எனக்குள் விழுந்த விதை.. Eben Miss-க்கு ஒரு கடிதம் !

Su.tha Arivalagan
Oct 09, 2026,10:53 AM IST
- த.ரஜிதா

அன்புள்ள Eben Miss-க்கு...

வணக்கம் மிஸ்.

ஐந்தாம் வகுப்பு வரை ஒரு குட்டி பள்ளியில் படித்த நான், 1992-93இல் ஆறாம் வகுப்பில் புனித மரியன்னை மெட்ரிகுலேஷன் பள்ளி, கும்மிடிப்பூண்டியில் சேர்ந்தேன். ஆங்கில வழி பள்ளி என்றாலும் நாங்கள் தமிழிலேயே பேசி வந்தோம்.

ஏழாம் வகுப்பில் தான் நீங்கள் வந்தீர்கள். புதிய English Miss. உங்கள் வாயிலிருந்து ஒரு தமிழ் வார்த்தை கூட வரவில்லை. நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்றே எங்களுக்கு புரியவில்லை.

இரண்டாம் நாள் தைரியத்தை வரவழைத்து "What is your name Miss?" என்று கேட்டேன். நீங்கள் "You call me Eben, Eben Selvakumar" என்று சொல்லிவிட்டு சென்றீர்கள். இது எப்பன் இல்ல, நமக்கு வந்த எமன்" என்று நான் பரிகசித்தேன், மன்னித்து விடுங்கள் மிஸ்.

ஒரு நாள் 'threat' என்ற வார்த்தையை நான் 'த்ரீ.-ஏட்' என்று படித்தேன். எல்லோரும் கொல்லென்று சிரித்தனர். நீங்கள் சிரிக்கவில்லை. Board-ல் needle and thread என்று எழுதி என்னை வாசிக்க சொன்னீர்கள். சரியாக வாசித்தேன். பிறகு 'threat' -ஐ வாசிக்க சொன்னீர்கள், சரியாக வாசித்தேன். அன்று தான் தெரிந்ததை கொண்டு தெரியாததை கற்பது எப்படி என்று புரிந்தது.



Christmas-ல் எங்களை English-காரர்கள் போல Drama-வில் நடிக்க வைத்தீர்கள். பரிசாக எனக்கு ஒரு பிளாஸ்டிக் கம்மல் வாங்கித் தந்தீர்கள். "What will you do if you were rich?" என்ற கட்டுரையில் "I am poor. My father and mother are very tired. If I have money, I buy house, I buy good food" எழுதிய எனக்கு நீங்கள் Good போட்டு 8 மார்க் போட்டீர்கள்.

அன்று எனக்குள் ஏதோ ஒரு விதை விழுந்தது மிஸ். அந்த விதை தான் இன்று என்னை ஆங்கில பட்டதாரி ஆசிரியராக, உங்களைப் போல நுனி நாக்கில் ஆங்கிலம் பேச, உங்களை போல புடவை கட்ட என்னை மாற்றியிருக்கிறது.

ஒரு வருடம் தாயாக எங்களை வழிநடத்திவிட்டு, கல்லூரி பேராசிரியர் வேலை கிடைத்து சென்னை சென்று விட்டீர்கள். அப்போது Phone இல்லை, Letter எழுத Address இல்லை. இப்போது Instagram, Facebook-ல் தேடுகிறேன், நீங்கள் சிக்கவே இல்லை.

எங்கோ இருந்து இதை நீங்கள் படிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

This is for you, Miss. This is Rajitha, BT Assistant English, Govt Girls Hr. Sec School, Padappai.

(த.ரஜிதா, பட்டதாரி ஆசிரியர், ஆங்கிலம், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, படப்பை)