துள்ளுவதோ இளமை புகழ் நடிகர் அபிநய் காலமானார்.. கல்லீரல் நோயால் மறைந்த சோகம்!
சென்னை: துள்ளுவதோ இளமை படத்தில் நடித்த நடிகர் அபிநய், உடல்நலக் குறைவால் இன்று காலை 4 மணிக்கு காலமானார்.
அவருக்கு இறுதிச் சடங்கு செய்யக்கூட ஆள் இல்லாத சோகமான சூழல் நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
செல்வராகவன் இயக்கத்தில் 2002-ல் வெளியான துள்ளுவதோ இளமை திரைப்படத்தில் தனுஷின் நண்பராக அபிநய் நடித்தார். பின்னர் சிங்கார சென்னை, ஜங்ஷன் போன்ற படங்களில் ஹீரோவாகவும், என்றென்றும் புன்னகை, ஆறுமுகம், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் போன்ற படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்தார்.
பட வாய்ப்புகள் குறைந்ததால், சில மாதங்களுக்கு முன்பு கல்லீரல் தொற்று பாதிப்புக்கு ஆளாகி, சிகிச்சைக்காக ரூ.28 லட்சம் தேவைப்படுவதாக உதவி கோரி வீடியோ வெளியிட்டார். அப்போது கேபிஒய் பாலா அவருக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி அளித்தார். தனுஷும் அவரது மருத்துவ செலவுக்கு உதவி செய்திருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அபிநய் வெளியிட்ட வீடியோவில், மிகவும் மெலிந்த தோற்றத்தில், அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி காணப்பட்டார்.
கடந்த செப்டம்பர் மாதம், கேபிஒய் பாலா இயக்கிய 'காந்திக் கண்ணாடி' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு அபிநய்யை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார். மேடையில் அபிநய்யை பேசவும் வைத்தார் பாலா. அப்போது, "நீங்கள் உடல்நிலை சரியாகி வந்ததும், உங்களுடன் நான் நடிக்க வேண்டும்" என்று அபிநய்யிடம் பாலா கூறியிருந்தார்.
இந்நிலையில், இன்று காலை 4 மணியளவில் அபிநய் உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அபிநய்க்கு இறுதிச் சடங்கு செய்யக்கூட யாரும் இல்லை என்ற செய்தி மேலும் வருத்தத்தை அளிக்கிறது. அபிநய்யின் மரணம் குறித்து அறிந்த பல பிரபலங்கள் சமூக வலைத்தளங்கள் வாயிலாக தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.