திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு: ஜூலை 7 பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு விழாவினை முன்னிட்டு வரும் ஜூலை 7ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் வீடு தான் திருச்செந்தூர். இங்குள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் விழா வருகின்ற 7ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்ற வருகின்றன. இந்த கும்பாபிஷேக விழாவிற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வருவார்கள் என்பதால் அனைத்து விதமான ஏற்பாடுகளும் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது.
பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. அதனையடுத்து பிஆர்டிசி சார்பில் சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டு, அதற்காக 600 பேருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று முதல் சிறப்பு பேருந்துகள் கும்பாபிஷேகம் வரை நாள்தோறும் இயக்கப்பட உள்ளது.
இந்நிலையில், திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு ஜூலை 7ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார். அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக மற்றொரு நாள் வேலை நாளாக பின்னர் அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.