அமித்ஷாவா அவதூறு ஷாவா?...கடுமையாக விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்

Su.tha Arivalagan
Jan 07, 2026,05:15 PM IST

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை கடுமையாகச் சாடிப் பேசினார்.


தமிழகத்திற்கு வருகை தந்த அமித் ஷா, இங்கு இந்துக்களுக்கு எதிரான ஆட்சி நடப்பதாகக் கூறியதற்கு முதல்வர் கண்டனம் தெரிவித்தார். "அவர் அமித் ஷாவா அல்லது அவதூறு ஷாவா?" எனக் கேள்வி எழுப்பிய முதல்வர், ஆன்மீகப் பெரியவர்கள் விரும்பும் ஆட்சியைத் தான் நடத்தி வருவதாகவும், இந்துக்களின் உரிமை பறிக்கப்படுவதாகக் கூறுவதில் துளியும் உண்மையில்லை என்றும் கூறினார். வட மாநிலங்களைப் போல இங்கும் வெறுப்புப் பிரச்சாரம் செய்ய நினைக்கிறார்கள் என அவர் குற்றம் சாட்டினார்.


2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் குறித்து அமித் ஷா பேசியதைச் சுட்டிக்காட்டிய முதல்வர், "தமிழகத்தில் மோடி ஆட்சி அமைய வேண்டுமா?" என்று அமித் ஷா மக்களிடம் கேட்டிருப்பது ஒரு முக்கிய ஒப்புதல் வாக்குமூலம் என்றார். அதிமுகவிற்கு வாக்களித்தால் அது மறைமுகமாக பாஜகவிற்கே செல்லும் என்பதை அமித் ஷாவே உறுதிப்படுத்தியுள்ளார் என்றும், இதற்காக அவருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கிண்டலாகக் குறிப்பிட்டார்.




அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த முதல்வர், 2019-ல் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்த போது மாணவர்களுக்கான விலையில்லா லேப்டாப் வழங்கும் திட்டத்தை நிறுத்திவிட்டதாகக் கூறினார். பழனிசாமி ஆட்சியில் சுமார் 55 ஆயிரம் லேப்டாப்கள் வீணடிக்கப்பட்டதாக சி.ஏ.ஜி (CAG) அறிக்கை கூறியுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், மக்கள் நலத் திட்டங்களைக் குறை சொல்ல முடியாதவர்கள் இல்லாதப் பிரச்சினையைத் தூண்டி விடுவதாகத் தெரிவித்தார்.


தமிழக அரசியலில் 2026 தேர்தலை முன்னிறுத்தி ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையிலான வார்த்தைப் போர் தற்போது தீவிரமடைந்துள்ளது இந்த உரையின் மூலம் தெளிவாகிறது.