டாக்டர் அன்புமணியின்.. பாமக போட்டியிட போகும் 18 தொகுதிகள் இதுவா? .. தீயாய் பரவும் தகவல்
சென்னை : தமிழக சட்டசபை தேர்தலுக்கான என்டிஏ கூட்டணியில் அன்புமணி தலைமையிலான பாமக.,விற்கு 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டு, ஒப்பந்தமும் கையெழுத்தானது. இந்நிலையில் பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை என்பது பற்றிய உத்தேச பட்டியல் ஒன்று மீடியாக்களில் மிக வேகமாக பரவி வருகிறது.
பாட்டாளி மக்கள் கட்சிக்கு யாருக்கு என்பதில் அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே பல்வேறு பிரச்சனைகள் இருந்து வருகிறது. இது தொடர்பான சட்ட போராட்டமும் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்நிலையில் பாமக இரு அணிகளாக பிரிந்து இந்த முறை தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறது. இதில் அன்புமணி, அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் இணைந்துள்ளார். ராமதாஸ் தலைமையிலான பாமக, சசிகலாவுடன் புதிய கூட்டணி அமைத்து களம் காண உள்ளது.
கடந்த முறை தேர்தலில் பாமக ஒன்றுபட்டிருந்த நிலையில் அக்கட்சிக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, போட்டியிட்டது. ஆனால் இந்த முறை பாமக இரண்டாக பிளவுபட்டிருப்பதால் அன்புமணி தலைமையிலான பாமக.,விற்கு 18 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இது தவிர ஒரு ராஜ்யசபா சீட்டும் பாமக.,விற்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் அன்புமணி வேட்புமனு தாக்கல் செய்து, போட்டியின்றி ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். விரைவில் அவர் முறைப்படி பதவியேற்றுக் கொள்ள உள்ளார்.
இந்நிலையில் தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதால் பாமக.,விற்கு ஒதுக்கப்பட்டுள்ள 18 தொகுதிகள் எவை என்பது குறித்த உத்தேச பட்டியல் வெளியாகி உள்ளது. இந்த 18 தொகுதிகளுமே வன்னியர் சமூக மக்கள் அதிகம் வாழும் தொகுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் தர்மபுரி தொகுதியில் இந்த முறையும் அன்புமணியின் மனைவி செளமியா அன்புமணி போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
பாமக போட்டியிடும் தொகுதிகளின் உத்தேச பட்டியல் :
1. தர்மபுரி
2. பென்னகரம்
3. ஓமலூர்
4. திண்டிவனம் அல்லது அரூர்
5. கும்மிப்பூண்டி
6. குன்னம்
7. நெய்வேலி
8. பாப்பிரெட்டிப்பட்டி
9. பாலக்கோடு
10. திருத்தணி
11. செஞ்சி
12. மயிலம்
13. ஜெயங்கொண்டம்
14. செய்யாறு
15. விழுப்புரம்
16. ஆற்காடு
17. அந்தியூர்
18. விக்கிரவாண்டி