சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்விற்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு!

Meenakshi
Nov 19, 2025,03:34 PM IST

சென்னை: சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்விற்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.


சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு எதிரான வழக்கு இன்று தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என்று உச்சநீதிமன்றம் கடந்த மாதம் தீர்ப்பளித்தது. இதன் தொடர்ச்சியாக தமிழக அரசு பணியில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஆசிரியர்களுக்காக சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளது. சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு அரசாணை எண் 231 நாள் : 13.10.2025 ரத்து செய்ய கோரி மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த நிலையில் வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.




சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வாயிலாக அரசு / அரசு உதவிபெறும் / தனியார் பள்ளிகளில் தற்பொழுது பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு (தாள்-I மற்றும் தாள்-II) நடத்துவதற்கான அறிவிக்கை (Website: http://www.trb.tn.gov.in) 19.11.2025 இன்று வெளியிடப்படுகின்றது.


இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் பணிபுரியும் ஆசிரியர்கள் 01.09.2025க்கு முன்னர் ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட்டிருக்க வேண்டும். இத்தேர்விற்கான விண்ணப்பம் சார்ந்த அனைத்து விவரங்களும் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், இத்தேர்விற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இணையதளம் வாயிலாக (Online Application) விண்ணப்பிக்க 20.11.2025 முதல் 20.12.2025 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய டிசம்பர் 21, 22 ஆகிய தேதிகளில் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. 


மேலும், முதல் தாள் ஜனவரி 24ம் தேதியும், இரண்டாம் தாள் ஜனவரி 25ம் தேதியும் தேர்வு நடைபெற உள்ளது. 150 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது. பொதுப் பிரிவினருக்கு – ரூ.600. எஸ்சி, எஸ்டி, மாற்றுத் திறனாளி பிரிவினருக்கு – ரூ.300. ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். கூடுதல் தகவல்களுக்கு: http://www.trb.tn.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.