தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சி விலையை அரசே நிர்ணயிக்க போகிறதா?.. கால்நடைத்துறை தரும் விளக்கம்!

Meenakshi
Jun 26, 2025,06:51 PM IST
சென்னை: தமிழ்நாடு முழுவதும் இனி ஒரே விலையில் ஆட்டிறைச்சி விற்கப்படும் என்று வெளியான தகவலை தமிழ்நாடு அரசின் கால்நடைத்துறை  செயலாளர் சுப்பையன் மறுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் ஆடு, மாடு, கோழி விலை என்பது ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனிதனியாகவே இருந்து வந்தது. இந்த விலை குறிப்பிட்ட விழா நாட்களில் அதிகவும், சில நாட்களில் நார்மலாகவும் இருந்து வருகிறது. 

குறிப்பாக சில மாவட்டங்களில் ஒவ்வொரு ஏரியாவிற்கு ஏற்றவாறு விலை விற்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசு ஆட்டிறைச்சியின் விலையை தமிழ்நாடு முழுவதும் ஒரே மாதிரியாக நிர்ணயிக்கப் போவதாக செய்திகள் வெளியாகின.





அதன்படி, தமிழ்நாடு முழுவதும் இனி ஒரே விலையில் ஆட்டிறைச்சி விற்கப்படும் என்று தகவல்கள் தெரிவித்தன. இதை கால்நடைத்துறை பராமரிப்பு செயலாளர் டாக்டர் என்.சுப்பையன் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஆட்டிறைச்சி விலையை ஒரு போதும் அரசு நிர்ணயம் செய்யாது. தினமும் முட்டை விலை, பிராய்லர் கோழி விலை, காய்கறி விலை அறிவிக்கப்படுவது போல ஒரு தகவல் பலகை உருவாக்கப்பட்டு ஆட்டிறைச்சி விலையும் அதில் இடம் பெறும். விலையை அரசு நிர்ணயம் செய்யாது. மாவட்ட அளவில் ஆட்டிறைச்சி விலையானது இந்த தகவல் பலகை போர்ட்டலில் இடம் பெறும்.

தினமும் விற்பனை விலையை அறிவிக்கும் வகையில் தமிழ்நாடு வேளாண் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் இந்த புதிய இணையதளம் உருவாக்கப்படும். ஆடு மற்றும் கோழி உயிருடன் என்ன விலை, இறைச்சி என்ன விலை? எனவும் தினசரி அப்டேட்டில் சொல்ல ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் திருவிழாக்கள் மற்றும் பண்டிகைக் காலங்களில் அதிக விலைக்கு ஆட்டிறைச்சி மற்றும் கால்நடைகள் விற்கப்படுவது தடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.