திருமண நிகழ்வுகள், வேலைகள் இருப்பதால் செல்லவில்லை... டெல்லி செல்லாதது குறித்து அண்ணாமலை விளக்கம்!

Meenakshi
Sep 03, 2025,02:01 PM IST

சென்னை: அதிகமான திருமண நிகழ்வுகள்,வேலைகள் இருப்பதால் இன்று டெல்லியில் அமித்ஷா தலைமையில் நடக்கும் பாஜக உயர்நிலைக்குழு கூட்டத்திற்கு செல்லவில்லை என்று முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.


சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாத காலங்களே இருக்கும் நிலையில், பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்துள்ளது. பாஜக தரப்பில் பூத் கமிட்டி வலிமையாக்கப்பட்ட நிலையில், எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்கி மக்களை சந்தித்து வருகிறார். வரும் 2026 தேர்தலில் எப்படியாவது அதிமுக-பாஜக வெற்றி பெற வேண்டும் என்று தேர்தல் பணிகளில் இரு கட்சிகளும் கவனம் செழுத்தி வருகின்றன.


இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர்களை டெல்லி மேலிடம் நேற்று அவசரமாக அழைத்தது. மத்திய அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்க எல்.முருகன், நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, தமிழிசை உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.




இந்த கூட்டத்தில், நயினார் நாகேந்திரன், எல். முருகன், பொன். ராதாகிருஷ்ணன், தமிழிசை செளந்தரராஜன், வானதி சீனிவாசன், கேசவ விநாயகம் உள்ளிட்டோரும் டெல்லிக்கு சென்றனர். டெல்லியில் பாஜக உயர்நிலைக் குழு கூட்டம் நடந்து வரும் நிலையில், அண்ணாமலை இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்ற தகவலையடுத்து, இதுகுறித்து அண்ணாமலை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்கு முறையான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதிக திருமண நிகழ்வுகள் மற்றும் சொந்த வேலைகள் இருப்பதால் டெல்லிக்கு செல்ல இயலவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்ணாமலைக்கும் நயினார் நாகேந்திரனுக்கும் இடையே உட்கட்சி பூசல் இருப்பதனால் தான் இந்த கூட்டத்திற்கு அண்ணாமலை வேண்டுமென்றே போகாமல் தவிர்த்துள்ளதாக கட்சி வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டு வருகிறது.