Classical Tamil: செம்மொழியாகிய தமிழ் மொழியே!
- இரா. மும்தாஜ் பேகம்
இந்திய மொழிகளில் செம்மொழி (Classical Language) தகுதியைப் பெற்ற முதல் மொழி தமிழ் ஆகும். 2004-ஆம் ஆண்டு ஜூன் 6-ஆம் தேதி மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசால் இத்தகுதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அப்போது தமிழ்நாட்டில் முதல்வராக இருந்தவர் கலைஞர் கருணாநிதி.
தொன்மை, தனித்தன்மை, செழுமையான இலக்கண மற்றும் இலக்கிய வளம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தமிழ் செம்மொழியாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திருச்சியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் இரா. மும்தாஜ் பேகம் எழுதிய கவிதை:
செம்மொழியாகிய தமிழ் மொழியே...
தமிழ் மொழியே! தமிழ் மொழியே!
அமிழ்தினும் இனியநல் தமிழ் மொழியே
தொன்மை வாய்ந்த தமிழ் மொழியே
தொல்காப்பியம் தந்த தமிழ் மொழியே
வள்ளுவன் முதல் வாலி வரை
வாழ்த்திப் பாடிய தமிழ் மொழியே
சிறப்புகள் நிறைந்த தமிழ் மொழியே
செம்மொழியாகிய தமிழ் மொழியே
அசைச்சீர் அடிகளில் பெற்றிருப்பாய்
அணியெனும் அணிகலன் பூண்டிருப்பாய்
முரண் தொடை மூச்சாய்பெற்றிருப்பாய்
முத்தமிழ் சுவையுடை தமிழ் மொழியே
பத்துப்பாட்டும் படைத்து நின்றாய்
பதினெண்கீழ்க்கணக்காய் பரவினின்றாய்
எட்டுத்தொகையும் கொண்டிருந்தாய்
எட்டு திசைக்கும் குறள் தந்தாய்
ஐவகை இலக்கணம் கொண்டிருப்பாய்
ஐம்பெரும் காப்பியம் படைத்து நின்றாய்
அத்துனை சிறப்புடை தமிழ் மொழியே
உன்னை அள்ளிப் பருகனும் தமிழ் மொழியே
(இரா.மும்தாஜ் பேகம், ஓய்வு பெற்ற ஆசிரியர், கிரியேட்டிவ் ரைட்டர்ஸ், திருச்சி)