சங்கடஹர சதுர்த்தி.. விநாயகப் பெருமானை வழிபட கஷ்டங்கள் யாவும் அறுபட்டுப் போகும்!

Swarnalakshmi
Jul 14, 2025,12:29 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


கஜானன சங்கடஹர சதுர்த்தி: விசுவாசு வருடம் 20 25 ஜூலை 14ஆம் தேதி திங்கட்கிழமையான இன்று ஆனி மாதம் 30 ஆம் நாள் தேய்பிறை சங்கடஹர சதுர்த்தி நாளாகும். விநாயகப் பெருமானை வழிபட கஷ்டங்கள் யாவும் வேரறுக்க வல்லான் நம் மூஷிக வாகன கணபதி.


சங்கடஹர சதுர்த்தி என்றாலே நம் கஷ்டங்கள், சங்கடங்கள் ,துன்பங்கள் யாவையும் அழித்து சுபிட்சம் தரும் விரதமாகும். இன்றைய நாள் வரும் சங்கடஹர சதுர்த்தி "கஜான  சங்கடஹர சதுர்த்தி" என்று அழைக்கப்படுகிறது இன்றைய நாள் விரதம் இருந்து விநாயகரை வழிபட செல்வம் ,ஞானம் பெருகும் என்பது ஐதீகம்.


நேரம் :  இன்று அதிகாலை  1:51 மணி முதல் ஜூலை 15ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 12 :30 மணி வரை சதுர்த்தி திதி உள்ளது.




சங்கடஹர சதுர்த்தி விரதம் சிலர் கடுமையான விரதம் மேற்கொள்வார்கள், தண்ணீர் மட்டும் அருந்தி அல்லது தண்ணீர் கூட அருந்தாமல் விரதம் மேற்கொள்பவர்களும் உள்ளனர். பக்தர்கள் விநாயகருக்கு பூஜை அறையில் அருகம்புல், வாசனை மலர்கள் மற்றும் சுண்டல் ,மோதகம் படைத்து ,தீப தூப ஆராதனை செய்து விநாயகர் துதி பாடல்களை பட விநாயகரின் ஆசிர்வாதத்தையும், வழிகாட்டுதலையும் பெறலாம். இன்று மாலை சந்திரன் உதயமான பிறகு பக்தர்கள் தங்கள் விரதத்தை பூஜை செய்து முடிப்பார்கள்.


திங்கட்கிழமையோடு ஆனி மாதத்தில் வந்திருக்கும் சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பான பலனை கொடுக்கிறது. சந்திர பகவானுக்கும் ஈசனுக்கும் உகந்த இந்த திங்கட்கிழமை நாளில் விநாயகர் வழிபாடு செய்வது அதீத சிறப்பை கொடுக்கும் .மேலும் மேற்படிப்பு படிக்க ,நல்ல கல்லூரியில் சேர விரும்புபவர்கள் தங்கள் மன குழப்பங்கள் தீர, காரிய தடை விலக, நல்ல வேலை கிடைக்க, தொழில் மேம்பட, பண பிரச்சினைகளிலிருந்து விடுபட ,குடும்பத்தில் ஏற்படும் மன குழப்பங்களில் இருந்து தீர்வு காண இன்று மாலை அருகில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சென்று அருகம்புல் வாங்கி கொடுத்து, அங்கு சிதறு தேங்காய் உடைக்கும் இடத்தில் ஒரு தேங்காய் வாங்கி உடைக்க கஷ்டங்கள் யாவும் சிதறுக்காய்  போல உடைபடும் என்பது நம்பிக்கை.


பௌர்ணமியை அடுத்த நான்காம் நாள் வரும் சதுர்த்தி தினமான இன்று வரும் சங்கடஹர சதுர்த்தி நாளில் விரதம் இருக்க இயலாதவர்கள் மாலையில் பூஜை அறையில் தீபம் ஏற்றி வழிபாடு செய்யலாம். முழுமுதற் கடவுள் ஆன விநாயகரை போலவே விரதங்களிலும் இந்த சதுர்த்தி விரதம் முதன்மையானது ஆகும்.


எனவே நம் வாழ்க்கையில் இருக்கும் கஷ்டங்களை விநாயகர் பாதங்களில் சமர்ப்பித்து இந்த சங்கடஹர சதுர்த்தி விரத நாளில் கஷ்டங்களை வேருடன் அழிக்கும் விநாயகரை  வழிபட்டு அனைவரும் நல்வாழ்வு வாழ்வோமாக மேலும் தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன் .வரைந்து எழுதியவர் உங்கள்  ஸ்வர்ணலட்சுமி.