திருவாதிரையில் ஓர் ஆனந்த கூத்து!

Su.tha Arivalagan
Jan 03, 2026,12:57 PM IST

- "பக்தித் தென்றல்" பாவை.பு

  

பெரும்பற்றபுலியூரானை, ஆடல் வல்லானை, பொன்னம்பலத்தானை,கூத்தப்பிரானை, சிற்றம்பல நாயகனான ,நடராஜர் பெருமானை திருவாதிரை திருநாளில் போற்றும் பெருவிழா. 


படைத்தல்,காத்தல்,அழித்தல்,மறைத்தல்,அருளல் போன்ற ஐந்தொழில்களை புரியும் சிவபெருமான் ஊழி(யுகம் முடியும்) காலத்தில் உயிர்களை இயக்குவதற்காக கொண்ட கோலமே நடன திருக்கோலம் இதுவே நடராஜரின் ஆனந்த திருக்கோலம். 


நடராஜரின் வலதுதிருக்கரத்தில் உள்ள உடுக்கை படைத்தலையும் அபய கரம் காத்தலையும் நெருப்பு ஏந்திய இடது கரம் அழித்தலையும் வைத்த திருவடி மறைத்தலையும் தூக்கிய திருவடி அருளையும் காட்டுகிறது. 

 

27 நட்சத்திரங்களில் திரு எனும் மரியாதை அடைமொழியுடன் வருவது திருவாதிரையும், திருவோணமும்  அதனால் தான் இவை இறைவனுக்கு உரிய நட்சத்திரங்களாக இருக்கின்றன. இதில் திருவோணம் மஹாவிஷ்ணுவிற்கும், திருவாதிரை நடராஜப்பெருமானுக்கும் உகந்ததாக உள்ளது. 




மாதம் தோறும் திருவாதிரை நட்சத்திரம் வந்தாலும் மார்கழியில் வரும் திருவாதிரை நட்சத்திரத்திரமே எம்பெருமானுக்கு உகந்தது. அண்ட சராசரங்களிலும் அருள் மழை பொழிந்து ஈசன் ஆடும் திருநடனமே ஆனந்த கூத்தாகும்  ஒரு நாள் சிவன் நடனமாடும் இந்த ஆனந்த தாண்டவத்தை திருப்பாற்கடலில் பள்ளிகொண்ட திருமால் பார்த்து விட்டார். இதனால் திருமால் மிகவும் ஆனந்தமாக காட்சியளித்தார். இதனை கண்ட ஆதிசேஷன் எம்பெருமானே தங்களுடைய முகத்தில் தெரியும் எல்லையில்லா ஆனந்தத்திற்கு காரணம் என்ன என்று கேட்டார். 


அதற்கு விஷ்ணு பகவான் ஆடல் வல்லான் சிவபெருமானின் ஆனந்த நடனத்தை கண்டேன்.நடராஜராக சிவபெருமான் ஆடிய திருதாண்டவமே என்னுடைய ஆனந்தத்திற்கு காரணம் என்று கூற நாராயணையே ஆனந்தத்தில் ஆழ்த்திய சிவபெருமானின் ஆனந்த தாண்டவத்தை காண ஆசை ஏற்பட்டு. இதனை நாராயணனிடம் கூற அவரும் ஆதிசேஷனிற்கு ஆசி அளித்து பூலோகத்திற்கு அனுப்பி வைத்தார். 

     

பூலோகத்தில் பதஞ்சலி முனிவராக அவதரித்த ஆதிசேஷன், சிவனின் ஆனந்த தாண்டவத்தை காண வேண்டி தவம் இருந்தார். பல வருடங்கள் தவத்தின் பயனாக, சிவபெருமான் பதஞ்சலி முனிவர் முன் தோன்றி காட்சி அளித்து, நீர் என்னை நோக்கி தவம் செய்வது போல் வியாக்கிரபாதர் முனிவரும் கடும் தவம் புரிந்து வருகிறார். இருவரும் இணைந்து தில்லை வருவீர்களாக , அங்கு எமது திரு தாண்டவ காட்சியை காட்டி அருளுவோம் என கூறி மறைந்தார். 


இதனையடுத்து பதஞ்சலி முனிவரும், வியாக்கிரபாதர் முனிவரும் தில்லை சென்றடைந்தனர். அங்கு ஆடல் வல்லானான நடராஜர் பெருமான் தனது ஆனந்த கூத்தை சிற்றம்பலத்திலேயே காட்டி அருள் புரிந்தார். சிவபெருமான் ஆனந்த தாண்டவம் புரிந்தது  மார்கழி மாதம் பவுர்ணமி கூடிய திருவாதிரை நன்னாளில். இதையே நாம் மார்கழி மாத திருவாதிரை (ஆருத்ரா) தரிசனமா கொண்டாடுகிறோம். 


திருவாதிரை தினத்தில் தில்லை நடராஜர் பெருமான் தேரில் வீதி வலம் வரும் காட்சியை காண புண்ணியம் செய்திருக்க வேண்டும். விடியற்காலை(1மணி) நேரத்தில் திருவாதிரை நட்சத்திரமும் கூடி வரும் சமயத்தில் சிவபெருமானுக்கு விடியவிடிய அபிஷேக ஆராதனை நடைப்பெறும். இதனை காண கிடைக்கப் பெற்றவர்கள் பாகியவான்களே. இந்த நேரத்தில் தேவாரம் திருவாசகம் பாராயணம் செய்வது தனி சிறப்பு.  


விரதம் இருப்பவர்கள்


தரிசனம் அன்று அதிகாலை சிவபெருமானின் அபிஷேகத்தை பார்த்து விரதத்தை ஆரம்பித்து, பிற்பகலில் சிவபெருமானின் தரிசனத்தையும் பார்த்து விட்டு மாலை 6மணியலவில் வீட்டில் களி செய்து விரதத்தை முடிப்பார்கள், இது சாதாரண விரதம். கோவிலுக்கு வர முடியாதவர்கள் வீட்டிலேயே பூஜை செய்து மாலையில் விரதத்தை முடிக்க வேண்டும். 


திருவாதிரை நோன்பு என்று பெண்கள் விரதம் நோற்பார்கள் இது கணவனின் நல்ல ஆயுளுடனும் நோய் நொடி இல்லாமல்  ஆரோக்கியத்துடனும் இருக்க வேண்டி விரதம் இருப்பார்கள்..  (சில வருடங்களில் பெளர்ணமியும் திருவாதிரையும் சேர்ந்து வருவதில்லை, சிவபெருமானின் அபிஷேகமும், நோன்பும் திருவாதிரை நட்சத்திரதிர நேரத்தை கொண்டே நடத்தப்படுகிறது) 

   

பெளர்ணமி* இந்த வருடம் 2.1.26 அன்று மாலை 6.44 முதல் 3.1.26 மாலை 4.42 வரையிலும். திருவாதிரை* 2.1.26 அன்று இரவு 8.17 முதல் 3.1.26 மாலை 6.56வரையிலும் உள்ளது.


நோன்பு நோற்கும் பழக்கம் உள்ளவர்கள் பெளர்ணமி அன்று ஆரம்பித்து திருவாதிரை முடியும் நேரத்திலும், அல்லது திருவாதிரையில் ஆரம்பித்து திருவாதிரை முடியும் நேரத்திலும் நோன்பை நிறைவு செய்யலாம். நோன்பு நோற்பவர்கள் 21 வகையான (இல்லையென்றால் 7 வகையான) காய்கறிகள் சேர்ந்து சமையல் செய்து,அன்றே தயார் செய்த அதிரசம் 21 , பழங்கள் 21,வெற்றிலை பாக்கு, வாழைப்பழம், வடை, சுழியம்...அன்றைய தினம் எது செய்தாலும் 21 எண்ணிக்கையில் செய்து சாமிக்கு படையல் போடவேண்டும். (களி செய்வதும் சிறப்பு)


சிவபெருமானிடம் எங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும்.கணவனின் ஆயுளும் எனது மாங்கல்யம் பலம் கூடுவதற்கும், பிள்ளைகள் நல்லவர்களாக வளரவும், இல்லம் நிறைந்த மகிழ்ச்சியும் தந்தருள்வாயாக என்று மனமுருகி நடராஜர் பெருமானிடம் வேண்டுதல் வைத்தால் மனமிறங்கி வருவான் சிற்றம்பலநாதன். 


குறிப்பு- பெரும்பற்றப்புலியூர் என்பது சிதம்பரத்தின் மற்றொரு பெயர்.. புலிக்கால் முனிவர் (வியாக்கிரபாதர்) பெரும் பற்று கொண்டு இறைவனின் ஆனந்த தாண்டவம் கண்டதால் பெரும்பற்றப்புலியூர் ஆனது. 

 

பற்றற்ற முனிவர்களும் இங்கு பற்றாகிறார்கள் என்பதையும் குறிக்கிறது.  உலக சிற்றின்பத்தை விடுத்து ஆனந்த கூத்தனின் திருவடியில் ஒளிந்திருக்கும் பேரின்பத்தை அடைவோம். 


சிற்றின்பம் தனக்கானது, தற்காலிகமானது, நிலையற்றது, பசிக்கு உணவு, பொன்,பொருள்,புலன்களால் உணரக்கூடிய இன்பங்கள்.  பேரின்பம் நிலையானது, நிரந்தரமானது , புலன்களை அடக்கி, இறை சிந்தனை, அமைதி, இறையுணர்வு(இறை சேவை) எவ்வித எதிர்பார்ப்புமின்றி இறைவன் மீது பற்று வைத்திருப்பதால் கிடைக்கும் பேரானந்தமே பேரின்பம்.