காவியக் கவிஞர் வாலி.. தமிழர்களின் தவிர்க்க முடியாத கலை முகவரி!

Su.tha Arivalagan
Oct 29, 2025,04:11 PM IST

- எம். கே. திருப்பதி


திருவரங்க தீவு ஆழ்வார்களை அருளியதுபோல், அளவற்ற அறிவாளிகளையும் அள்ளி தெளித்து இருக்கிறது. அதில் முதன்மையான முக்கியஸ்தர்களில் அய்யா காவியக் கவிஞர் வாலி தவிர்க்க முடியாத முகவரி!


ஸ்ரீரங்கத்து தெரு மண்ணில் தினம் அலைந்த ஒருவர், புகழின் கோபுரம் ஏறி கொடி நாட்டியது ஆச்சரியம் இல்லை. அரங்கத்து புழுதி மண் அபயம் காக்கும் விபூதி தானே?


திருவரங்கத்தில் சிறிது காலம் வாழ்ந்தவருக்கு வைகுண்ட பிராப்தம் வாய்க்கும். எனில் அங்கு காலங்காலமாய் கர்மாவை கழிக்கும் கட்டைகளுக்கு எத்தனை வைகுந்தம்?


சினிமா என்னும் மாய உலகில் சீவனை பிணிக்கும் முன்பே,




" கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன் "

கந்தனை நினைத்து தன் கர்ம சிரத்தை காட்டியவர்.


" அம்மா என்று அழைக்காத உயிரில்லையே "


மன்னன் படத்தின் பாடல் திருச்சி ஐயப்பன் கோவிலில் கல்வெட்டாக செதுக்கி வைக்கப்பட்டுள்ளது.


ஒரு வைணவ குடும்பப் பின்னணியில் வந்ததால் என்னவோ, அவர் தன்னை கடைசி வரை ஆன்மீக அறத்தில்  பிணைத்துக் கொண்டார். பாரதத்திரு நாட்டின் இந்து தர்ம கொள்கையிலும் இணைத்துக் கொண்டார். தன் திருமண சடங்கை வெங்கடாஜலபதி காலடியில் தான் கட்டிக்கொண்டார்.


ராமானுஜர் வழிவந்த வைணவ வம்சாவளி என்றாலும், எம்பெருமான் முருகன் மீது மாளா பற்று வைத்தார். அதன் பின்னணி பின்னணியில் ஒரு கனமான காரணம் உண்டு.


சீரழியும் சினிமா வாழ்வில் தன்னை சீர்தூக்கி, ஆன்மீகம் இலக்கியம் சினிமா என்று பிரித்துக் கொண்டு மூன்று களங்களிலும் முத்திரை பதித்தார். 


திராவிட சேற்றில் சிக்கிக்கொண்டார் என்ற சில பல கிசுகிசுக்கள் அவர் மேல் தொடர்ந்தாலும், கொள்கை உறுதிப்பாட்டில் எல்லை தாண்டியதில்லை. பெரியாரையும் கலைஞரையும் குறிப்பிடும் பொழுது, அவர்களின் நாத்திக கொள்கையை தவிர மற்ற எல்லாம் ஏற்றுக் கொள்ளக் கூடியது என்று குழலூதினார்.


ஆன்மீக அடையாளமாக என்றும் தன் நெற்றியில் குங்குமமும் திருநீறும் இல்லாமல் என்றும் இருந்ததில்லை. இது பற்றி எம்ஜிஆர்-ரிடம் புகார் கொடுக்கப்பட்ட போது, அது அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை அதில் நாம் தலையிட வேண்டாம் நமக்குத் தேவை அவருடைய பாடல் என்று பெருந்தன்மை காட்டினார்.


எம்ஜிஆருக்கும் சிவாஜிக்கும் காதல் பாடல்களும் தத்துவ பாடல்களும் தனித்துவமானவை. அடுத்த தலைமுறை ரஜினி கமல். இவரின் பாடல் இல்லாமல் அவர்களின் ஏற்றம் இல்லை. எம்ஜிஆர் காலம் தொட்டு சிவகார்த்திகேயன் சிம்பு காலம் வரை கோலோச்சினார்.


இப்பொழுது இருந்தாலும் எழுதி குவித்து கொண்டு தான் இருப்பார். ஏனெனில் அவரின் அறிவின்  ஆழமும் ஆற்றலின் வீச்சும் அவ்வளவு விசாலமானது.


தன்னடக்கம், தலைக்கனம் இல்லாமை, அனைவரையும் அனுசரித்துப் போகும் அருள் குணம், பிடித்துப் போனால் டக்கென்று பாராட்டும் பரந்த மனம் என்று இருந்தாலும்...  உப்புக்கும் தவிட்டுக்கும் தன்மானத்தை எந்த ஒரு இடத்திலும் அடகு வைத்ததில்லை.


பெரியாரையும் பாடுவார் கலைஞரையும் பாடுவார் எம்ஜிஆரையும் பாடுவார்... அதே வாயில் கண்ணனையும் பாடுவார் முருகனையும் பாடுவார் ஈசனையும் பாடுவார் அம்மனையும் பாடுவார்... அவருக்கு பேதம் இல்லை.


சூழ்நிலை சொன்ன அடுத்த நொடி பல்லவியும் சரணமும் கடகடவென வந்து விழும் அவர் வாயிலிருந்து. சினிமாவையும் இலக்கிய உலகையும் பிரித்துப் பார்த்தவர். சினிமாவில் நான் எழுதிய பாடல்கள் சோத்துக்கு. அதே வேலை நான் இலக்கியம் படைப்பது என் மனதுக்கு...


அகிலம் அறிய அறிவித்தார் இப்படி. பொதுவெளியில் வேறொருவர் இப்படி ஒரு பகிரங்க பாய்ச்சலை பாய்வாரா? அதுதான் ஐயா வாலி.


அவர் படைத்த காவியங்களான அவதார புருஷன், பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம், ராமானுஜ காவியம் ஒவ்வொரு வீட்டிலும் கட்டாயம் இருக்க வேண்டிய பொக்கிஷங்கள். எனது வாழ்க்கையின் ஒழுக்கத்திற்கும் உயர்வுக்கும் அந் நூல்களே அறிவுக்கண் திறக்க ஆவன செய்தது.


இன்றும் என் தலைமாட்டில் தலையணையோடு தலையணையாக தவிர்க்க முடியாத நூல்களில் தலையாயது ஆனது.


ஏகலைவனுக்கு ஒரு துரோணாச்சாரி போல்... இந்த ஏங்கும் பாமரனுக்கும் அவரே துரோணாச்சாரி.  என் நெஞ்சில் நீண்ட நாளாய் தேங்கி கிடக்கிறது ஒரு ஏக்கம். ஏக்கத்தின் தாக்கம் போக்க முயன்று கொண்டு இருக்கிறேன்... அதாகப்பட்டது, ஐயா காவியக் கவிஞர் வாலி அவர்களுக்கு ஒரு நினைவு மண்டபம் அமைப்பது மற்றும் அவர் வாழ்ந்த இல்லத்தின் தெருவுக்கு அவர் பெயரை சூட்டுவது.


முயற்சித்துக் கொண்டே இருக்கிறேன் முயற்சி திருவினையாக்கும் என்ற நம்பிக்கையுடன் நான்...!


அய்யாவின் 94-வது பிறந்த நாளில் அவரை நினைவு கூறுவோம்


(எழுத்தாளர் எம்.கே. திருப்பதி.. திருப்பூரைச் சேர்ந்தவர். நூல் படிப்பதில் ஆர்வம். அதன் நீட்சியாக கொஞ்சம் கொஞ்சம் எழுத்துப்பணி.  98 ஆம் ஆண்டிலேயே 4 சிறுகதை, கவிதைகள், துணுக்குகள் பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது. திருச்சி ஆல் இந்தியா வானொலி நிலையத்தில் கவிதை வாசித்திருக்கிறார். காவியக் கவிஞர் வாலி. கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமாரின் தீவிர ரசிகன். திருவண்ணாமலை தடங்கள் பதிக்கும் பன்னாட்டு தமிழ்ச் சங்கத்தில் நடந்த பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)