பஹல்காம் தாக்குதல்.. 3 தமிழ்நாட்டவர் காயம்.. உயிரிழப்பு இல்லை.. தலைமைச் செயலாளர் முருகானந்தம்
சென்னை: காஷ்மீர் தீவிரவாதத் தாக்குதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று பேர் காயமடைந்துள்ளனர். உயிர்ப் பலி ஏதும்மில்லை என தமிழ்நாடு அரசு தலைமை செயலாளர் முருகானந்தம் அறிவித்துள்ளார்.
பஹல்காம் மாவட்டத்தில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில், இயற்கை எழிலை ரசிக்க வந்த சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் வெளிநாட்டினர் இருவர் உட்பட 28 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 12க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்தச் கொடூர சம்பவத்திற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் தாக்குதலில் தமிழ்நாட்டை சேர்ந்த மூவர் காயமடைந்து இருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது. அதில் இருவர் நலமாக இருப்பதாகவும், ஒருவர் மட்டுமே தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர பாதிக்கப்பட்டவர்களுடன் டெல்லியில் உள்ள தமிழக அரசு அதிகாரிகள் தற்போதைய நிலைமை குறித்து கேட்டறிந்தனர். மேலும் சிறப்பு அதிகாரிகள் குழு இன்று மாலை காஷ்மீர் செல்கிறது. தொடர்ந்து அங்கு தேவையான பணிகளை மேற்கொள்ள இருப்பதாக தலைமைச் செயலாளர் முருகானந்தம் கூறியுள்ளார்.
உதவி எண்கள் அறிவிப்பு
இதற்கிடையே ஜம்மு காஷ்மீர் பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை அறிய உதவி எண்களை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதன்படி, 011-24193300 என்ற உதவி எண்ணிலும்,9289516712 whatsapp எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.
பலியானோர் - காயமடைந்தோர் விவரம்
இதற்கிடையே, ஜம்மு காஷ்மீர் தாக்குதலில் 16 பேர் உயிரிழந்தவர்களின் பெயர், விவரங்கள் தெரியவந்துள்ளது. அதில், மஞ்சுநாத் (கர்நாடகா), வினய் நர்வல் (ஹரியானா), சுபம் திவேதி(உ.பி), சந்திப் (நேபாளம்), உத்வானி பிரதீப் (அமீரகம்), அதுல் ஸ்ரீகாந்த் (மராட்டியம்), சையது உசேன் (காஷ்மீர்), ஹிமத் (சூரத்), ராணுவ அதிகாரி சிவம் மோகா (கர்நாடகா) சஞ்சய், பிரசாத் குமார், மணீஸ் ரஞ்சன், பிடன் அதிகேரி, ராமச்சந்திரம், ஷாலி சந்தர், திலீப் ஜெயராமன் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த மூவர் படுகாயம் அடைந்தவர்களின் பெயர் தெரியவந்துள்ளது. மருத்துவர் பரமேஸ்வரன் ( 31) சென்னை, சந்துரு(83), பாலச்சந்திரன் (57) ஆகியோர் காயமடைந்து அனந்த்நாக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.