ஸ்டாலின் 2...இபிஎஸ் 5...போட்டி போட்டு தேர்தல் வாக்குறுதிகள் அள்ளி வீசும் திமுக-அதிமுக
சென்னை : தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழக அரசியல் களம் பரபரக்க துவங்கி உள்ளது. பிரதான திராவிடக் கட்சிகளான அதிமுக.,வும் திமுக.,வும் போட்டி போட்டிக் கொண்டு தேர்தல் வேலைகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
பொங்கலுக்கு முன்பு வரை தமிழக சட்டசபை தேர்தலில் யார் யாருடன் கூட்டணி வைக்க போகிறார்கள்? எந்த கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை சீட்? வேட்பாளர்களாக யார் நிற்பார்கள்? என்பது தான் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. ஆனால் பொங்கலுக்கு பிறகு நிலைமையே மொத்தமாக மாறிப் போயிடுச்சு. "தை பிறந்தால் வழி பிறக்கும்" என அனைத்து கட்சிகளும் தங்களின் கூட்டணி முடிவுகள் குறித்து அறிவிப்பதற்காக சொல்லி வந்தார்கள். ஆனால் பிரதான அரசியல் கட்சிகளான அதிமுக, திமுக.,வும் உச்ச கட்டமாக தேர்தல் வாக்குறுதிகளை அறிவிக்கும் நிலைக்கே சென்று விட்டார்கள்.
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகளை துவக்கி வைக்க சென்ற முதல்வர் ஸ்டாலின், சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை, அதிக காளைகளை அடக்கும் வீரர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கால்நடை பராமரிப்பு துறையில் பணி வழங்கப்படும் என இரண்டு வாக்குறுதிகளை வெளியிட்டார். அதே சமயத்தில் சென்னையில் முன்னாள் முதல்வரும் அதிமுக நிறுவனருமான எம்ஜிஆரின் 109வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி 5 முக்கிய அறிவிப்புக்களை வெளியிட்டார். ஆண்களுக்கும் இலவச பஸ் பயணம், பெண்களுக்கு மாதம் ரூ.2000 உதவித்தொகை, மகளிருக்கு இருசக்கர வாகனம் வாங்க ரூ.25,000 அரசு உதவி, வீடு இல்லாதவர்களுக்கு அரசே நிலம் வாங்கி கான்கிரீட் வீடுகள் கட்டி தரப்படும், 100 நாட்கள் வேலைத் திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும் என அறிவித்தார்.
சாமானிய மக்களின் ஓட்டுக்களை குறிவைத்து அதிமுக.,வும் திமுக.,வும் போட்டி போட்டுக் கொண்டு அறிவிப்புக்களை வெளியிடத் துவங்கி விட்டன. இந்த இரு கட்சிகளின் அறிவிப்புக்களில் மக்கள் மனதை எது கவரப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அது மட்டுமல்ல, இப்போதே இத்தனை அறிவிப்புக்களை வெளியிடுகிறார்களே தேர்தல் அறிக்கையில் இன்னும் என்னென்ன இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.
இதுவரை கட்சிகள் நடத்தி வந்த கூட்டணி பேச்சுக்கள் அரசியல் களத்தை மட்டும் தான் பரபரப்பாக்கியது. ஆனால் தற்போது அதிமுக, திமுக கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட துவங்கி விட்டதால் ஒட்டுமொத்த தமிழக மக்களின் கவனமும் அரசியல் களத்தை நோக்கி திரும்ப துவங்கி உள்ளது. இதில் மக்களின் நம்பிக்கையை பெற போவது யார் என்பது போக போகத் தான் தெரியும்.