திருப்பரங்குன்றம் விவகாரம்... தமிழக அரசின் மேல் முறையீட்டு மனு தள்ளுபடி
சென்னை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரத்தில், தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய தமிழக அரசின் மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் விதித்த உத்தரவிற்கு தடை விதிக்க முடியாது என கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் கேகே ராமகிருஷ்ணன் அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் போது அரசு தரப்பில், தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய தங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும், அதற்குள் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரின் (CISF) பாதுகாப்புடன் தீபம் ஏற்ற மனுதாரருக்கு அனுமதி வழங்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது. இது சட்டவிரோதமானது என்றும், இதனால் திருப்பரங்குன்றத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் சமூக நல்லிணக்கம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அரசு தரப்பு வாதிட்டது.
மேலும், மனுதாரர் 10 பேருடன் சென்று தீபம் ஏற்ற அனுமதி பெற்றிருந்த நிலையில், அவர் ஒரு படையையே திரட்டிச் சென்றதாகவும், உயர் நீதிமன்ற வளாக பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட CISF வீரர்களுக்கு உயர் நீதிமன்ற வளாகத்தைத் தாண்டி எந்த அதிகாரமும் இல்லை என்றும், அவர்களை சட்டம் ஒழுங்கு பணிக்கு அனுமதிக்க முடியாது என்றும் அரசு தரப்பு கூறியது.
மனுதாரரை பாதுகாப்பது CISF வீரர்களின் பணியல்ல என்றும், மனுதாரருக்கு தீபம் ஏற்றுவதைத் தாண்டி மறைமுக உள்நோக்கம் இருப்பதாகவும், அவரது செயல் கலவரத்தைத் தூண்டும் வகையில் அமைந்ததாகவும், இதனால் போலீஸ் மீது தாக்குதல் நடத்தப்பட்டு காவலர்கள் காயமடைந்ததாகவும், மலைக்குச் செல்லும் வாயில்கள் சேதமடைந்ததாகவும் அரசு தரப்பு குற்றம் சாட்டியது. எனவே, மனுதாரர் ராம ரவிக்குமார் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வழக்கமாக தீபம் ஏற்றும் இடத்தில் கோயில் நிர்வாகத்தால் எவ்வித தடையும் இன்றி தீபம் ஏற்றப்பட்ட நிலையில், 100 ஆண்டுகளாக வழக்கத்தில் இல்லாத பழக்கமாக தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டிய அவசியம் என்ன என்றும் அரசு தரப்பு கேள்வி எழுப்பியது.
இதற்கு பதிலளித்த மனுதாரர் தரப்பில், தனி நீதிபதி உரிய விசாரணை நடத்தி தான் தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டுள்ளார் என்றும், ஆனால் கோயில் நிர்வாகம் மற்றும் காவல்துறை நீதிமன்ற உத்தரவை பின்பற்றவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவை பின்பற்ற பல்வேறு வாய்ப்புகள் வழங்கப்பட்டும், திடீரென 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் மனுதாரர் தரப்பு கூறியது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மனுதாரருக்கு CISF பாதுகாப்பு வழங்கப்பட்டது ஏன் என்றும், CISF வீரர்களின் அதிகாரம் என்ன என்றும், காவல்துறை பாதுகாப்பு தர அனுமதி மறுத்ததால் CISF உதவி நாடப்பட்டதா என்றும் வினவினர். மத நல்லிணக்கம் என்பது அனைவருக்குமானது என்றும், ஒருவரை எதுவும் செய்யவிடாமல் தடுப்பது மத நல்லிணக்கத்தை பேணுவது ஆகாது என்றும், அவரவருக்கு உரிய மத உரிமையை அனுபவிக்க விட வேண்டும் என்றும், இருதரப்பும் இணைந்து தங்களுக்கு உரிமையானதை செய்து கொள்ள வேண்டும் என்றும் கூறி நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைத்தனர். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ராம ரவிக்குமார் மீதுதான் அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐகோர்ட்டில் அரசு தரப்பு வாதிட்டது.
தமிழக அரசு தொடர்ந்து மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு நேற்று ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவிற்கு தடை விதிக்க முடியாது என கூறி தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளனர்.