நிஜங்களை நிழலாய் மாற்றி நினைவின் அடுக்குகளில் அழகாய் மாட்டி...!

Su.tha Arivalagan
Aug 19, 2026,05:07 PM IST

- முனைவர் தி. தங்கலட்சுமி


நிழற்படங்கள் 

காலம் காலமாய்

கடந்து வந்த கதை கூறும் 

வரலாற்றின் சாட்சியங்கள்! 


காலங்கடந்தும் 

பசுமை குன்றா 

நினைவின் சுரங்கங்கள்!

 

காலத்தையே 

நொடியில் உறையச் செய்து, 




உறைந்த அந்நொடியை

புகைப்படமாய் மாற்றி 

உரையிலிட்டுத் தரும் கலை! 


உயிர்த்துடிப்பான தருணத்தைத் 

துல்லியமாய் நிறுத்தி...


நிறுத்திய கணத்தை... 


கனகச்சிதமாய்

காமிராவின்

ஒற்றைக் கண்ணில்

சிறைப்பிடித்து...


சட்டத்தின் உள் அடைத்து...


களிப்பின் தருணத்தை

கணங்கள்தோறும் 

மீட்டுருவாக்கும்

மகிழ்ச்சிக்கலை!


நிஜங்களை நிழலாய் மாற்றி 

நினைவின் அடுக்குகளில் 

அழகாய் மாட்டி...


கடந்து வந்த வாழ்வின் 

பாதைக்கு

வெளிச்சம் சேர்க்கும் 

ஒளிப்படக் கலை!


கடந்த நூற்றாண்டின் 

கனவின் சாட்சியாய்

கருப்பு வெள்ளைப் 

புகைப்படங்கள்! 


படங்கள்தோறும்

வண்ணக் கனவுகளைத் 

தாங்கிய காட்சியகம்! 


இல்லங்கள்தோறும் சுவரலங்காரமாய்த் 

தொங்கிடும் படச்சட்டங்கள்!


சட்டங்களின் உள்ளிருந்து 

சந்ததியரின் வாழ்வை 

வழிப்படுத்தும் முன்னோர்!


பெறுமானம் ஆயிரங்களில் வாங்கிய 

திறன்பேசியின் கைப்படத்தைவிட

சென்ற நூற்றாண்டின்

செல்லரித்த கருப்பு வெள்ளைப் 

படங்கள் கோடி பெறும்!


(முனைவர் தி. தங்கலட்சுமி.. அண்ணாமலையாரின் திருவடி நிழலில் தஞ்சம் புகுந்து, திருவண்ணாமலையின் தெய்வீக மலை தரிசனத்தின் அருட்பார்வையின் கீழ் வதிந்து சுவாசிக்கும் ஜீவன்! பேரறிவின் கீழ் அடிபணிந்து வாழும் சிற்றறிவு ஜீவி! அன்னை தந்தையர், உடன் பிறந்தாரோடு ஆனந்தமாக இன்பம் களிக்கும் பிறவி! இணையவழியில் ஈடுயிணையில்லா தொன்மைத் தமிழ்மொழியின் நயம் எடுத்தியம்பும் ஆசிரியை! தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பவர்).