விவசாயம் காப்போம் வளமாக வாழ்வோம்.. இயற்கை வழி நடப்போம்!
- மயிலாடுதுறை வீ.யோகாஸ்ரீ
தெய்வப் புலவர் திருவள்ளுவரின்
சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால்
உழன்றும் உழவே தலை
என்னும் திருக்குறளில் கூறியதை நாம் உணர்ந்து பார்த்து தேசிய விவசாயிகள் தினத்தை கொண்டாடுவோம்.
மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் என்பதை உணர்ந்து நம்மால் முடிந்த மரங்களை வீடுகளிலும் பொது இடங்களிலும் வளர்ப்போம்.
விவசாயி சேற்றில் கால் வைத்தால் தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும் என்பதை உணர்ந்து விவசாய நிலங்களை அழிக்காமல் பாதுகாப்போம்.
விவசாயம் காப்போம் வளமாக வாழ்வோம் என்பதை போல் நாம் செயற்கை பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தாமல் இயற்கை முறையில் விவசாயம் செய்வோம் .
விவசாயி மட்டும் நிலத்தில் விதைப்பதை நிறுத்தி விட்டால் மண்ணும் மலடாகிவிடும் என்பதை உணர்ந்து விவசாயத் தொழிலை செய்வோம்.
விவசாயம் சார்ந்த பழமொழிகளை தெரிந்து கொள்வோம். தவளை கத்தினால் தானே மழை. அந்தி ஈசல் பூத்தால் அடை மழைக்கு அச்சாரம். எறும்புத்திட்டை ஏறில் பெரும் புயல். மார்கழி மழை மண்ணுக்கு உதவாது. தை மழை நெய் மழை. அகல உழுவதை விட ஆழ உழுவது நல்லது. ஆடிப்பட்டம் தேடி விதை. புத்து கண்டு கிணறு வெட்டு. விண் பொய்த்தால் மண் பொய்க்கும். களர் கெட பிரண்டையைப் புதை. மாசிப் பனி மச்சையும் துளைக்கும் . வெள்ளமே ஆனாலும் பள்ளத்தே பயிர் செய். காணி தேடினும் கரிசல் மண் தேடு. நீரும் நிலமும் இருந்தாலும் பருவம் பார்த்து பயிர் செய். தேங்கி கெட்டது நிலம், தேங்காமல் கெட்டது குளம் .
விவசாயத்தை போற்றுவது ஒவ்வொரு இந்திய குடிமகனின் கடமை என்பதை உணர்ந்து ஒற்றுமையாக செயல்படுவோம் . நம்மால் முடிந்த விழிப்புணர்வுகளை மக்களிடம் ஏற்படுத்துவோம் .