மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த.. கொண்டாடப்பட்டு வரும்.. தேசிய பாதுகாப்பு தினம்
- மயிலாடுதுறை த.சுகந்தி,M.Sc,B.Ed,B.A(Hindi)
பாதுகாப்பாய் வாழ முயற்சி செய்வோமா?
வருமுன் காப்பதே சிறந்தது என்பதை உணர்ந்து இன்றைய தினத்தை சிறப்பாக கொண்டாடுவோம்.
இன்று தேசிய பாதுகாப்பு தினம் (National Safety Day)
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 4 அன்று தேசிய பாதுகாப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த தினத்தில் தொழில் சார்ந்த நிறுவனங்கள், சாலைகள், வீடுகள் மற்றும் சமூக வாழ்க்கையில் பாதுகாப்பு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கொண்டாடப்படுகிறது.
பாதுகாப்பு குறித்த முயற்சிகளை முன்னெடுக்கும் அமைப்பு National Safety Council ஆகும். இந்த அமைப்பு 1966 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தேசிய பாதுகாப்பு தினம் முதன்முதலில் 1972 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது.
தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களின் உயிரையும் உடல்நலத்தையும் பாதுகாப்பது முக்கியம் என்பதை உணர்ந்தார்கள். 1960–70களில் தொழிற்சாலை விபத்துகள் அதிகமாக இருந்தன. அதனால் பாதுகாப்பு விதிமுறைகள் கடைபிடிக்கப்பட வேண்டும் என்ற அவசியம் உணரப்பட்டது. இதனை முன்னிட்டு பாதுகாப்பு விழிப்புணர்வு வாரமாகவும் (March 4–10) கடைபிடிக்கப்படுகிறது.
தொழிற்சாலை விபத்துகளை குறைப்பது எப்படி என்று தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு மாணவர்களுக்கும்,பொது மக்களுக்கும் வழங்கப்படுகிறது. தீ விபத்துகள் ஏற்பட்டால் எப்படி தடுப்பது என்பதை பற்றிய தடுப்பு விழிப்புணர்வு வழங்கப்படுகின்றன. வீடுகளில் எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று பொது மக்களுக்கு ஆலோசனை வழங்கப்படுகின்றன. சுற்றுச்சூழல் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. “Safety First” என்ற எண்ணத்தை மக்களிடையே உருவாக்கப்படுகிறது.
பாதுகாப்பாக செயல்பட நாம் பின்பற்ற வேண்டியவை:
தொழிற்சாலைகளில் இயந்திரங்களுடன் பணிபுரியும் தொழிலாளர்கள் பாதுகாப்பு உபகரணங்களான ஹெல்மெட், கையுறை, பாதுகாப்பு காலணி போன்றவற்றை கட்டாயம் அணிய வேண்டும்.
சாலை விபத்துகள் இந்தியாவில் அதிகம் நடைபெறுகின்றன. ஹெல்மெட் அணிதல், சீட் பெல்ட் அணிதல், வேக வரம்பு கடைபிடித்தல் போன்றவை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
வீடுகள் மற்றும் அலுவலகங்களில் தீ அணைப்பு கருவிகள் கட்டாயம் இருக்க வேண்டும் .
மின்சார சாதனங்களை கவனமாக பயன்படுத்த வேண்டும்.
மருத்துவமனைகளில் சுத்தம் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகள் கடைபிடிக்கப்பட வேண்டும்.
கைப்பேசியில் பேசிக்கொண்டே வாகனங்கள் ஓட்டுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
சாலைகளில் செல்லும் பொழுது சாலை விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
உணவே மருந்து என்று வாழ்ந்து நோயின்றி நமது உடலை பாதுகாக்க வேண்டும்.
நமது முன்னோர்கள் பயன்படுத்திய பாரம்பரிய பொருட்களை பயன்படுத்தி இயற்கையாய் வாழ முயற்சி செய்ய வேண்டும்.
செயற்கை முறையில் உற்பத்தி செய்வது தவிர்க்க வேண்டும்.
மார்ச் 4 முதல் மார்ச் 10 வரை பாதுகாப்பு வாரமாகக் கொண்டாடப்படுகிறது.இந்த நாட்களில் நாம் அனைவரும் பாதுகாப்பாய் செயல்பட்டு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்.
விலை உயர்ந்த பொருட்களையும் ,நமது குழந்தைகளையும் பாதுகாப்பது நமது கடமை என்பதை உணர வேண்டும்.
(த.சுகந்தி, மயிலாடுதுறையைச் சேரந்தவர். அருள் தமிழ் இலக்கியம்,மயிலாடுதுறை அமைப்பை நடத்தி வருகிறார். ஆத்திச்சூடி 109, நாலடியார், திருக்குறள் போன்ற தொகுப்பு நூல்களில் சிறுகதை ஒன்று எழுதி உள்ளார். பாரதியார் நவீன ஆத்திச்சூடி எழுதி மகாகவி பாரதி விருது பெற்றுள்ளார். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறார்)