கோவையில் இன்று தேர்தல் சுற்று பயணம் துவங்கினார் எடப்பாடி பழனிச்சாமி
கோவை : அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தனது பிரச்சார சுற்றுப்பயணத்தை துவக்குகிறார்கள். இந்த பயணம் வெற்றி அடைய கூட்டணி கட்சித் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
2026 தமிழக சட்டமன்ற தேர்தல் பணிகளை முதல் ஆளாக துவக்கி உள்ளது அதிமுக. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளதால் பாஜக உடன் கூட்டணியை பேசி, அதிகாாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதே போல் தமிழகத்தில் நடக்கும் பல்வேறு பிரச்சனைகளுக்கு அதிமுக சார்பில் குரல் எழுப்பப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து அடுத்த கட்டமாக பிரச்சார பயணத்தையும் துவக்க உள்ளார்கள்.
ஏற்கனவே 2 நாட்களுக்கு முன் அதிமுக தனது பிரச்சார பாடலையும், லோகோவையும் வெளியிட்டது. இதைத் தொடர்ந்து கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் ஜூலை 07ம் தேதியான இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது பிரச்சார சுற்றுப் பயணத்தை துவக்க உள்ளார். ஜூலை 23ம் தேதி தனது முதல் கட்ட பிரச்சார சுற்றுப் பயணத்தை தஞ்சாவூரில் நிறைவு செய்ய உள்ளதாகவும் அதிமுக சார்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிச்சாமி தனது தமிழக பிரச்சார சுற்றுப் பயணத்தில் திமுக கூட்டணிக்கு எதிராக வலுவான பிரச்சாரத்தை முன் வைப்பார் என சொல்லப்படுகிறது. மக்களிடம் நிலவும் அரசுக்கு எதிரான எதிர்ப்பு அலையை ஓட்டுக்களாக மாற்றுவதற்காக தான், தேர்தலுக்கு பல மாதங்களுக்கு முன்பே அதிமுக இந்த பிரச்சார பயணத்தை துவக்கி உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த சுற்றுப் பயணத்தின் போது எடப்பாடி பழனிச்சாமி பல முக்கிய அறிவிப்புக்களை வெளியிடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.