கோவை மாணவர் கொலை வழக்கு: உதயநிதியின் குற்றச்சாட்டு அமைச்சர் கொடுத்த பதிலடி

Su.tha Arivalagan
Aug 17, 2026,11:16 AM IST

சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் கோவை கல்லூரி மாணவர் அமுதன் கொலை செய்யப்பட்டது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவரும், அரசுத் தரப்பு அமைச்சரும் தெரிவித்த கருத்துக்கள் பேரவையில் பெரும் காரசாரமான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.


உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு :


சட்டப்பேரவையில் கோவை கல்லூரி மாணவர் அமுதன் கொலை சம்பவம் குறித்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அரசின் அலட்சியப் போக்கே இந்தக் கொலைக்கு முதன்மையான காரணம் என்று கடுமையாகச் சாடினார். கோவையில் கல்லூரி மாணவர் அமுதனை 20 பேர் கொண்ட கும்பல் சேர்ந்து அடித்துக் கொலை செய்துள்ளது. இது வெறும் மாணவர் குழுக்களுக்கிடையேயான "கோஷ்டி மோதல்" அல்ல; திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை.


காவல்துறையின் பொறுப்பற்ற போக்கு: போதைப்பொருள் கும்பல் தொடர்பாக அமுதன் காவல்துறைக்குத் தகவல் கொடுத்துள்ளார். ஆனால், அந்த ரகசியத் தகவலைப் போதை கும்பலிடமே காவல்துறை கசியவிட்டதால் தான் இந்தக் கொலை நடந்துள்ளது. குற்றவாளிகளுக்குத் தகவல் தெரிவித்த காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




சட்டம் - ஒழுங்கு சீர்கேடு: அரசு 100 நாள் சாதனை எனப் பெருமை பேசும் வேளையில், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைந்திருப்பதே இதற்கு சாட்சியாக உள்ளது. போதை கலாச்சாரத்தை எதிர்த்து நிற்கும் ஒவ்வொருவருக்கும் இது ஒரு எச்சரிக்கைச் சம்பவமாக மாறியுள்ளது என உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.


அமைச்சர் நிர்மல் குமார் மறுப்பும் விளக்கமும் :


எதிர்க்கட்சித் தலைவரின் குற்றச்சாட்டுகளுக்கு உடனடியாக மறுப்பு தெரிவித்துச் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் சட்டப்பேரவையில் விளக்கம் அளித்தார். அவர் பேசுகையில், கோவை மாணவர் அமுதன் கொலை வழக்குக்கும் போதைப்பொருள் விவகாரத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. மாணவர் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட தனிப்பட்ட முன்விரோதத்தின் காரணமாகவே இந்த மோதலும் கொலையும் நிகழ்ந்துள்ளது.


வழக்கை திசை திருப்ப வேண்டாம்: எதிர்க்கட்சிகள் கூறுவது போல் போதைப்பொருள் புகார் தொடர்பான எந்தச் சம்பவமும் நடைபெறவில்லை. உண்மை நிலவரத்திற்கு மாறாக இந்த வழக்கை அரசியல் காரணங்களுக்காகத் திசை திருப்ப வேண்டாம் என அமைச்சர் கேட்டுக் கொண்டார்.