National Farmer's Day.. உழவுக்கு வந்தனை செய்வோம்.. விவசாயிகளுக்கு சல்யூட் செய்வோம்!

Swarnalakshmi
Dec 23, 2025,11:32 AM IST

- ஸ்வர்ணலட்சுமி


தேசிய விவசாயிகள் தினம்..  2025ம் ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் தேதி செவ்வாய்க்கிழமை "தேசிய விவசாயிகள் தினம்"(Kisan Diwas) கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் ஐந்தாவது பிரதமர் சௌத்ரி  சரண் சிங் அவர்கள் பிறந்த தினமான டிசம்பர் 23ஆம் தேதி மத்திய அரசு சார்பில் 'தேசிய விவசாயிகள் தினம்' என கொண்டாடப்படுகிறது.  இவர் விவசாயத்துறைக்கு பல சட்ட திட்டங்களைக் கொண்டு வந்து மறுமலர்ச்சி ஏற்படுத்தினார்.


திருக்குறள் 

குறள்அதிகாரம்: உழவு.


உழுவார் உலகத்தார்க்கு ஆணி அ ஃ தாற்றாது 

எழுவாரை எல்லாம் பொறுத்து.


இதன் பொருள்: பல்வேறு தொழில் புரிகின்ற மக்களின் பசி போக்கிடும் தொழிலாக உழவுத் தொழில் இருப்பதால் அதுவே உலகத்தாரை தாங்கி நிற்கும் அச்சாணி எனப்படும். இவ்வாறு திருவள்ளுவர் அன்றே உழவுத் தொழிலைப் பற்றி, உலகத்தாரை தாங்கி நிற்கும் அச்சாணி என்று போற்றி உள்ளார்.


"விவசாயிகள் தினம்"




விவசாயத் துறையின் முக்கியத்துவத்தையும், நாட்டின் பொருளாதாரத்தில் விவசாயிகளின் பங்களிப்பையும் நினைவு கூற ஒரு அரும்பெரும் வாய்ப்பாக உள்ளது. விவசாயிகளின் கடின உழைப்பையும், நாட்டின் உணவு பாதுகாப்பில் அவர்களுடைய பங்களிப்பையும் போற்றுவதற்காக இந்த நாள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.


விவசாயத்தில் முன்னாள் பிரதமர் சௌத்ரி சிங் அவர்களின் பங்கு:


இந்தியாவின் ஐந்தாவது பிரதமராக சரண் சிங் அவர்கள் 1979 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பதவியேற்றார். 1980 ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி வரை 7 மாதங்கள் ஆட்சியில்  இருந்தபோது "ஜமீன்தாரி ஒழிப்பு முறை" சட்டத்தை கொண்டு வந்தார். அவருடைய ஆட்சியில் தான் விவசாயிகளின் விலை பொருள் விற்பனைக்காக 'வேளாண் விளைபொருள் சந்தை 'மசோதாவையும் அறிமுகப்படுத்தினார்.


அதே சமயம் நில உரிமையாளர்கள் வட்டிக்கு பணம் வழங்குவோர் மீது கடும் எதிர்ப்புகளையும், கண்டனங்களையும் விமர்சனங்களையும் முன் வைத்தார்.


இந்த ஆண்டிற்கான(2025) கருப்பொருள் நிலையான விவசாயம், விவசாயிகளின் வருமான பாதுகாப்பு,தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளின் பங்கு,விவசாயிகளின் மேம்பாடு போன்ற முக்கியமான விஷயங்களை மையமாகக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


கருப்பொருள்: (தீம் )


2025 ஆம் ஆண்டிற்கான கருப்பொருள் "வளமான எதிர்காலத்திற்காக இந்திய விவசாயிகளை மேம்படுத்துதல்" "(Empowering Indian Farmers for a Prosperous Tomorrow) அல்லது "விவசாயிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல்"போன்ற கருத்துக்கள் முக்கியத்துவம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதன் நோக்கம் :நாட்டின் உணவு பாதுகாப்பை உறுதி செய்வதிலும், கிராமப்புற வேலைவாய்ப்பை உருவாக்குவதிலும் விவசாயிகளின் பங்களிப்பை நினைவு கூறுவதே இதன் முக்கிய குறிக்கோள் ஆகும். மேலும் நிலையான விவசாய முறைகள் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளுதல், நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதை பற்றி அமைந்திருக்கும்.

 உலகில் விவசாயிகளின் பங்களிப்பு மற்றும் அவர்கள் அயராதுஆற்றும் பணிகளை பாராட்டி அனைத்து விவசாயிகளையும் இந்த தேசிய விவசாயிகள் தினத்தன்று கௌரவிப்போமாக .


"தேசிய விவசாயிகள் தினமான இன்று அனைத்து விவசாயிகளுக்கும் தென் தமிழ் சார்பாக நல்வாழ்த்துக்கள். இன்று ஒரு நாள் மட்டுமல்லாமல் வாழும் காலம் வரை நாம் அனைத்து விவசாயிகளுக்கும் நன்றி தெரிவிப்போ மாக.. 


மேலும் இது போன்ற சுவாரசியமான தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன் எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி