அனைத்து எம்எல்ஏ.,வுக்கும் கார், மதுரையில் புற்றுநோய் மருத்துவமனை…முதல்வர் வெளியிட்ட 10 அறிவிப்புகள்
சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் பல்வேறு துறைகள் சார்ந்த 10 முக்கிய நலத்திட்ட அறிவிப்புகளை வெளியிட்டார். மக்கள் நல்வாழ்வு, விவசாயம், வட சென்னை வளர்ச்சி மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் தேவைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கி இந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
முக்கிய 10 அறிவிப்புகளின் தொகுப்பு:
1. முதலமைச்சர் மருத்துவக் காப்பீடு ரூ.25 லட்சமாக உயர்வு:
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் குடும்பத்திற்கு வழங்கி வந்த ஆண்டுக் காப்பீட்டுத் தொகை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக கணிசமாக உயர்த்தப்படுகிறது.
2. திருநங்கைகளுக்குக் கூடுதல் மருத்துவ சிகிச்சை:
திருநங்கைகளின் நலனைப் பாதுகாக்கும் வகையில், முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அவர்களுக்குத் தேவையான பாலின மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட கூடுதல் சிறப்பு மருத்துவ சிகிச்சைகள் இனி இலவசமாக வழங்கப்படும்.
3. பால் கொள்முதல் விலை உயர்வு:
கிராமப்புற பால்காரர்கள் மற்றும் கறவை மாடு வைத்துள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில், ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.38-ல் இருந்து ரூ.41 ஆக (ரூ.3 உயர்வு) உயர்த்தப்பட்டு வழங்கப்படும்.
4. அனைத்து MLA-க்களுக்கும் அரசு சார்பில் கார்:
இதுவரை அமைச்சர்களுக்கு மட்டுமே அரசு சார்பில் வாகனங்கள் வழங்கப்பட்டு வந்த நிலையில், இனி சட்டப்பேரவையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் (MLA) அரசு சார்பில் கார்கள் வழங்கப்படும்.
5. MLA-க்களுக்கான படிகள் உயர்வு:
சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிப் பணிகளைச் சிறப்பாக மேற்கொள்வதற்காக, ஒவ்வொரு MLA-வுக்கும் மாதம் தோறும் வாகனப்படி ரூ.75,000 மற்றும் உதவியாளர் படி ரூ.25,000 என மொத்தம் ரூ.1,00,000 வழங்கிட அரசாணை வெளியிடப்படும்.
6. வட சென்னையில் ரூ.300 கோடியில் பன்னோக்கு மருத்துவமனை:
வட சென்னை மக்களுக்கு உலகத் தரத்திலான உயர்தர மருத்துவச் சேவை எளிதில் கிடைக்கும் வகையில், பெரம்பூரில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் 400 படுக்கைகள் கொண்ட நவீன பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும்.
7. மதுரையில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம்:
மதுரையில் ராஜாஜி அரசு மருத்துவமனையின் கீழ் 8 அடுக்குகள் கொண்ட புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் சிகிச்சை மையம் அரசு சார்பில் அமைக்கப்படும்.
8. மூத்த குடிமக்களுக்கு சிறப்பு மருத்துவ உதவி:
மாநிலத்தில் உள்ள மூத்த குடிமக்களின் ஆரோக்கியத்தைப் பேண, அவர்களுக்குத் தேவையான ஆம்புலன்ஸ் மற்றும் சிறப்புப் பராமரிப்புச் சிகிச்சைகளை வழங்கும் புதிய முதியோர் நல்வாழ்வுத் திட்டம் தொடங்கப்படும்.
9. அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு நீட்டிப்பு:
மூன்றாவது குழந்தை பெற்றெடுக்கும் பெண் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் மகப்பேறு விடுப்பு காலம் 12 வாரங்களில் இருந்து 365 நாட்களாக (1 ஆண்டு) உயர்த்தப்படுகிறது.
10. கிராமப்புற உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்:
தமிழக கிராமப்புறங்களில் சாலைகள், குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்காகச் சிறப்பு நிதியுதவி திட்டங்கள் தீவிரப்படுத்தப்படும்.
சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்புகள், எளிய மக்கள், விவசாயிகள் மற்றும் வட சென்னை மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் அமைந்துள்ளது எனப் பல தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.