தமிழகத்தில் ஆவில் பால் பச்சை பாக்கெட் விலை உயர்வா? ஆவின் நிர்வாகம் விளக்கம்

Su.tha Arivalagan
Jan 07, 2026,03:46 PM IST

சென்னை : தமிழகத்தில் ஆவின் பச்சை நிற பால் பாதக்கெட்டின் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்த்தப்பட்டதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவலுக்கு தமிழக அரசு மற்றும் ஆவின் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளது.


கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில், திமுக அரசு ஆட்சிக்கு வரும் போது பால் விலையைக் குறைப்பதாகக் கூறி விட்டு, தற்போது ஆவின் பச்சை நிற பால் பாக்கெட்டின் விலையை லிட்டருக்கு ரூ.6 உயர்த்திவிட்டதாகத் தகவல்கள் பரவின. இது பொதுமக்கள் மற்றும் இல்லத்தரசிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் (Fact Check Unit) மற்றும் ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள விளக்கத்தில் கூறியிருப்பதாவது:




தமிழ்நாடு முழுவதும் ஆவின் பால் விலையிலோ அல்லது அதன் வகைகளிலோ எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. பழைய விலையிலேயே பால் விநியோகம் தடையின்றி நடைபெற்று வருகிறது.


ஆவின் நிறுவனம் சமீபத்தில் 'கிரீன் மேஜிக் பிளஸ்' (Green Magic Plus) என்ற புதிய வகை பால் பாக்கெட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் வைட்டமின் ஏ மற்றும் டி சத்துக்கள் கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், இதன் கொழுப்புச் சத்து 4.5% மற்றும் இதரச் சத்துக்கள் (S.N.F) 9% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே இந்த குறிப்பிட்ட புதிய வகை பாக்கெட் மட்டும் கூடுதல் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.


வழக்கமான பச்சை நிற 'கிரீன் மேஜிக்' (Green Magic - 4.5% Fat, 8.5% SNF) பால் பாக்கெட்டுகள் மாற்றமின்றி பழைய விலையிலேயே சந்தையில் கிடைக்கின்றன. அதன் உற்பத்தியும் நிறுத்தப்படவில்லை என ஆவின் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.