கார்த்திகை மாத சிவராத்திரி.. நாளை கார்த்திகை அமாவாசை.. அடுத்தடுத்து சிறப்பு!
- ஸ்வர்ணலட்சுமி
கார்த்திகை மாத சிவராத்திரி இன்று வரும் நிலையில் நாளை கார்த்திகை அமாவாசையும் சேர்ந்துள்ளது. இது மிக சிறப்பானது.
அதன் சிறப்புகளை இப்போது பார்ப்போம்.. விசுவாவசு வருடம் 20 25 நவம்பர் மாதம் 18ம் நாள் செவ்வாய்க்கிழமை ஆன இன்று கார்த்திகை மாதம் இரண்டாம் நாள் சிவராத்திரி அனுஷ்டிக்கப்படுகிறது. நேற்று நவம்பர் 17ஆம் தேதி சோமவார பிரதோஷம் அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பாக வழிபாடுகள் நடைபெற்றன. பிரதோஷ வழிபாடு செய்வதனால் அனைத்து தோஷங்களில் இருந்தும் விடுபட்டு நல்வாழ்வு வாழ வழிவகுக்கும்.
இன்று கார்த்திகைமாத சிவராத்திரி அதிக சிறப்புடையது ஆகும். இந்த நாளில் சிவபெருமானை வழிபடுவதனால் மன அமைதி, செல்வ வளம், வெற்றி ஆகியவற்றுடன் சிவனின் அருளும் கிடைக்கும். பரம்பொருளாகிய சிவபெருமானின் விருப்பத்திற்கு உரியவர்களாகவும், சிவன் அருள் கிடைக்க பெற்றவர்களாகவும் மாறுவதற்கு வழிபட வேண்டிய சிறந்த நாள் மாத சிவராத்திரி ஆகும். இன்று சிவாலயங்களுக்கு செல்பவர்கள் அபிஷேகம் பொருட்கள் மற்றும் வில்வம்,வாசனை மலர்கள் வாங்கிச் சென்று சிவபெருமானை வழிபடுவது சிறப்பு.
சிவாலயங்கள் மட்டுமல்லாமல் கார்த்திகை மாதம் செவ்வாய்க்கிழமை அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.இன்று ஈரோட்டில் உள்ள அருள்மிகு வேலாயுத சுவாமி திருக்கோவிலில் மாலை தங்கத்தேர் ஊர்வலம் நடைபெறுகிறது. ஏராளமான பக்தர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள். இது திண்டல் முருகன் கோவிலின் தனிச்சிறப்புகளில் ஒன்றாகும்.
கார்த்திகை மாத அமாவாசை : நவம்பர் 19ஆம் தேதி புதன்கிழமை கார்த்திகை மூன்றாம் நாள் அமாவாசை அனுஷ்டிக்கப்படுகிறது. அமாவாசை திதி நவம்பர் 19 காலை 10:28 மணிக்கு தொடங்கி நவம்பர் 20ஆம் தேதி வியாழக்கிழமை பிற்பகல் 12: 31 மணி வரை உள்ளது. கார்த்திகை அமாவாசை சிவபெருமானுக்கும், முன்னோர் வழிபாட்டிற்கும் உரிய சக்தி வாய்ந்த நாளாக கருதப்படுகிறது.
அமாவாசை அன்று செய்யப்படும் வழிபாடுகள், தான தர்மங்கள் பல மடங்கு அதிகமான பலன்களை தரக்கூடியது என்று நம்பப்படுகிறது. கார்த்திகை மாதம் வரும் அமாவாசையை "மிருகசீரிஷ அமாவாசை" என்று அழைக்கப்படுகிறது. இந்த நாள் முன்னோர் வழிபாடு செய்வதனால் முன்னோர்களை திருப்தி அடைய வைக்கும் மற்றும் செல்வ வளம் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.
அமாவாசை வழிபாடுகள்:
அமாவாசை அன்று அதிகாலையில் எழுந்து புனித நதிகளில் நீராடுவது மிகவும் விசேஷமானதாகும். அவ்வாறு செல்ல இயலாதவர்கள் வீட்டிலேயே குளிக்கும் நீரில் கங்கை தீர்த்தம் இருந்தால் குளிக்கும் தண்ணீரில் கலந்து குளிப்பது சிறப்பு. முன்னோர் வழிபாட்டிற்குரிய காய்கறிகளை சமைத்து அதாவது வாழைக்காய், பூசணிக்காய், அகத்திக்கீரை,பருப்பு, வடை,பாயாசம்...அவரவர் குடும்ப வழக்கத்திற்கு ஏற்ப சமைத்து முன்னோர்களுக்கு படையலிட்டு வழிபடுவது சிறப்பு. தங்களால் இயன்ற தான தர்மங்கள் செய்வது, வறுமையில் இருப்பவர்களுக்கு அன்னதானம் மற்றும் பண உதவி செய்வது மன நிம்மதி அளிக்கும். தலைமுறைக்கும் முன்னோர்கள் ஆசி பெற்று நல்வாழ்வு வாழ வழிவகுக்கும்.
அமாவாசை அன்று மாலை மண் அகல் விளக்கினால் நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி வீட்டின் மாடத்திலோ அல்லது துளசி மாடத்திற்கு அருகில் விளக்கேற்றுவது சிறப்பு. கார்த்திகை மாதம் முழுவதும் தீபம் ஏற்றுவது அதீத சிறப்பாகும்.
அமாவாசை அன்று அரச மர வழிபாடும் செய்வதனால் முன்னோர்கள் ஆசியும், மன அமைதி, நிம்மதி, செல்வ வளம் அதிகரிக்கும். இது போன்ற சுவாரசியமான தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி.