சங்கடஹர சதுர்த்தி.. ஐந்து கரத்தனை.. யானை முகத்தனை.. புந்தியில் வைத்து போற்றுவோம்!

Swarnalakshmi
Apr 16, 2025,10:33 AM IST

- ஸ்வர்ணலட்சுமி


ஐந்து கரத்தனை 

யானை முகத்தனை

இந்தின் இளம்பிறை 

போலும் எயிற்றனை 

நந்தி மகன் தனை 

ஞானக்கொழுந்தினை 

புந்தியில் வைத்து 

அடி போற்றுகின்றேனே (திருமந்திரம்)


16. 4 .2025 புதன்கிழமை சித்திரை மூன்றாம் தேதி தேய்பிறை சங்கடஹர சதுர்த்தி. ஒவ்வொரு மாதம் வரும் சங்கடஹர சதுர்த்திகளுள் சித்திரை மாதம் வரும் சங்கடஹர சதுர்த்தி மிக மிக விசேஷமானது. இந்த நன்னாள் "விகட சங்கடஹர சதுர்த்தி "என்று அழைக்கப்படுகிறது.




சித்திரை மாத சங்கடஹர சதுர்த்தி விரதம் என்பது மிக முக்கியமான விரதங்களில் அதீத முக்கியத்துவம் வாய்ந்த தினமாக வழிபாடு செய்யப்படுகிறது. "சங்கடஹர "என்றாலே சங்கடங்களை அதாவது துன்பங்களை அகற்றுபவர் என்று பொருள். இவ் விரதம் நம் வாழ்வில் ஏற்படும் சங்கடங்கள், இடையூறுகள் அனைத்தையும் விளக்கி நிம்மதியை அளிக்க கூடியதாக நம்பப்படுகிறது.


சதுர்த்தி திதி நேரம்: ஏப்ரல் 16ஆம் தேதி மதியம் 1 :17 pm மணிக்கு துவங்கி ஏப்ரல் 17ஆம் தேதி வியாழன் மாலை 3: 23 pm மணி வரை உள்ளது.


புதன்கிழமை மற்றும் விகட சங்கடஹர சதுர்த்தி ஒரே நாளில் வருவது மிகவும் புண்ணியமானது ஆகும். இந்த விரதம் மேற்கொள்ள விநாயகர் அருள் கிடைக்கும். படிப்படியாக அவரவர் சங்கடங்கள் நீங்கும் என்று நம்பப்படுகிறது.


விநாயகர் அஷ்டோத்திரம், சங்கட நாசனம் ஸ்தோத்திரம் போன்ற மந்திரங்கள் பாராயணம் செய்யலாம் .விநாயகர் மூல மந்திரம் 108 முறை மனதில் சொல்லிக் கொண்டே இருப்பது சிறப்பு.


இந்த நன்னாளில் பக்தர்கள் காலை முதல் சந்திரோதயம் வரை விரதம் கடைபிடிப்பர். சந்திரோதயத்திற்கு பிறகு விநாயகர் பூஜை செய்து சந்திரனை தரிசனம் செய்து விரதத்தை முடிப்பர்.


சங்கடஹர சதுர்த்தி விரதம் கடைபிடிப்பதனால் அனைத்து தடைகள் நீங்கி மன நிம்மதி பெருகும். பண பிரச்சினைகள் ,கடன் சுமைகள் நீங்கும் .தொழில், வியாபாரம் சிறக்க, கல்வி சிறக்க ,உயர் பதவி கிடைக்க ,திருமண பாக்கியம் கிடைக்கப்பெற்று அனைத்து வளங்களும் நலங்களும் அருள்வார் விநாயகர்.


விநாயகருக்கு செம்பருத்திப்பூ, அருகம் பூமாலை  சாற்றி வழிபடுவது சிறப்பு. மோதகம், லட்டு போன்ற இனிப்பு பொருட்கள் நைவேத்தியமாக வைத்து குழந்தைகளுக்கு பிரசாதமாக கொடுப்பது மிகவும் நல்லது. வீடுகளிலும் பூஜைகள் இன்று மாலை சங்கடங்களை போக்கும் 'விகட சங்கடகர சதுர்த்தி' விரதம் கடைபிடித்து முழுமுதற் கடவுள்  விநாயகனை வழிபடுவோம்.


மேலும் ஆன்மீக தகவல்களுக்கு இணைந்திருங்கள் தென் தமிழுடன் .உங்கள் ஸ்வர்ணலட்சுமி.