கல்யாணம் காது குத்தா.. சுப நிகழ்ச்சிகளுக்கு இனி அரசு பேருந்து உங்கள் வாசலில்!
சென்னை: பொதுமக்களின் பயணத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் முதன்மையாக விளங்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், தற்போது சிறப்புத் திட்டத்தின் கீழ் வாடகை பேருந்து சேவையை வழங்கி வருகிறது.
திருமணங்கள், சுற்றுலாக்கள், பள்ளி மற்றும் கல்லூரி கல்விச் சுற்றுலாக்கள் போன்ற அனைத்து சுப மற்றும் உல்லாச நிகழ்வுகளுக்குப் பொதுமக்கள் இனி எளிதாக அரசு பேருந்துகளை வாடகைக்கு அமர்த்திக் கொள்ளலாம்.
பேருந்து வகைகளும் கட்டண விவரங்களும்பயணிகளின் வசதிக்கேற்ப பல்வேறு வகையான பேருந்துகள் பயன்பாட்டில் உள்ளன. ஆரம்பக் கட்டணமாக முதல் 100 கிலோமீட்டர் வரை நிர்ணயிக்கப்பட்ட கட்டண விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
மிதவை பேருந்து வசதி கொண்ட பேருந்துக்கு முதல் 100 கிலோமீட்டர் வரை சமவெளிப் பகுதியில் ரூ. 18,100 என்றும், மலைப்பாதைப் பயணங்களுக்கு 21,500 என்றும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
குளிர்சாதன வசதி கொண்ட ஏ/சி இருக்கை பேருந்துகளை பொறுத்தவரை, முதல் 100 கி.மீ வரை சமவெளிக்கு ரூ. 21,600 மற்றும் மலைப்பாதைக்கு 25,500 வசூலிக்கப்படுகிறது. சொகுசான பயணத்தை விரும்புவோருக்கான ஏ/சி இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட பேருந்துகளுக்கு, முதல் 100 கி.மீ-க்கு சமவெளியில் 25,500 மற்றும் மலைப்பாதையில் 29,800 கட்டணமாகப் பெறப்படுகிறது.
குளிர்சாதன வசதி இல்லாத நான் ஏ/சி இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட பேருந்துகளைத் தேர்ந்தெடுத்தால், முதல் 100 கி.மீ-க்கு சமவெளியில் ரூ. 20,600 மற்றும் மலைப்பாதையில் 24,400 செலுத்த வேண்டும்.
அனைத்து வகையான பேருந்துகளுக்கும் முதல் 100 கிலோமீட்டருக்குப் பிறகு கடக்கும் ஒவ்வொரு கி.மீ-க்கும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். அதன்படி, சமவெளிப் பகுதிகளில் (நேர்சாலை) ஒரு கிலோமீட்டருக்கு 40 வீதமும், ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற மலைப்பாதைகளில் கிலோமீட்டருக்கு 45 வீதமும் கூடுதல் கட்டணம் கணக்கிடப்படும்.
பேருந்து கிளம்பும் பணிமனையில் இருந்து தொடங்கி, மீண்டும் அதே பணிமனைக்கு வந்து சேரும் வரையிலான மொத்த தூரம் கணக்கில் கொள்ளப்படும். பயணக் கட்டணத்தை முழுமையாக முன்பணமாகச் செலுத்த வேண்டும். : ஒரு நாள் வாடகைக்கு நிகரான பாதுகாப்புத் தொகை செலுத்தப்பட வேண்டும். பயணம் முடிந்த பின் இது திருப்பித் தரப்படும்.
5% ஜி.எஸ்.டி (GST), முன்பதிவு கட்டணம் 1,000 மற்றும் சுங்கச்சாவடி கட்டணங்கள் தனியாக வசூலிக்கப்படும். நிர்ணயிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி பேருந்து தாமதமாகும் பட்சத்தில் கீழ்க்கண்டவாறு கட்டணம் வசூலிக்கப்படும்.. அதாவது 1 முதல் 6 மணி நேரம் வரை தாமதம் ஆனால், கால் நாள் வாடகை. 6 முதல் 8 மணி நேரம் வரை என்றால் அரை நாள் வாடகை, 8 மணி நேரத்திற்கு மேல் தாமதமானால், முழு நாள் வாடகை வசூலிக்கப்படும்.
பேருந்து முன்பதிவு மற்றும் கூடுதல் தகவல்களுக்கு அந்தந்த மாவட்டப் போக்குவரத்து கழக வணிக மேலாளர்களை அணுகலாம்.
தொடர்புக்கான நேரமாக காலை 10:00 மணி முதல் மாலை 06:00 மணி வரை அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பான மற்றும் வசதியான பயணத்திற்குத் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தைப் பயன்படுத்தி உங்கள் இல்லத்து நிகழ்வுகளைச் சிறப்பியுங்கள்!