மே தினம்.‌‌... உழைக்கும் கரங்களுக்கு.. நன்றி அர்ப்பணிக்கும் ஞானம் விதைக்கும் நாளாகட்டும்...!

Su.tha Arivalagan
May 01, 2025,02:40 PM IST

- ரேணுகா ராயன் 


நாம் கையாளும் ஒவ்வொரு பொருளின் உள்ளேயும் ஒளிந்து இருக்கிறது உழைப்பாளிகளின் உன்னதமான ரத்தம்.  ஒய்வின்று ஓடிக் கொண்டிருக்கும் அந்த உன்னதமான ரத்தம் இன்று மட்டும் சற்றே ஓய்வெடுக்கட்டும் என்று கொண்டு வரப்பட்ட நாள்தான் மே தினம்.. ஆனால் ரத்தத்தின் ஓட்டத்திற்கு ஓய்வேது.. ரத்தம் ஒய்வெடுக்கத் தொடங்கி விட்டால் என்னாவது.. அப்படித்தான் உழைப்பாளர்களும்.. அவர்கள் இல்லாமல் இந்த உலகத்தின் இயக்கமே இல்லை.


இன்றும் நாம் வாங்கும் ஒவ்வொரு பொருளின் மூலதனத்திற்கான விலையை  மனதளவில் நிர்ணயம் செய்து பேரம் பேசி வாங்கும் பழக்கம் உண்டு.  எனினும் அப்பொருளின் பின்னால் இருக்கும் உழைப்பாளிகளின் நேரம் வியர்வை உழைப்பு தியாகம் இவை எதுவுமே சேர்த்து சிந்திக்கப்படுவதில்லை. ஒவ்வொரு பொருளிலும் உள்ள உழைப்பை நீக்கிவிட்டால் அப்பொருள் உருவாகி இருக்க வாய்ப்பே இல்லை என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும்.


குடும்பத்திற்காக வருமானம் ஈட்ட உழைக்கும் வர்க்கங்களாக மாறும் மனிதர்கள் கொத்தடிமைகளாக மாறி மீண்ட வரலாறு உண்டு. அதை ஆண்டுதோறும் நினைவுபடுத்தி தொழிலாளர்களை வணக்கத்திற்கு உரியவர்களாக போற்றும் நாள் மே தினம்.  


சுமார் ஒன்றரை நூற்றாண்டின் போராட்டங்களும் அதனால் கிடைத்த வெற்றிகளின் வரலாற்றை சுருக்கமாக பார்ப்போம். இந்த உலகில் எதுவும் எளிதாக கிடைத்து விடாது. உணர்வு பலி உயிர் பலி என்று அதற்கு நிச்சயம் தேவைப்படுகிறது. மே ஒன்றாம் தினம் அப்படி எதையெல்லாம் கொடுத்தது என்பதை பார்ப்போம். 




இங்கிலாந்தில் ஆரம்பித்து ரஷ்யா வரையிலும் பல்வேறு நாடுகளில் 12 முதல் 15 மணி நேரம் எல்லா தொழில் துறைகளிலும் தொழிலாளர்கள் ஈவு இரக்கமின்றி ஈடுபடுத்தப்பட்டு கட்டாய உழைப்புக்கு ஆளாக்கப்பட்டனர். இதை 18 ஆம் நூற்றாண்டின் இறுதிகளில் உணர்ந்து கொண்ட தொழிலாளர்கள் தங்களின் போராட்டங்களை சிறிது சிறிதாக அங்கொன்றும் இங்கொன்றுமாக வெளிப்படுத்த ஆரம்பித்தனர். வழக்கம் போல சர்வாதிகாரத்தின் பிடியில் தொழிலாளர்கள் நசுக்கத்தான் பட்டார்கள்.


வேகமாக வளர்ந்து கொண்டிருந்த பல நாடுகளில் தொழிலாளர்கள் விழிப்படையத் தொடங்கினர். தங்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது தங்கள் வாழ்வாதாரம் அழிக்கப்பட்டு வருகிறது, இந்த நிலை தொடர்ந்தால் மனித இனத்திற்கு கேடு என்று புரிந்து கொண்டனர்.


முதன் முதலில் இங்கிலாந்தில் சேரஸ்டிஸ் என்ற இயக்கத்தின் மூலம் முதல் போராட்டம் முன்வைக்கப்பட்டது. இதை கவனித்த ரஷ்யா ஆஸ்திரேலியா, இன்னும் பல நாடுகளை சேர்ந்த தொழிலாளர்கள் அவரவர் நாடுகளில் போராட்டங்களில் ஈடுபட தொடங்கினர். இது முதலாளிகளுக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது.


1887 ஆம் ஆண்டு அமெரிக்கா வில் இப்படிப்பட்ட ஒரு போராட்டத்தில் நவம்பர் 11ம் தேதி போராட்டத்தை இட்டுச் சென்ற தொழிலாளர் தலைவர்கள் ஜோர்ஜ் ஏங்கல், ஆகஸ்ட் ஸ்பைஸ், ஆல்பர்ட் பார்சன்ஸ், அடொல்ஃப் ஃபிஷர்  ஆகியோர் தூக்கிலிட்டு கொல்லப்பட்டனர். 


இது தொழிலாளர்களின் மனதை வெகுண்டெழச் செய்தது. நவம்பர் 13 ஆம் தேதி தொழிலாளர்களுக்காக உயிர் தியாகம் செய்த தலைவர்களின் இறுதி ஊர்வலத்தில் நாடு முழுவதும் 5 லட்சம் பேருக்கு மேலாக கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.போராட்டத்தை முன்னெடுப்பவர்களை கொன்றுவிட்டால் போராட்டம் காணாமல் போய்விடும் என்ற முதலாளிகளின் கணக்கு முடிவுக்கு வரும் வகையில் அமெரிக்காவில் மட்டுமல்ல உலகின் பல்வேறு நாடுகளில் தொழிலாளர் புரட்சி வெடிக்க தொடங்கியது. 


1896 ஆம் ஆண்டு ரஷ்ய தொழிலாளர்களின் மோசமான நிலை குறித்து லெனின் அவர்களின் தீர்க்கமான தெளிவான கருத்துக்கள் ஆய்வு கட்டுரைகளாக வெளிவரத் தொடங்கியது. தொழிலாளர்களின் போராட்டம் அரசியல் போராட்டமாக மாற வேண்டும் என்று லெனின் அழைப்பு விடுத்தார். மேலும் மே ஒன்றாம் தேதி தொழிலாளர் தினமாக கொண்டாடப்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார். தனது 53 வது வயது வரை தொழிலாளர்களின் விடுதலையே நோக்கம் என வாழ்ந்து இன்றும் தொழிலாளர்களின் தெய்வமாக போற்றப்படுகிறார்  விளாடிமிர் லெனின். 


தொழிலாளர்களின் போராட்டம் ஆஸ்திரேலியாவில் முதல் வெற்றியைக் கண்டது.  பின்னாளிலே தொடர்ந்து பிற நாடுகளிலும் எட்டு மணி நேர வேலை ஞாயிறு விடுமுறை அல்லது வாரத்தில் ஏதேனும் ஒரு நாள் விடுமுறை உழைப்புக்கேற்ற சம்பளம் என படிப்படியாக தொழிலாளர் வாழ்வில் முன்னேற்றம் தொடங்கியது. 


உலகமெங்கும் மே 1 ஆம் தேதி தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் அவர்களின் தேவை குறித்தும் அவர்கள் நசுக்கப்பட விதம் குறித்தும் பல தலைவர்கள் மக்களுக்கும் அரசுக்கும் தெரிவிக்கும் ஒரு நல் வாய்ப்பாக இந்நாளை பயன்படுத்திக் கொள்கின்றனர். 




பூமி சுழலும் தொழிலை நிறுத்திக் கொண்டால் உயிர்கள் ஏது...


களர் நிலத்தை பயிர் பிரசவிக்கும் களமாக மாற்றும் விவசாயி இல்லையென்றால் உணவேது ...


மின்தறியோ, விசைத்தறியோ

நெசவாளி இல்லை என்றால் 

மானம் மறைப்பதேது....


ஓலை வேய்ந்த குடிசையோ 

கல் சுமந்த மாளிகையோ

கட்டிடத் தொழிலாளி இல்லையெனில்

வெயிலினின்றும் மழையினின்றும் நம்மை காப்பவன் எங்ஙனம்...


உயிர்பலிக் கொள்ள 

எல்லை தாண்டி வருபவனிடம் தன்னைக் கொடுத்து மக்களை காக்கும் வீரனின்றி நாடேது...


தச்சன் என்றும் கொல்லன் என்றும்

வணிகன் என்றும் மருத்துவன் என்றும் கணினி தொடங்கி மீன் பிடிப்பவன் வரை இல்லை எனில் வாழ்வுக்கு ஆதாரம் ஏது...


உழைப்பு அடங்கிவிட்டால்

உயிர்களுக்கு மதிப்புதான் என்ன...


பொருள் நிறைந்த வாழ்வில் மூலப்பொருளே உழைப்பன்றோ....


எனில் அதைப் போற்றும் விதம் நன்றியாக அல்லவோ இருத்தல் வேண்டும்....


பரஸ்பர நன்றியும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் பேதங்களின்று

ஒருவருக்கொருவர் சொல்லி மகிழ்வோம்.


மே தினம்.‌‌...


நன்றி  அர்ப்பணிக்கும் ஞானம் 

விதைக்கும் நாளாகட்டும்...


உழைப்பினால் இவ்வுலகை உயர்ந்திடச் செய்யும் தொழிலாளர்களை போற்றி கொண்டாடுவோம் மே தின வாழ்த்துக்கள்!