மகா சங்கடஹர சதுர்த்தி.. அண்ணன் விநாயகர் மட்டுமல்ல.. தம்பி முருகனையும் வழிபட சிறந்த நாள்!

Swarnalakshmi
Aug 12, 2025,10:51 AM IST

மகா சங்கடஹர சதுர்த்தி இன்று.. விசுவாசு வருடம் 20 25 ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி செவ்வாய்க்கிழமை- இன்று முழுமுதற் கடவுள் ஆன விநாயகரை வழிபடும் மகா சங்கடஹர சதுர்த்தி தினமும், கடைசி ஆடிச் செவ்வாய்க்கிழமை அம்பிகையை வழிபடவும், முருகப்பெருமானை வழிபடவும் சிறப்பான நாளாக அமைந்துள்ளது.


வருடத்தில் பன்னிரண்டு சங்கடஹர சதுர்த்திகள் வருகின்றன அதில் 12வதாக விநாயகர் சதுர்த்திக்கு முன்பாக வரும் சங்கடஹர சதுர்த்தியை மகா சங்கடஹர சதுர்த்தி என்று கொண்டாடுகிறோம் இன்றைய நாள் மிகவும் சிறப்பு வாய்ந்த நாள் இந்த சிறப்பு வாய்ந்த மகா சங்கடஹர சதுர்த்தி அன்று நாம் விநாயகர் பெருமானை விரதம் இருந்து வழிபாடு செய்வதனால் 11 சங்கடஹர சதுர்த்தியும் நாம் வழிபாடு செய்த பலன் கிடைக்கும். இன்றைய நாள் இத்தனை சிறப்பு வாய்ந்தது .இந்த மகா சங்கடஹர சதுர்த்தி அங்காரக சங்கடஹர சதுர்த்தி என்றும் அழைக்கப்படுகிறது.


பிரணவத்தின்  வடிவமே விநாயகர் இதன் திரிந்த வடிவமே "பிள்ளையார் சுழி." நம் எந்த ஒரு காரியத்தையும் முதலில் துவங்கும் பொழுது பிள்ளையார் சுழி போட்டு துவங்கினால் வெற்றி நிச்சயம் உண்டாகும், என்பது நம்பிக்கை.




வளர்பிறை சதுர்த்தியை வர சதுர்த்தி என்றும் கிருஷ்ணபட்ச தேய்பிறை சதுர்த்தியை சங்கடஹர சதுர்த்தி என்றும் அழைக்கப்படுகிறது. முதன் முதலில் சங்கடஹர சதுர்த்தி விரதத்தை அங்காரகன் அனுஷ்டித்து நவகிரகங்களில் ஒன்றானார். எனவே ,இந்த சங்கடஹர சதுர்த்தி விரதத்திற்கு "அங்காரக சதுர்த்தி" விரதம் என்றும் பெயர் வந்தது.


விநாயகர் காயத்ரி மந்திரம்:


"ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்தி பிரச்சோதயாத்"

ஓம் ஏக தந்தாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்தி  பிரச்சோதயாத்.


கணபதி சுலோகம்:  


"அல்லல்போம்  வல்வினைப்போம் அன்னை வயிற்றில் பிறந்த தொல்லை போம் போகா துயரம் போம் நல்ல குணமதிகமாம்  அருணை கோபுரத்தில்  மேவும் கணபதியை கை தொழுத கால்" 


மகா சங்கடஹர சதுர்த்தி ஆன இன்று விநாயகர் வழிபாடு செய்து அருகம்புல் மாலை, மோதகம் நைவேத்தியம் வைத்து மேல் காணும் ஸ்லோகங்களை படிக்க சங்கடங்கள் யாவும் நீக்கி சர்வஐஸ்வர்யங்களை அள்ளிக் கொடுப்பார் விநாயகர்.


மேலும் தென் தமிழ் வாசகர்கள் அனைவருக்கும்" மகா சங்கடஹர சதுர்த்தி" நாளான  இன்று விநாயகர் பெருமானின் அருள் முழுமையாக கிடைக்க நல்வாழ்த்துக்கள். வரைந்து எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி.