விதையால் ஆயுதம் செய்வோம்.. விவசாயிகள் தினத்தன்று இந்த உறுதியை எடுப்போம்!
- மயிலாடுதுறை த.சுகந்தி, M.Sc,B.Ed
கிசான் திவாஸ் என்றும் அழைக்கப்படும் "தேசிய விவசாயிகள் தினம்" இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 23 அன்று கொண்டாடப்படுகிறது.
விவசாய தினத்தின் நோக்கம்:
வேளாண்மை என்பது விவசாயத்தைக் குறிக்கும் மற்றொரு சொல். இது பயிர்களை வளர்ப்பது மற்றும் அறுவடை செய்வது மற்றும் விலங்குகள் அல்லது கால்நடைகளை வளர்ப்பது ஆகிய இரண்டையும் உள்ளடக்கியது.
இந்த நேரத்தில் முன்பு நடந்த ஒரு சம்பவத்தை உங்களுடன் பகிர விரும்புகிறேன். அதில், குறிப்பாக விவசாயத்தில் ஆர்வமாக கலந்து கொண்ட குழந்தைகளைப் பற்றி தெரிந்து கொள்வோமா
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கோனூர்நாட்டில் விவசாய மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பான விதையால் ஆயுதம் செய் குழுவில் 2023-ம் ஆண்டில் முதன் முதலாக கலந்து கொண்டோம்.
ஒவ்வொரு மாதமும் ஒரு ஞாயிற்றுக்கிழமைகளில் "ஞாயிறு முன்றில்" என்ற நிகழ்வின் மூலம் ஒரு சிறப்பு விருந்தினரை வரச் சொல்லி பேச்சு பயிற்சி ஒரு நாள் பயிலரங்கள்,கலைநோக்கில் ஒரு வரலாறு, மறந்து போன பாரம்பரிய விளையாட்டுகள் என்ற தலைப்பில் மிகவும் சிறப்பாக பல நிகழ்வுகளை நடத்தி வந்தார்கள்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் மற்றும் ஆசிரியர்களுக்கும் நமது முன்னோர்கள் பயன்படுத்திய பாரம்பரிய அரிசிகளை பயன்படுத்தி சத்தான உணவாகவும்,குழந்தைகளுக்கு பிடித்த வகையில் இருக்கும் உணவினையும் வீட்டில் தயார் செய்து தொண்ணை,வாழை இலை, தேக்கு இலை ,மண்குவளை போன்ற பொருட்களை பயன்படுத்தி விவசாயத்தின் மகிமையை உணர்த்தி வந்தார்கள்.
"இந்தியாவின் முதுகெலும்பாக இருக்கும் விவசாயத்தை அனைவரும் பாதுகாக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்கள்.
30.12.2025 நம்மாழ்வரின் பத்தாம் ஆண்டு நினைவு நாளில் தஞ்சாவூர் ஐயன் குளத்தை சுற்றி இயற்கை நடை மற்றும் பறவைகள் மற்றும் தாவரங்களை அவதானித்துக் கொண்டு பல்வேறு வகையான தாவரங்களின் பெயர்களையும் பறவைகளின் சிறப்புகளைப் பற்றியும் தெரிந்து கொண்டோம்.
2024-ம் ஆண்டு நம்மாழ்வார் நிகழ்வில் கலந்துகொண்டு அவர்கள் நடத்திய நெல் நடவு விழாவில் கலந்து கொண்டு எப்படி நெல்லை நடவு செய்ய வேண்டும் என்பதை கற்றுக் கொண்டதோடு "ஏலேலோ ஏலேலோ ஏலேலங்கடி ஏலேலோ "என்ற பாடலை பாடிக்கொண்டே விவசாய சேற்று நிலத்தில் காலை வைத்து நெல் நடவு செய்து மிக்க மகிழ்ச்சி அடைந்தோம் .
தாராசுரம் பண்ணையில் நடத்திய நெல் குஞ்சம் கட்டுதல்,வைக்கோல் போர் ,பரிமனை போன்றவற்றைக் கற்றுக்கொள்ளும் நிகழ்வில் கலந்து கொண்டு நெல் குஞ்சம் கட்டுவதையும் பிரிமனை செய்வதையும் கற்றுக்கொண்டோம்.
தஞ்சாவூர் மாவட்ட புத்தக கண்காட்சியில் பாரம்பரிய அரிசிகளை கண்காட்சியாக வைத்து, பாரம்பரிய அரிசிகளை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி பேசினார் யோகாஸ்ரீ.
தஞ்சையில் இரண்டாம் ஆண்டு நம்மாழ்வார் சித்திரை திருவிழா -2025 நிகழ்வில் யோகாஸ்ரீ மற்றும் லக் ஷன் நம்மாழ்வார் வேடம் அணிந்து அந்த நிகழ்வில் சிறப்பாக கலந்து கொண்டார்கள்.
தமிழ்நாடு அரசு நடத்தும் ஒரு கோடி பனைவிதை நடும் திட்டத்தில் குடும்பத்துடன் கலந்து கொண்டு சாலையில் கீழே இருக்கும் பனை விதைகளை சேகரித்துக் கொடுத்தும், பனை விதைகளை நடும் நிகழ்விலும் கலந்து கொண்டோம் .
அப்துல் கலாம் ஐயா அவர்களின் பிறந்தநாளை போற்றுவதற்காக பூம்புகார் செல்லும் வழியில் தண்ணீர் செல்லும் ஒரங்களில் மூன்று மரங்களை குடும்பத்துடன் நட்டு வைத்தோம்.
இப்படி பல நிகழ்வுகளில் நாங்கள் கலந்து கொள்ள வழிகாட்டியாக இருந்த விதையால் ஆயுதம் செய் குழுவினை சிறப்பாக நடத்தி வந்த சிங்கப்பூர் ரெ.நடராஜன் ஐயாவிற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.
இந்த கட்டுரையை படித்த நீங்கள் அனைவரும் விவசாய தினமான இன்று நம்மால் முடிந்தவரை விவசாயத்தைப் போற்றி பாதுகாப்போம் என்று உறுதிமொழி எடுப்போம்.
நம் தலைமுறையினரை பாதுகாப்பது நமது கையில் தான் இருக்கிறது என்பதை உணர்வோம்.
(த.சுகந்தி, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)