நிசமான பொங்கல்!

Su.tha Arivalagan
Jan 15, 2026,02:01 PM IST
- வே. ஜெயந்தி

கூடி வாழ்ந்தால்
கோடி நன்மை தரும்

உறவும் நட்பும்
ஒரே வாசலில் சங்கமம்

வண்ணக் கோலங்களில்
வாழ்வு புன்னகை பூக்கும்

மாவிலை தோரணம்
மகிழ்ச்சியை அழைக்கும்

பெரிய பானையில்
பச்சரிசி பொங்க

நெய் மணத்தில்
நன்றி மனம் மலரும்



அன்னம் அளிக்கும்
உழவனின் வியர்வைக்கு

மௌன மரியாதை
செலுத்தும் நாள் இதுவே

எல்லை மறந்து
உள்ளம் ஒன்றி

“என்” என்ற சொல் கரைந்து
“நாம்” ஆகும் தருணம்

பானை பொங்கும் போது
மனமும் பொங்க வேண்டும்

பசியுள்ளவர்க்கு
பகிர்ந்தாலே திருநாள்

சூரியன் பகவானுக்கு
படைப்பது ஒரு சடங்கு அல்ல

ஒற்றுமை, உழைப்பு,
பகிர்வின் பேருண்மை

அன்பு அறம்
உள்ளங்களில் பொங்க

நாளும் நிலைக்கும்
அதுவே நிசமான பொங்கல்

(வே.ஜெயந்தி, பட்டதாரி ஆசிரியர், செங்கல்பட்டு மாவட்டம்)