தமிழகத்தை உலுக்கிய.. தூத்துக்குடி பிளஸ் 2 மாணவி கொலை வழக்கில்.. தர்ம முனீஸ்வரன் குற்றவாளி!

Su.tha Arivalagan
May 25, 2026,10:36 AM IST

தூத்துக்குடி: தமிழகத்தையே உலுக்கிய தூத்துக்குடி மாவட்ட பிளஸ் 2 மாணவி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், நீதிமன்றம் இன்று தனது தீர்ப்பை வழங்கியுள்ளது. கடந்த மார்ச் மாதம் நடந்த இந்த கொடூர சம்பவத்தில், கைதான தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூர் பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய மாணவி, கடந்த மார்ச் மாதம் பிளஸ் 2 பொதுத்தேர்வுக்காக வீட்டில் படித்துக் கொண்டிருந்தார். மார்ச் 10-ஆம் தேதி இரவு இயற்கை உபாதைக்காக வீட்டின் அருகே உள்ள காட்டுப்பகுதிக்குச் சென்ற அவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. 


பதற்றமடைந்த பெற்றோர் குளத்தூர் காவல் நிலையத்தை அணுகியபோது, எல்லைப் பிரச்சனையைக் காரணம் காட்டி விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குச் செல்லுமாறு போலீசார் அலட்சியமாகப் பதிலளித்துள்ளனர். அலட்சியத்தின் உச்சமாக, சுமார் 14 மணி நேரத் தாமதத்திற்குப் பிறகே வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதற்குள், மார்ச் 11 அன்று காலை காட்டுப்பகுதியில் கழுத்து நெரிக்கப்பட்டுக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்த மாணவியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.


மக்கள் போராட்டம் மற்றும் நீதிமன்றத் தலையீடு :




காவல்துறையின் அலட்சியமே மாணவியின் மரணத்திற்குக் காரணம் எனக் கூறி, உறவினர்களும் வேடநத்தம் கிராம மக்களும் கிழக்குக் கடற்கரைச் சாலையில் 9 நாட்களாகத் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டனர். குற்றவாளியைக் கைது செய்யும் வரை உடலைப் பெற மாட்டோம் எனப் பெற்றோர் மறுத்தனர். இந்த விவகாரம் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் கவனத்திற்குச் சென்றது.


நீதிமன்ற உத்தரவின்படி, வழக்குப் பதிவு செய்யத் தாமதித்த குளத்தூர் காவல் ஆய்வாளர் மற்றும் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இடைக்கால நிவாரணமாக ரூ.10 லட்சம் வழங்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.


பிடிபட்ட கொடூரக் குற்றவாளி :


தொடர் விசாரணையின் மூலம், ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் (எ) மாவீரன் (38) என்பவரைப் போலீசார் கைது செய்தனர். விசாரணையில், இவர் ஏற்கனவே 2022-ஆம் ஆண்டில் இதேபோன்றதொரு பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர் என்பதும், கடந்த டிசம்பர் மாதம்தான் உயர் நீதிமன்றத்தில் பிணை பெற்று வெளியே வந்தவர் என்பதும் தெரியவந்தது.


இன்று தீர்ப்பு :


வழக்கின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் இந்த வழக்கின் விசாரணை விரைவு நீதிமன்றத்தில் அதிவேகமாக நடத்தப்பட்டது. அனைத்துத் தரப்பு வாதங்களும், டிஎன்ஏ (DNA) மற்றும் தடய அறிவியல் சான்றுகளும் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவடைந்த நிலையில், இன்று இந்த வழக்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு வெளியானது.

இதில் கைது செய்யப்பட்ட தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவருக்கான தண்டனை விரைவில் அறிவிக்கப்படும். பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்திற்கு உரிய நீதி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் ஒட்டுமொத்த தமிழகமும் காத்திருக்கிறது.