மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்?.. அமைச்சர்கள் - அரசு ஊழியர் சங்கங்கள் இன்று பேச்சுவார்த்தை
சென்னை: தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்டகால கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) மீண்டும் அமல்படுத்துவது தொடர்பாக, போராட்டக் கூட்டமைப்புகளுடன் அமைச்சர்கள் குழு இன்று (ஜனவரி 2, 2026) முக்கிய ஆலோசனை நடத்துகிறது.
தற்போது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இதற்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்து பழைய ஓய்வூதியத் திட்டத்தையே மீண்டும் கொண்டு வர வலியுறுத்தி வருகின்றனர். கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
2021 சட்டமன்றத் தேர்தலின் போது திமுக தனது தேர்தல் அறிக்கையில், அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என வாக்குறுதி அளித்திருந்தது. ஆட்சிக்கு வந்து ஐந்து ஆண்டுகள் நெருங்கும் நிலையிலும் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாததால், ஜாக்டோ-ஜியோ (JACTTO-GEO) மற்றும் போட்டோ-ஜியோ (FOTA-GEO) ஆகிய கூட்டமைப்புகள் கடும் அதிருப்தியில் உள்ளன.
வரும் ஜனவரி 6-ம் தேதி முதல் காலவரையறையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தப் போவதாக இக்கூட்டமைப்புகள் ஏற்கனவே அறிவித்துள்ளன.
இந்த நிலையில் ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ககன்தீப் சிங் பேடி தலைமையிலான குழு, தனது இறுதி அறிக்கையை கடந்த டிசம்பர் 30, 2025 அன்று முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது.
இந்த அறிக்கையில் பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS), பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் (CPS) மற்றும் மத்திய அரசு அமல்படுத்தியுள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS) ஆகியவற்றின் நிதித் தாக்கம் மற்றும் சாதக பாதகங்கள் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த அறிக்கையை ஆய்வு செய்த பிறகு, அரசு எடுத்துள்ள முடிவை ஊழியர் சங்கங்களுக்குத் தெரிவிக்க அமைச்சர்கள் குழுவிற்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் இன்று தலைமைச் செயலகத்தில் சங்கப் பிரதிநிதிகளைச் சந்திக்கின்றனர்.
ஜனவரி 6-ம் தேதி தொடங்க உள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தவிர்க்கவும், அரசின் புதிய முடிவை விளக்கி ஊழியர்களைச் சமாதானப்படுத்தவும் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் உறுதியாக இருக்கும் நிலையில், அரசு பின்வரும் மாற்றுகளை முன்வைக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. அதாவது பழைய ஓய்வூதியத் திட்டத்தை அப்படியே அமல்படுத்தாமல், அதிலுள்ள சில முக்கிய அம்சங்களை உள்ளடக்கிய புதிய வடிவம். தற்போதைய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் ஊழியர்களுக்குக் கூடுதல் பலன்களை வழங்கும் வகையில் மாற்றங்கள் செய்தல்.
இன்றைய கூட்டத்தில் அமைச்சர்கள் தெரிவிக்கும் முடிவை ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு ஏற்குமா அல்லது ஜனவரி 6 போராட்டத்தைத் தொடருமா என்பதைப் பொறுத்தே இந்த விவகாரத்தின் அடுத்தகட்ட நகர்வு அமையும்.