிகழ்வு நடந்தேறியது.
வசந்த உற்சவத்தில் இரண்டு வைபவங்கள் :
திருவண்ணாமலையில் நடக்கும் வசந்த உற்சவத்தில் இரண்டு தனித்துவமான வைப்பவங்கள் நடைபெறுகிறது. ஒன்று அண்ணாமலையார் கோவிலில்,மகிழமரம், ஸ்தல விருச்சத்தின் அருகில் உள் பிரகார சுற்றின் போது உற்சவ மூர்த்தி அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலை அம்மன் மீது அழகான பொம்மை பூ கொட்டும் நிகழ்ச்சி ஒவ்வொரு நாள் இரவு 7:30மணிக்கு நடை பெற்று வருகிறது.
வசந்த உற்சவ பத்து நாட்களுமே உற்சவமூர்த்தி மீது பொம்மை பூ போடும் நிகழ்வு (இயந்திரம் மூலம் ) நடைபெறுகிறது. இந்த அழகான நிகழ்வை காண கண் கோடி வேண்டும். ஒவ்வொரு நாளும் பொம்மைக்கு ஒவ்வொரு விதமான அலங்காரம் செய்யப்படும். இந்த அழகான நிகழ்வை காண தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
வசந்த உற்சவத்தின் சிகர நிகழ்வாக "மன்மத தகனம்" நடைபெறுகிறது. ஈசன் நெற்றிக்கண்ணை திறந்து மன்மதனை எரித்த நிகழ்வு (மன்மத தகனம்)மற்றும் மன்மதன் உயிர்த்தெழும் நிகழ்வு பிரம்மாண்டமாக வசந்த உற்சவத்தில் அரங்கேறும்.
இந்த வருடம் ஏப்ரல் 30ம் தேதி இரவு 11 :00மணிக்கு மேல் திருக்கோயில் கொடிமரம் அருகே மன்மத தகனம் நடைபெறும்.
கடந்த ஏழு நாட்களாக சித்திரை வசந்த உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்று வந்த நிலையில் அருணாச்சலேஸ்வரர் உடனாகிய உண்ணா முலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு மலர் அலங்காரத்துடன் மகா தீபாராதனை காண்பிக்கப்படுகிறது. சுவாமி வெட்டிவேர் பல்லக்கில் எழுந்தருளி மூன்றாம் பிரகாரத்தில் உள்ள நான்கு கால் பன்னீர் மண்டபத்தில் அருணாச்சலேஸ்வரர் உடனாகிய உண்ணாமலை அம்மனுக்கு பொம்மை பூ போடும் நிகழ்வு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மகிழ மரத்தை அருணாச்சலேஸ்வரர் உடனாகிய உண்ணாமலை அம்மன் வெட்டிவேர் பல்லக்கில் பத்து முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு "அண்ணாமலையாருக்கு அரோகரா "கோஷமிட்டு வழிபாடுகள் செய்த வண்ணம் உள்ளனர்.
மேலும் இது போன்ற சுவாரசியமான ஆன்மீகத் தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.