தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
சென்னை : தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் இன்று (07-09-2026), அவையின் தொடக்கத்திலேயே எதிர்க்கட்சியான திமுக உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். தங்களின் கவன ஈர்ப்பு தீர்மானங்கள் குறித்து உடனடியாகப் பேச அனுமதி அளிக்க வேண்டும் எனக் கோரி முழக்கமிட்ட திமுக எம்.எல்.ஏ-க்கள், “தலைநகரமா? கொலைநகரமா?” என்ற வாசகங்கள் அடங்கிய முழக்கங்களை எழுப்பியதால் அவையில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.
திமுக.,வினரின் கடும் அமளி, கூச்சல் குழுப்பத்திற்கு இடையே முதல்வர் விஜய், காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்திற்கு பதிலளித்தார். முதல்வர் விஜய்யின் ஆவேச பேச்சால் சட்டசபையில் அனல் பறந்தது.
எதிர்க்கட்சியினரின் விமர்சனங்களுக்கு முதல்வர் விஜய்யின் காட்டமான பதிலடி:
சட்ட ஒழுங்கு விமர்சனம்: "சட்ட ஒழுங்கு குறித்துப் பேசுவதற்கு முன்பாக, உங்கள் ஆட்சியில் என்ன நடந்தது என்பதை கண்ணாடியில் பார்த்துக்கொள்ள வேண்டும். 'எலும்பை உடைப்பாராம்... இதெல்லாம் என்ன பேச்சு?' Ortho Surgeon போல சட்டமன்றத்துக்குள் எலும்பை உடைப்பாராம்; இன்னொருவர் சொல்கிறார் மக்களுக்கு நல்ல சாவு வராது என்று! இதையெல்லாம் பேசிப் பேசித்தான் எதிர்க்கட்சியில் அமர்ந்துள்ளனர்" என்று ஆவேசமாகச் சாடினார்.
பார்ட்டி ஃபண்ட் குற்றச்சாட்டு: "கடந்த திமுக ஆட்சியில் 'பார்ட்டி ஃபண்ட்' என்ற பெயரில் 7.5% முதல் 10% வரை லஞ்சம் வாங்கியதாக அமலாக்கத் துறை கூறியுள்ளது. இதில் ஸ்டாலின், உதயநிதி ஆகிய முக்கிய நபர்கள் ஈடுபட்டுள்ளதாக அமலாக்கத் துறை சுட்டிக்காட்டியுள்ளது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன" எனக் கத்திப் பேசினார்.
குடும்ப அரசியல் மற்றும் மிசா வரலாறு: "திமுக எதைச் செய்தாலும் குடும்பமாகச் சேர்ந்து தான் செய்வார்கள் போல. மிசாவைப் பார்த்தவர்கள், மிசாவைப் பார்த்தவர்கள் என்று சொல்கிறார்கள்; ஆனால் மிசா பற்றிய உண்மை வரலாறு எல்லோருக்கும் நன்றாகவே தெரியும்" என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
கண்ணியமான அரசியலுக்கு வேண்டுகோள்: "தமிழ்நாட்டில் ஆபாச நதியா, வன்ம நதியா ஓடுகிறது? அரசியலுக்காகத் தனிப்பட்ட முறையில் மக்களையோ, பெண்களையோ தரம் தாழ்த்திப் பேச வேண்டாம். நம் வீட்டில் உள்ள தாய், அக்கா, தங்கச்சியாக நினைத்து அவர்களை மனதில் வைத்துப் பேச வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.
வரலாற்றுச் சான்றுகளும் நம்பிக்கை உரையும்:
மக்களின் ஆதரவு எப்போதும் உண்மைப் பக்கமே இருக்கும் என்பதைச் சுட்டிக்காட்டிய முதல்வர் விஜய், "1967-ல் அண்ணா, 1977-ல் எம்.ஜி.ஆர், 1983-ல் என்.டி.ஆர், 2026-ல் விஜய்... இறைவனும், இயற்கையும், மக்களும் எப்போதும் நம்ம பக்கம்தான் இருப்பார்கள். மக்களுக்கு முன்னாடி இவர்கள் என்ன கோல்மால் வேலை செய்தாலும் எதுவும் எடுபடாது. இந்த அன்பிற்கு முன்னால் இவர்கள் தோற்பது உறுதி.. உறுதி.. உறுதி.." என்று உறுதியாகத் தெரிவித்தார்.
முதல்வர் விஜய் ஆவேசமாகப் பேசிப் பதிலடி கொடுத்துக் கொண்டிருந்தபோது, கே.என்.நேரு உள்ளிட்ட மூத்த திமுக உறுப்பினர்கள் தங்களுக்குள் ஆலோசனை செய்து முழக்கமிட்டதால் சட்டசபையில் பெரும் பரபரப்பு நிலவியது. முதல்வர் பதிலுரையின் போது தொடர்ந்து திமுக உறுப்பினர்கள் எழுந்து நின்று அமளி செய்ததால், முதல்வர் உரைக்கு பதிலளித்து பேச எதிர்க்கட்சிகள் அனுமதி கேட்டதற்கு, அனுமதி அளிக்க சபாநாயகர் மறுப்பு தெரிவித்ததால், சபாநாயகர் இருக்கை முன் அமர்ந்து திமுக.,வினர் தர்ணா செய்தனர். இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.