ஐப்பசி மாத தேய்பிறை சஷ்டி.. நல்ல ஆரோக்கியத்தையும் ஆன்மீக சக்தியையும் அளிக்கும்!
விசுவா வசு வருடம் 20 25 நவம்பர் பத்தாம் தேதி திங்கட்கிழமை ஐப்பசி மாதம் 24 ஆம் நாள் சஷ்டி திதி அமைந்துள்ளது.
சஷ்டி திதி: "சஷ்டி" என்ற சொல் ஆறு என்று பொருள்படும். இது அமாவாசைக்கு பிறகு வரும் சஷ்டி "வளர்பிறை சஷ்டி "என்றும் பௌர்ணமிக்கு பிறகு வரும் சஷ்டி "தேய்பிறை சஷ்டி "என்றும் அழைக்கப்படுகிறது. இன்று அமைந்துள்ள சஷ்டி திதி பௌர்ணமிக்கு பிறகு வரும் தேய்பிறை சஷ்டி ஆகும்.
ஐப்பசி மாதத்தில் வளர்பிறை சஷ்டியில் ஆறு நாட்கள் கந்த சஷ்டி விழாவாக கொண்டாடப்பட்டது. இது முருகன் சூரனை அழித்ததை நினைவுபடுத்துகிறது.
நேரம்: இன்று காலை 8:31 வரை பஞ்சமி திதி உள்ளது. பின் சஷ்டி திதி ஆரம்பம் ஆகிறது.
மாத சஷ்டி விரதம் என்பது முருகப்பெருமானின் அருளை பெறுவதற்காக மாதம் தோறும் வரும் சஷ்டி திதியில் கடைபிடிக்கும் ஒரு சிறப்பு வாய்ந்த விரதம் ஆகும். இந்த விரதம் இருப்பதனால் அனைத்து துன்பங்களும் நீங்கி, நல்ல ஆரோக்கியம், வெற்றி மற்றும் குழந்தை வரம் போன்ற பலன்களை அளிக்கும் என்று நம்பப்படுகிறது. ஐப்பசி மாத சஷ்டியில் சூரசம்ஹாரம் நடந்ததனால் இந்த மாதம் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. மற்ற அனைத்து மாதங்களிலும் சஷ்டி திதியில் விரதம் இருப்பது பலன் தரும்.
சஷ்டி விரதத்தின் பலன்கள்:
ஆரோக்கியம்: நல்ல ஆரோக்கியத்தையும் ஆன்மீக சக்தியையும் அளிக்கும்.
குழந்தை வரம்:
திருமணம் ஆகி நீண்ட நாட்கள் குழந்தை வரம் வேண்டுபவர்கள், மருத்துவத்தினால் முயற்சி செய்பவர்கள் இந்த விரதத்தை அனுஷ்டிப்பது சிறப்பு. அவரவர் உடல் நிலைக்கு ஏற்றவாறு விரதம் இருப்பது நன்மை பயக்கும்.
திருமணத்தடை நீங்கும் :
திருமணம் நடைபெறுவதில் எந்தவித தடைகள் இருந்தாலும் அவை அனைத்தும் நீங்கும். துன்பங்கள் குறையும்: பகைவர்கள் மற்றும் தீய சக்திகளை வெல்லும் சக்தியை இந்த விரதம் அளிக்கும்.
விரதம்:
சஷ்டி திதியில் பலர் பால், பழம் அல்லது ஒருவேளை மட்டும் உணவு உட்கொண்டு விரதம் இருப்பார்கள். சிலர் கடுமையான விரதம் இருப்பதும் உண்டு.
மருந்து மாத்திரை உட்கொள்பவர்கள் அவரவர் உடல் நிலைக்கு ஏற்றவாறு விரதம் மேற்கொள்வது நன்று. சஷ்டி விரதம் மேற்கொள்வதால் வறுமை நீங்கி,செல்வ வளம் பெருகும்.நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். கல்வி ஞானம் பெருகும்.
விரதம் இருப்பவர்கள் அருகில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று முருகன் பக்தி பாடல்கள் கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், கந்தர் அனுபூதி, குமாரஸ்தவம், வேல்மாறல் படிப்பது சிறப்பு.
முருகன் காயத்ரி மந்திரம்:
"ஓம் தத் புருஷாய வித்மஹே மகா சேனாய தீமஹி தன்னோ சண்முக: பிரசோதயாத்." "ஓம் சரவணபவ" எனும் சடாக்ஷர மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே இருப்பது நன்மை பயக்கும்.
அனைத்து விரதங்களும், வழிபாடுகளும் வாழ்க்கையில் நமக்கு தன்னம்பிக்கை கொடுப்பதற்கும், வாழ்க்கை ஒரு நாள் மாறும், நன்மை பெருகும், என்ற நம்பிக்கையுடன் வழி நடத்துவதற்கும் வகுக்கப்பட்டவை. முருகன் அருளால் அனைவரும் அனைத்து வளங்களும் நலங்களும் பெற்று வாழ்வோமாக.
மேலும் இன்று திருமண நாள் மற்றும் பிறந்தநாள் கொண்டாடும் அனைவருக்கும் தென் தமிழ் சார்பாக நல்வாழ்த்துக்கள். தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். வரைந்து எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி.