தவெக கொண்டு வந்த தொகுதி மறுவரையறை தனி தீர்மானம்: ஆதரவு யார்? எதிர்ப்பு யார்?

Su.tha Arivalagan
Aug 12, 2026,12:53 PM IST

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் தொகுதி மறுவரையறை (Delimitation) தொடர்பாக முதலமைச்சர் விஜய் முன்மொழிந்த தனி தீர்மானம் சட்டமன்றத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தீர்மானத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களது ஆதரவையும், எதிர்ப்பையும், திருத்தக் கோரிக்கைகளையும் பதிவு செய்துள்ளன.


ஆதரவு தெரிவித்த கட்சிகள் / தலைவர்கள்:

திமுக (எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி):


முதலமைச்சர் விஜய் கொண்டுவந்த தீர்மானத்தை வரவேற்பதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். "தொகுதி மறுவரையறையால் பாதிப்பு ஏற்படும் என்று இந்தியாவிற்கே முதன்முதலில் சுட்டிக்காட்டியவர் மு.க.ஸ்டாலின் தான். தொகுதி மறுவரையறையால் தமிழ்நாடு எக்காரணம் கொண்டும் பாதிக்கப்படக்கூடாது என்பதே திமுகவின் உறுதியான நிலைப்பாடு" என அவர் பேசினார்.


எதிர்ப்பு தெரிவித்த மற்றும் நிராகரித்த கட்சிகள்:

அதிமுக (பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி):




அரசியல் காரணங்களுக்காக தமிழக அரசு (தவெக அரசு) கொண்டுவந்துள்ள தொகுதி மறுவரையறை தொடர்பான தீர்மானத்தை அதிமுக நிராகரிப்பதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதே வேளையில், மகளிருக்கான இடஒதுக்கீடு தொடர்பான தீர்மானத்தை மட்டும் அதிமுக ஆதரிப்பதாக தெளிவுபடுத்தினார்."நிர்வாக வசதிக்காக மக்களவை மற்றும் சட்டமன்றத் தொகுதிகளை மறுவரையறை செய்வதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், தமிழகத்திற்கான பிரதிநிதித்துவம் 7.18% குறையாமல் மத்திய அரசு தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும்" என வலியுறுத்தினார்.


பாட்டாளி மக்கள் கட்சி:


இத்தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும், பாமக இத்தீர்மானத்தை ஆதரிக்கவில்லை என்றும் பாமக எம்.எல்.ஏ கணேஷ் குமார் தெரிவித்தார்."ஏற்கனவே இது தொடர்பாக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு விட்டதால், தற்போது மீண்டும் தீர்மானம் கொண்டு வருவது தமிழ்நாட்டில் இருவேறு நிலைப்பாடு இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்திவிடும்" என்று சுட்டிக்காட்டினார்.


திருத்தம் மற்றும் கவலை தெரிவித்த கட்சிகள்:

தேமுதிக (பொதுச்செயலாளர் பிரேமலதா):


தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான சட்ட முன்வடிவை மத்திய அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாக கொண்டு வரவில்லை என்று குறிப்பிட்ட பிரேமலதா, மக்கள்தொகையைக் காரணம் காட்டி தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை குறைய வாய்ப்பிருப்பதாக கவலை தெரிவித்தார். அதே சமயம் மகளிருக்கு இடஒதுக்கீடு அதிகரிப்பதை வரவேற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


மனிதநேய ஜனநாயக கட்சி :


மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீம் அன்சாரி பேசுகையில் தீர்மானத்தில் திருத்தம் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். "பெண்களுக்கான 33% இடஒதுக்கீடு தொடர்பான தீர்மானத்தில், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். அதுவே உண்மையான சமூகநீதியாக இருக்க முடியும்" என வலியுறுத்தினார்.