இயக்குநர் கே.பாக்யராஜ்.. ஆயிரக்கணக்கானோரின் அஞ்சலியுடன்.. அரசு மரியாதையுடன் உடல் தகனம்

Su.tha Arivalagan
Jun 28, 2026,11:02 AM IST

சென்னை: மறைந்த பிரபல தமிழ் திரைப்பட இயக்குநரும், நடிகரும், திரைக்கதை மன்னனுமான கே. பாக்யராஜ், இறுதி ஊர்வலம் ஆயிரக்கணக்கானோர் புடை சூழ இன்று நடைபெற்றது. அவரது இறுதிச்சடங்குகள் பெசன்ட் நகர் மின்மயானத்தில் அரசு இறுதி மரியாதையுடன் நடைபெற்றது.


இயக்குநர் கே. பாக்யராஜ் நேற்று காலை, தனது வழக்கமான நடைப்பயிற்சியை முடித்துவிட்டு வீட்டிற்குத் திரும்பினார். அப்போது ஒரு தொலைபேசி அழைப்பில் பேசிக்கொண்டிருந்தபோது, அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். எனினும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தமிழ்த் திரையுலகை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது பாக்யராஜின் திடீர் மரணம்.


மறைவிற்குப் பின், அவரது குடும்பத்தினர் பாக்யராஜின் கண்களைத் தானமாக வழங்கினர். அவரது உடல் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு அஞ்சலிக்காகக் கொண்டு வரப்பட்டது. அங்கு அவரது குடும்பத்தினர், நண்பர்கள், ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர். தமிழக முதல்வர் விஜய், அரசியல் தலைவர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் நேரில் சென்று அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.




இயக்குநர், நடிகர், எழுத்தாளர், இசையமைப்பாளர் எனப் பன்முகத்தன்மையுடன் தமிழ் சினிமாவிற்குப் பங்காற்றிய பாக்யராஜின் மறைவுக்கு, முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என்று முதல்வர் விஜய் அறிவித்தார். பொதுமக்களின் அஞ்சலிக்குப் பிறகு, இன்று அவரது உடல் காலை 9 மணிக்கு மேல் பெசன்ட் நகர் மின் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. பாக்யராஜ் உடல் அடங்கிய வாகனத்தில் அவரது மனைவி பூர்ணிமா பாக்யராஜ், மகன் சாந்தனு, மகள் சரண்யா, மருமகள் கீர்த்தி உள்ளிட்டோர் அமர்ந்திருந்தனர். 


நுங்கம்பாக்கம் இல்லத்தில் இருந்து பெசன்ட் நகர் மின்மயானத்திற்கு இறுதி ஊர்வலம் தொடங்கியது.  பெசன்ட் நகர் மின் மயானத்தில் முழு அரசு மரியாதையுடன், 72 குண்டுகள் முழங்க காவல்துறையினரின் அணிவகுப்புடன் இயக்குநர் கே.பாக்யராஜுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. அதன் பிறகு உடல் தகனம் நடைபெற்றது. மகன் சாந்தனது தனது தந்தையின் சிதைக்கு தீ மூட்டினார். பிரியா விடை பெற்று காற்றில் கலந்து விட்டார் இயக்குநர் கே.பாக்யராஜ்.