சென்னையில்.. தக்காளி விக்கிற விலைக்கு.. சட்னி அரைக்க முடியாது போலயே.. கிலோ ரூ. 80!

Su.tha Arivalagan
Nov 24, 2025,01:06 PM IST
சென்னையில் தக்காளி விலை திடீரென உயர்ந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி கோயம்பேடு மொத்த சந்தையில் ரூ.60 ஆகவும், சில்லறை கடைகளில் ரூ.70 முதல் ரூ.80 வரையிலும் விற்பனையாகிறது. இது பொதுமக்கள், காய்கறி வியாபாரிகள் மற்றும் மொத்த வியாபாரிகளுக்கு புதிய கவலையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் வெறும் ரூ.15 க்கு விற்ற தக்காளி, இப்போது திடீரென உயர்ந்திருப்பது பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த சனிக்கிழமை அன்று மொத்த சந்தையில் தக்காளி விலை ரூ.50 ஆக இருந்தது. ஆனால், சில்லறை கடைகளில் அப்போதே ரூ.70 முதல் ரூ.80 வரை விற்பனையானது. நவம்பர் மாத தொடக்கத்தில் மெதுவாக உயரத் தொடங்கிய தக்காளி விலை, பின்னர் திடீரென கடுமையாக உயர்ந்துள்ளது. முக்கிய உற்பத்திப் பகுதிகளில் இருந்து தக்காளி வரத்து குறைந்ததே இதற்குக் காரணம் என்று வியாபாரிகள் கூறுகின்றனர்.



முன்பு தினமும் சுமார் 150-180 லாரிகளில் தக்காளி வந்து கொண்டிருந்தது. ஆனால் இப்போது வரத்து மிகவும் குறைந்துவிட்டது. அதனால்தான் விலை இப்படி ஏறிவிட்டது என்கிறார்கள். ஆன்லைன் மளிகைக் கடைகளிலும் தக்காளி விலை ரூ.64 முதல் ரூ.86 வரை விற்பனையாகிறது. கூட்டுறவு பண்ணைப் பசுமைக் கடைகளில் மட்டும் ஒரு கிலோ தக்காளி ரூ.58 க்கு கிடைக்கிறது. இதுவும் ஒரு மாதத்திற்கு முன்பு இருந்த விலையை விட பல மடங்கு அதிகம்.

தக்காளி விலை உயர்வால் வீட்டு பட்ஜெட் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். கடந்த மாதத்தை விட இப்போது காய்கறிகளுக்கு அதிகமாக செலவு செய்கிறோம். தக்காளி ஒரு ஆடம்பரமாகிவிட்டது என்று இல்லத்தரசிகள் கவலையுடன் கூறுகின்றனர்.

விவசாயிகள், உற்பத்திச் செலவு அதிகரிப்பு மற்றும் சீரற்ற மழைப்பொழிவைக் காரணம் காட்டுகின்றனர். அதேசமயம், நீண்ட நாள் நஷ்டத்துக்குப் பிறகு இப்போதுதான் தங்களுக்கு சரியான விலை கிடைத்திருப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். வரும் வாரங்களில் புதிய வரத்து சந்தைக்கு வந்த பிறகுதான் விலை சீராகும் என்று வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர். தக்காளி வரத்து குறைவதற்கும், வானிலை மாற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளுக்கும் வியாபாரிகள் இந்த விலை உயர்வுக்குக் காரணம் கூறுகின்றனர்.