கலகலக்க வைக்கும் கிராமத்து விளையாட்டுகள்.. அது ஒரு பொற்காலம்!

Su.tha Arivalagan
Mar 02, 2026,10:39 AM IST

- ஜெனிட்டா ரீனா


ஓடி விளையாடு பாப்பா 

நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா 

கூடி விளையாடு பாப்பா 


ஒரு குழந்தையை வையாதே பாப்பா காலை எழுந்தவுடன் படிப்பு பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு மாலை முழுதும் விளையாட்டு என்று வழக்கப்படுத்திக் கொள்ளு பாப்பா என்ற மகாகவி பாரதியாரின் வைர வரிகளின் படி வாழ்ந்த கிராமத்துக் குழந்தைகள் என்பது 90களில் பிறந்தவர்கள்!!! 


எங்களுடைய வாழ்க்கை முறையும் இந்த பாரதியாரின் பாட்டை போலவே அமைந்தது. அது ஒரு பொற்காலம் .காலை எழுந்தவுடன் அவரவர் வீட்டில், தோட்டத்தில் இருக்கும் வேலைகளை செய்து விட்டு ,வீட்டில் இருப்பவர்கள் படித்துவிட்டு ஒன்றாக அனைவரும் பேசிக்கொண்டே நடந்து பள்ளிக்கு செல்வோம். பள்ளியில் பாடங்களை படித்து விட்டு பின்பு மீண்டும் மாலை வேளையில் வீடு திரும்புவோம்.




வீடு திரும்பியவுடன் வீட்டில் இருக்கும் தின்பண்டங்களை சாப்பிட்டு விட்டு சிறிது நேரம் படித்து விட்டு வீட்டுப் பாடத்தை  முடித்துவிடுவோம். பின் ஆலய மணி ஒலித்தவுடன் ஆலயத்திற்கு செல்வோம் .அங்கு திருப்பலி கண்டு முடித்த பின் வீட்டிற்கு வரும்போது தெருவில் அப்பொழுதெல்லாம் யாராவது ஒரு சிலர் வீட்டில் தான் தொலைக்காட்சி பெட்டி இருக்கும். அப்படி இருக்கும்போது அதை போகிற போக்கில் கதவு வழியாகவோ ஜன்னல் வழியாகவோ Black and white தொலைக்காட்சியையும், கலர் டிவியையும் ஒரு சிறு துவாரம் வழியாக பார்த்துவிட்டு பின் வீடு செல்வோம். 


வீட்டிற்கு வந்து இரவு சாப்பிட்டுவிட்டு எங்கள் தெருவில் உள்ள அனைத்து குழந்தைகளும் ஒன்றாக ஆண் பெண் பேதம் இன்றி அனைவரும் குழு விளையாட்டுகளை விளையாடுவோம்.  இரவு நேரத்தில் கண்ணாமூச்சி விளையாடுவது, தொட்டுப் பிடித்து விளையாடுவது, ஒளிந்து கொண்டு விளையாடுவது, நொண்டி விளையாடுவது, நொண்டி விளையாடட்டில் வட்டத்தை விட்டு வெளியே சென்றால் அவர்களை அவுட் செய்துவிட்டு விளையாடுவது

பம்பரம், தாயம் விளையாடுதல் ,பரமபதம் விளையாடுதல் ,பூப்பறிக்க வருகிறோம் என்று விளையாடுதல், எந்த பூவை பறிக்கிறீர்கள்? என்று கேட்டு விளையாடுதல், ஆடு புலி ஆட்டம், கிட்டிப் புலி, பந்தை தூக்கிப்போட்டு விளையாடுதல், நுங்கு வண்டி ஓட்டுதல், தென்னை மட்டையில் உலா போதல், மணலில் தென்னங்குச்சியை மறைத்து வைத்து கிச்சு கிச்சு தாம்பலான் கியா கியா தம்பலான் கண்டுபிடி தம்பலான் என்று கையை வைத்து விளையாடுதல், புதையலை தேடுதல் போன்ற விளையாட்டுக்கள் யாவும் இரவு நேரத்தில் தூக்கம் வரும் வரை 10 மணி வரை ஆடி பாடி ஓசை எழுப்பி விளையாடியது ஒரு காலம்!!! 


அட கரண்ட் போனால் போதுமே.. ஜாலியாக மொத்த குட்டீஸும் தெருவில்தான் குவிவார்கள். அப்படி ஜாலியாக விளையாடுவார்கள். கரண்ட் திரும்ப வரும்போது மொத்தமாக சேர்ந்து எல்லோரும் கத்துவோமே.. ம்ஹூம் அந்த காலம் மீண்டும் திரும்ப வரவே வராது!!! 


இன்றைய குழந்தைகள் போனில் விளையாடுகிறார்கள்; லேப்டாப்பில் விளையாடுகிறார்கள்; ஸ்மார்ட் டிவியில் விளையாடுகிறார்கள்; டேபில் விளையாடுகிறார்கள். ஆனால் வெளியில் சென்று விளையாடுவதற்கு அவர்களுக்கு விருப்பமில்லை .வீட்டிற்கு ஒரு குழந்தை, இரண்டு குழந்தை இருப்பதால் வீட்டிற்குள்ளேயே விளையாடும் படி பெற்றோர்களும் நிர்பந்திக்கிறார்கள். பாதுகாப்பு காரணங்களுக்காக அன்றி  பெற்றோர்களின் கண்காணிப்பில் சக குழந்தைகளுடன் விளையாட அனுமதித்தால் அவர்களின் உடல் உள்ள வளர்ச்சி நன்றாக இருக்கும். அதை புரிந்து கொண்டு இன்றைய பெற்றோர்களும் முடிந்த அளவு அவர்கள் குழந்தைகளுடன் பேசவும், விளையாடவும் செய்தால் நலமாக இருக்கும். 


இன்றும் நான் என் குழந்தைகளுடன் விளையாடுவேன். ஊருக்கு சென்றால் என் தம்பி, தங்கை குழந்தைகளுடன் விளையாடுவேன். அவர்களுக்கு தெரிந்த விளையாட்டு எனக்கு சொல்லித் தருவார்கள். நாங்கள் விளையாண்ட விளையாட்டுகளை அவர்களுக்கு சொல்லித் தருவேன். அதனால் எப்பொழுதும் என் வரவை எதிர்பார்த்து காத்திருப்பார்கள். அவர்களுடன் விளையாடி கீழே விழுந்த அனுபவம் எனக்கு உண்டு. அப்பொழுது அவர்களின் கரிசனத்தை பார்த்து ரசித்ததும் உண்டு. ஐயோ அத்தை கீழே விழுந்து விட்டார்கள் .பெரியம்மா கீழே விழுந்துட்டாங்க வாங்கடா ஓடிப்போய் தூக்கலாம். அப்படின்னு எல்லாம் பேசுவாங்க. இது ஒரு வகையான புதுவித அனுபவமாக இருக்கும்.


நாம் விளையாடி விளையாட்டுகள் எப்போதுமே பசுமையாக நினைவுகளில்.. ஏக்கப்பெருமூச்சுடன் நினைத்துக் கொள்ள வேண்டியதுதான்.


(டி. ஜெனிட்டா ரீனா, ஆசிரியர், வயலாநல்லூர், பூந்தமல்லி, திருவள்ளூர்)