பேருந்து ஓட்டுநர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்த தடை: போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு

Meenakshi
Dec 29, 2025,05:31 PM IST

சென்னை:  அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.


பேருந்து பயணத்தின் போது ஓட்டுநர்கள் செல்போன் பயன்படுத்துவது அதிகரித்து வருவதால், விபத்துகளின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. இது பயணிகளின் பாதுகாப்பிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. ஒரு பேருந்து சராசரியாக 40 முதல் 60 பயணிகளை ஏற்றிச் செல்கிறது. ஓட்டுநர் ஒரு நொடி செல்போனைப் பார்த்தாலும், பேருந்தின் கட்டுப்பாடு இழக்கப்பட்டு பெரும் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. 


நாளுக்கு நாள் போக்குரவத்து சேவைகள் அதிகரித்து வருகிறது. இதற்கு ஏற்ப சாலை விபத்துகளும் அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது பேருந்து ஓட்டும் போது ஓட்டுநர்கள் மொபைல் போனை பயன்படுத்துவது தான். அந்த வகையில் பல இடங்களில் மொபைல் போனில் பேசிக்கொண்டு பேருந்து ஓட்டுவது. ரீல்ஸ் வீடியோ பார்த்து கொண்டு பேருந்து ஓட்டுவது போன்ற நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.




இந்நிலையில்,  அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. இது குறித்து வெளியான அறிக்கையில்,  தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் கடந்த சில நாட்களாக அதிக அளவில் விபத்துக்கள் மற்றும் உயிரிழப்பு விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதனை ஆய்வு செய்யும் போது சில ஓட்டுனர்கள் பேருந்தை இயக்கும்போது செல்போன் பேசிக் கொண்டே இயக்குவதை பொது மக்கள் புகார் மற்றும் பேருந்தின் CCTV Camera மூலம் கண்டறியப்படுகிறது.


இவ்வாறு ஓட்டுனர்கள் செல்போன் பேசிக் கொண்டே பேருந்தை இயக்கும் போது கவனச் சிதறல் ஏற்பட்டு சாலை விபத்துகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, இனிவரும் காலங்களில் மாநகரப் போக்குவரத்து கழகத்தின் ஓட்டுநர்கள் தங்கள் பணியின் போது தங்களது செல்போன்களை தன்னுடன் பணி செய்யும் நடத்துனரிடம் கொடுத்து வைக்க வேண்டும். பின்னர் பணி முடிந்த பிறகு செல்போனை நடத்துனரிடமிருந்து பெற்று செல்ல வேண்டும். ஓட்டுநர்கள் பணியின் போது செல்போன்கள் வைத்திருப்பதை பரிசோதகர்கள் மற்றும் அலுவலர்கள் மூலம் கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.