Propse Day: காதலுக்கு முன்பு.. அன்பை வெளிப்படுத்துங்க.. அதை உணர்த்துங்க!

Su.tha Arivalagan
Feb 08, 2026,01:11 PM IST
- மயிலாடுதுறை த.சுகந்தி, M.Sc,B.Ed

பிப்ரவரி மாதம் என்றால்  நம் நினைவிற்கு வருவது காதலர் தினம். அந்த காதலர் தினத்தில் ஒன்றான Propose day (அன்பை வெளிப்படுத்தும் சிறப்பு நாள்) பற்றி பார்ப்போம்.

பிப்ரவரி மாதம் காதலர்களுக்கு மிகுந்த உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் தரும் மாதமாகக் கருதப்படுகிறது. இந்த மாதம் முழுவதும் “வாலண்டைன் வாரம்” என அழைக்கப்படும் சிறப்பு நாட்கள் கொண்டாடப்படுகின்றன. அந்த வாரத்தில் பிப்ரவரி 8 ஆம் தேதி “புரபோஸ் தினம் (Propose Day)” என உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. 

ஒருவர் தன் மனதில் உள்ள அன்பை, காதலை, நட்பை அல்லது வாழ்நாள் துணையென எண்ணும் உணர்வுகளைத் துணிவுடன் மற்றொருவரிடம் வெளிப்படுத்தும் நாளே புரபோஸ் தினம்.



புரபோஸ் தினம் வாலண்டைன் தினத்திற்கு முன்பாக கொண்டாடப்படும் முக்கியமான நாள்களில் ஒன்றாகும். மேற்கத்திய கலாச்சாரங்களில் உருவான இந்த நாள், இன்றைக்கு இந்தியா உட்பட பல நாடுகளில் இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளது.

“Propose” என்ற ஆங்கிலச் சொல்லுக்கு “முன்மொழிதல்”, “உள்ளுணர்வுகளை வெளிப்படுத்துதல்” என்ற பொருள் உண்டு. காதல் மட்டுமல்லாமல், உண்மையான நட்பு, மரியாதை, இணை வாழ்க்கை பற்றிய விருப்பம் ஆகியவற்றையும் தெரிவிக்க இந்த நாள் பயன்படுத்தப்படுகிறது.

இந்த நாளின் முக்கியத்துவம், உணர்ச்சிகளை மறைக்காமல் வெளிப்படுத்தும் தைரியம் என்பதிலேயே இருக்கிறது. மனித வாழ்க்கையில் பல நேரங்களில் அன்பு இருந்தும் அதை வெளிப்படுத்தத் தயக்கம் இருக்கும். புரபோஸ் தினம் அந்த தயக்கத்தை உடைத்து, மனதில் இருக்கும் உண்மையை சொல்ல ஊக்குவிக்கிறது.

நண்பர்கள் நன்றியையும் நேசத்தையும் வெளிப்படுத்துகிறார்கள். எதிர்கால வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் முன்மொழிவுகள் நடைபெறுகின்றன. இதனால் உறவுகளில் வெளிப்படைத்தன்மையும் நம்பிக்கையும் அதிகரிக்கிறது.

இந்திய சமூகத்தில் காதல் குறித்து வெளிப்படையாக பேசுவது ஒரு காலத்தில் ஏற்றுக்கொள்ளப்படாத ஒன்று. ஆனால் கால மாற்றத்தோடு எண்ணங்களும் மாறி வருகின்றன. புரபோஸ் தினம் போன்ற நாட்கள், அன்பு என்பது தவறல்ல, அது மனிதனின் இயல்பான உணர்வு என்பதை இளைஞர்களுக்கு உணர்த்துகிறது.

அதே நேரத்தில், இந்த நாளைக் கொண்டாடும் போது மரியாதை, மற்றவரின் சம்மதம் இவை மிகவும் முக்கியமானவை. 
ஒருவரின் உணர்வுகளை மதிக்காமல், அழுத்தம் கொடுப்பது அன்பாகாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

புரபோஸ் தினத்தில் தங்கள் காதலை வெளிப்படுத்த பலரும் பல்வேறு முறைகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

நேருக்கு நேர் நின்று மனதில் உள்ளதை நேர்மையுடன் சொல்வது மிகச் சிறந்த முறை. இது உணர்ச்சிகளை ஆழமாக எடுத்துச் செல்லும்.

காதல் கடிதங்கள், கவிதைகள், கை எழுத்து குறிப்புகள் இன்று கூட தனித்துவமான மதிப்பை பெற்றுள்ளன. மலர்கள், சாக்லேட்கள், கைக்கடிகாரங்கள், புத்தகங்கள் போன்ற சிறிய பரிசுகள் மூலம் அன்பை வெளிப்படுத்தலாம்.

சமூக வலைதளங்களில் வீடியோ, படம், செய்தி மூலம் புரபோஸ் செய்வதும் இன்றைய காலத்தில் அதிகரித்துள்ளது.
புரபோஸ் தினத்தில் ஒருவர் காதலை வெளிப்படுத்தும் போது, அது ஏற்றுக்கொள்ளப்படாமலும் இருக்கலாம். மறுப்பு என்பது அவமதிப்பு அல்ல என்பதை புரிந்து கொள்வது மிக அவசியம்.

மற்றவரின் முடிவை மரியாதையுடன் ஏற்றுக்கொள்வதே உண்மையான பண்பாட்டைக் காட்டுகிறது. மறுப்பை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும் வாழ்க்கையின் ஒரு பெரிய பாடமாகும்.  இந்த நாள் இளைஞர்களுக்கு சில முக்கியமான வாழ்க்கைப் பாடங்களை கற்றுத் தருகிறது.

உணர்ச்சிகளை நேர்மையாக வெளிப்படுத்துதல், பிறரின் சுதந்திரத்தை மதித்தல், பொறுப்புடன் காதலை அணுகுதல், 
உறவுகளில் நம்பிக்கை கட்டமைத்தல், இதனால், புரபோஸ் தினம் வெறும் கொண்டாட்ட நாள் அல்ல. பண்பாட்டு விழிப்புணர்வு தினமாகவும் விளங்குகிறது.

காதல் மற்றும் திருமணம் ஆகியவை ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையோடு குடும்பத்தின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கின்றன. 

புரபோஸ் தினம் கொண்டாடப்படும் போதிலும், குடும்ப மதிப்புகள், சமூக மரபுகள் ஆகியவற்றை மறக்காமல் பொறுப்புடன் நடந்து கொள்வது அவசியம். காதல், பொறுப்பு, புரிதல் ஆகியவை ஒன்றோடொன்று இணைந்தாலே ஒரு உறவு சிறப்பாக அமையும்.
 
புரபோஸ் தினம் என்பது, அன்பை வெளிப்படுத்தும் தைரியத்தின் சின்னம். அது காதலுக்கே மட்டுமல்ல.மனித உறவுகளின் நேர்மைக்கும் மரியாதைக்கும் ஒரு அடையாளம். உண்மையான அன்பு சுயநலமற்றது.அது புரிதலையும் பொறுப்பையும் உள்ளடக்கியது.

இந்த நாள் மூலம் நாம் உணர வேண்டியது, அன்பை வெளிப்படுத்தும் போது மனிதநேயமும் பண்பாடும் முன்னிலையில் இருக்க வேண்டும் என்பதே ஆகும்.

(த.சுகந்தி, மயிலாடுதுறையைச் சேரந்தவர். அருள் தமிழ் இலக்கியம்,மயிலாடுதுறை அமைப்பை நடத்தி வருகிறார். ஆத்திச்சூடி 109, நாலடியார், திருக்குறள்  போன்ற தொகுப்பு நூல்களில் சிறுகதை ஒன்று எழுதி உள்ளார். பாரதியார் நவீன ஆத்திச்சூடி எழுதி மகாகவி பாரதி விருது பெற்றுள்ளார். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறார்)