நிழல் தாங்கிய அம்மா.. நினைவில் இருக்கும் அப்பா.. கற்றுக் கொடுக்கும் வாழ்க்கை!

Su.tha Arivalagan
Apr 04, 2026,03:17 PM IST

- ச. ஸ்ரீபிரியா 


எல்லோருக்கும் மனம் முழுக்க நினைவுகள் நிரம்பியிருக்கும் இல்லையா.. அனுபவங்கள் சேர சேரத்தானே மனித வாழ்க்கையும் பண்படுகிறது. அப்படிப் பண்பட்ட ஒரு ஆசிரியர்தான் நம்முடைய ச. ஸ்ரீபிரியா. பட்டுக்கோட்டையைச் சேர்ந்த ஆசிரியர் ச. ஸ்ரீபிரியா தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறார்...


நாங்கள்.. நடுத்தரக் குடும்பம், ஐந்து பெண்கள், அப்பா ஆசிரியர், அம்மா எல்லோரையும் தாங்கிய நிழல். பெண் பிள்ளைகள் படிக்க வேண்டும் என்ற தந்தையின் உறுதி, அதற்காக அம்மா தன் உடலை மறந்து வேலை செய்தது; பேரப்பிள்ளைகளை வளர்த்தது; நேரத்துக்குச் சாப்பிடாமல், தூங்காமல் தேய்ந்தது. பைல்ஸ் வலியை இருபது ஆண்டு பொறுத்தது, மருத்துவமனைக்கு பதில் நாட்டு மருந்து முயற்சி, அந்த இரவின் வேதனை, மருத்துவமனையில் இரண்டு நாட்களில் அம்மா இல்லாமல் போனது. இந்த உண்மைகள் கனமாக இருக்கின்றன.


நான் வளர்ந்தது அந்த வெற்றிடத்தில். அம்மா இல்லாமல் பெண் குழந்தை வாழ்வது எவ்வளவு சிரமம் என்பது, வார்த்தைகளை மிஞ்சிய உணர்வு. இப்போது நான் சொல்லும் செய்தி தெளிவாகிறது. பெண்கள் குடும்பத்துக்காக தன்னை அழிக்க வேண்டியதில்லை. 




நேரத்துக்குச் சாப்பாடு, தூக்கம், மகிழ்ச்சி,அவை சுயநலம் அல்ல, குடும்பத்தை நீடித்து காக்கும் அடிப்படை. என் அம்மா வாழ்ந்த பாடம், என் குரலில் மற்ற பெண்களுக்கு விழிப்புணர்வாக மாறுகிறது. அதுவே அவள் விட்டுச்சென்ற தங்கத் தடம்.


என் அப்பா நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர்—நல்லாசிரியர் விருது பெற்றவர். “ஐந்து பெண் பிள்ளைகளைப் பெற்றால் அரசனும் ஆண்டியாவான்” எனும் பழமொழியை, அவர் வாழ்க்கையால் மறுத்தார். ஐந்து மகள்களையும் ஆண் பிள்ளைகளுக்கு நிகராக—இல்லை, அதை விட உயர்வாக—கல்வியின் வழியில் நிறுத்தினார். பெண் பிள்ளைகள் படித்தால், யார் தயவும் இல்லாமல் தம்காலில் வாழ்வார்கள் என நம்பினார்; அதற்காகத் தன்னை தேய்த்தார்.


தன் காலில் செருப்புக் கூட அணியாமல் பள்ளிக்கு நடந்தார். நாங்கள் கேட்டது எல்லாம் புத்தகம், பேனா, பள்ளி, கல்லூரி என எல்லாம் கிடைத்தது. அவரது தேவைகள் எப்போதும் கடைசி வரிசையில். ஐவரையும் ஆசிரியர்களாக்கி, ஊர் போற்றும் நிலைக்கு உயர்த்தியபோதுதான் தானும் நிமிர்ந்தார்.


இன்று நாங்கள் வகுப்பறையில் நிற்கும் ஒவ்வொரு நாளும், அவர் அணிய மறந்த செருப்பின் வெற்றிடம் எங்கள் நிழலில் தெரிகிறது. பாடம் சொல்வதே அவர் வாழ்ந்த பாடம்: கல்வி தரும் சுயமரியாதைதான் பெண்ணின் நிரந்தர சொத்து. ஆனால் எங்களுக்கு அப்பா தான் சிறந்த சொத்து


திருமணத்திற்கு பின் அப்பா அம்மாவுடன் வேலை பார்க்கும் ஊருக்கு வந்தார். மூன்று சித்தப்பாக்களும் பாட்டியையும் கூட்டி வந்தார்—அவர்களுக்கு அவரே தாய் தந்தை ஆனார். சித்தப்பாக்களைப் படிக்க வைத்து, ராணுவ வீரன், வங்கி மேலாளர், ஆசிரியர் என உருவாக்கி, திருமணமும் செய்துவைத்தார்.


ராணுவ சித்தப்பா திடீரென இறந்தார்; பின்னர் அம்மாவும்—வீட்டு வேலை, பிள்ளைகள், பாட்டி பராமரிப்பில் தேய்ந்து—மறைந்தார். பெரிய குடும்பத்தில் அப்பா தனியே நின்றார்.


காலை பள்ளி, மாலை கிராமங்களில் சித்த மருத்துவம். அந்த வருமானத்தில் ஐந்து மகள்களையும் மகனையும் படிக்க வைத்து, ஆண்களைப் போல் வளர்த்து, அனைவருக்கும் திருமணம் செய்துவைத்தார். சித்தப்பாக்கள் பிரிந்த பின்பும் சுமை தணியவில்லை.

  

இன்று உடல்நிலை தளர்ந்த அப்பாவை மூத்த சகோதரி கவனிக்கிறார்; அண்ணன் வெளிநாட்டில். கஷ்டப்பட்டு உயர்ந்த என் தந்தையின் வாழ்க்கை.. தனி மனிதன், பல குடும்பங்களின் தூண்.


வாழ்க்கை எல்லோருக்கும் பட்டுக் கம்பளம் விரித்து வைத்திக் காத்திருப்பதில்லை.. பலருக்கு பாதையே கூட போட்டுத் தராமல் படுத்தி எடுக்கும்.. அதுதான் வாழ்க்கை. நாம் அதில் எப்படி நடந்து வாழ்க்கையை கடந்து செல்கிறோம் என்பதில்தான் எல்லாமே இருக்கிறது.