தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் இன்று துவக்கம்... 4 நாட்கள் மட்டுமே அவகாசம்.. 4 நாட்கள் லீவு வருகிறது!
சென்னை : தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை 10 மணிக்கு துவங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கு 4 நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளதால் வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் நாளே முக்கியத் தலைவர்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்கின்றனர்.
தமிழக சட்டசபை தேர்தல் 2026க்கான ஓட்டுப்பதிவு ஏப்ரல் 23ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 30ம் தேதியான இன்று துவங்கி, ஏப்ரல் 6 ம் தேதி வரை நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது. அரசு விடுமுறை நாட்கள் தவிர மற்ற நாட்களில் காலை 10 மணிக்கு துவங்கி, பகல் 3 மணி வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம் என ஏற்கனவே தேர்தல் கமிஷன் அறிவித்து விட்டது. ஆனால் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு உரிய நாட்கள் என்று பார்த்தால் இதில் 4 நாட்கள் மட்டும் தான்.
காரணம், மார்ச் 31 அன்று மகாவீர் ஜெயந்தி மற்றும் ஏப்ரல் 03ம் தேதி புனித வெள்ளியை முன்னிட்டு விடுமுறை. ஏப்ரல் 05ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் விடுமுறை. இதனால் இடையில் உள்ள 4 நாட்களில்தா3ன் வேட்பாளர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய முடியும். இதனால் முக்கிய வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்ய வரும் போது அவர்களுக்கு நேரம் ஒதுக்குவதிலும், மற்ற கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள், சுயேட்சைகள் அதிகமாக மனுத்தாக்கல் செய்ய வரும் போது அந்த சமயங்களில் நெருக்கடியான நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.
வேட்புமனு தாக்கல் செய்ய 4 நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ள காரணத்தால் தான் அனைத்து கட்சிகளும் வேட்புமனு தாக்கல் துவங்குவதற்கு முன்பே வேட்பாளர் பட்டியல், தேர்தல் அறிக்கை ஆகியவற்றை வெளியிட்டு முடித்து விட்டன. தற்போதைய நிலவரப்படி தேசியக் கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் தவிர மற்ற அனைத்து கட்சிகளும் தாங்கள் போட்டியிட உள்ள தொகுதிகள், எந்தெந்த தொகுதிகளில் யார் யாரெல்லாம் போட்டியிட போகிறார்கள் என்ற விபரங்களை வெளியிட்டு விட்டன. இன்று அல்லது நாளைக்குள் பாஜக மற்றும் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏப்ரல் 06ம் தேதி பகல் 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் நிறைவடையும். ஏப்ரல் 07ம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெறும். ஏப்ரல் 09ம் தேதி வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாளாகும். இதனால் அன்று மாலை 5 மணிக்கு பிறகு தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்களின் பட்டியலை தேர்தல் கமிஷன் வெளியிடும். ஏப்ரல் 23ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளதால் ஏப்ரல் 21ம் தேதி மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவு செய்யப்படும்.