ஐப்பசி பெளர்ணமி.. சிவபெருமானுக்கு கூடுதல் சிறப்பு.. கார்த்திகை பெளர்ணமிக்கு நிகரானது!
- ஸ்வர்ணலட்சுமி
ஐப்பசி பௌர்ணமி.. விசுவாவசு வருடம் 20 25 நவம்பர் மாதம் 5ஆம் நாள் புதன்கிழமை பௌர்ணமி வருகிறது. இந்த நாள் சிவ வழிபாட்டிற்கு மிகவும் ஏற்ற நாளாகும். சிவபெருமானுக்கு வருடத்திற்கு ஒரு முறை அன்னாபிஷேகம் நடைபெறும்.ஐப்பசி மாத பௌர்ணமி என்பது கூடுதல் சிறப்புடைய நாளாக அமைந்துள்ளது. சித்ரா பௌர்ணமி மற்றும் கார்த்திகை பௌர்ணமிக்கு நிகராக முக்கியத்துவம் கொண்டது இந்த ஐப்பசி மாதம் வரும் பௌர்ணமி ஆகும்.
நேரம்: நவம்பர் நான்காம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு 9:43 மணிக்கு துவங்கி நவம்பர் 5 ஆம் தேதி புதன்கிழமை இரவு
7 :27 மணி வரை பௌர்ணமி திதி வருகிறது. இந்த நாளில் அக்னித் தலமான திருவண்ணாமலை கிரிவலம் வருவது சிறப்பானதாகும். சிவனே மலையாக வீற்றிருக்கும் திருத்தலமாக அமைந்துள்ள திருவண்ணாமலை கோவிலில் மற்றும் அனைத்து சிவன் கோவில்களிலும் சிவபெருமானின் லிங்கத் திருமேனிக்கு அன்னாபிஷேகம் ஐப்பசி பௌர்ணமியில் நடைபெறுவது வழக்கம்.
சந்திரனின் ஆதிக்கம் நிறைந்த பௌர்ணமி தினம் சிவ வழிபாட்டிற்கும், கிரிவலம் செல்வதற்கும் மிகவும் உன்னதமான நாளாகும்.இந்த நாளில் கிரிவலம் செல்வது ஆன்மீக ரீதியாக மிகவும் நல்லது. தமிழகத்தில் பல மலைக் கோயில்களில் கிரிவலம் செய்து பிரார்த்தனை செய்கிறார்கள்.
திருவண்ணாமலையில் கிரிவலம் செய்வது பெரும் புண்ணியம் ஆகும். இக்கோவிலுக்கு வெளிமாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகை தந்து கிரிவலம் செய்கின்றனர். கிரிவல பாதையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். சுமார் 14 கிலோமீட்டர் தொலைவு கொண்ட திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் பௌர்ணமி நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செய்வது வழக்கமாக வைத்துள்ளனர்.
திருவண்ணாமலை பௌர்ணமி நாளில் கிரிவலம் செய்து சிவபெருமானை வழிபடுவதனால் பாவங்கள் அனைத்தும் நீங்கி புண்ணியம் பெருகும் என்பது ஐதீகம். இந்த நாள் வைக்கும் வேண்டுதல்கள் சிவபெருமான் நிறைவேற்றுவார் என்றும் நம்பப்படுகிறது. கிரிவலம் செல்லும் பொழுது "ஓம் நமசிவாய" எனும் மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே செல்வது மிகவும் நல்லது. அவரவர்கள் நினைத்த காரியங்கள் கை கூடும். மேலும் திருமண தடை நீங்கவும் பலர் கிரிவலம் மேற்கொள்வார்கள்.
நினைத்தாலே முக்தியை தரும் முக்தி தலங்களில் முதன்மை யானதாகவும், பஞ்சபூத தலங்களில் அக்னி தல மாகவும் பெரும் சிறப்பிற்கு உரியது திருவண்ணாமலை. இக்கோவிலில் கிரிவலம் செய்து,அஷ்ட லிங்கங்களை வழிபாடு செய்வதனால் வாழ்நாளில் செய்த பாவங்கள் அனைத்தும் போக்கி புண்ணியத்தை தரும்.
கிரிவலம் செய்ய உகந்த நேரம்:
நவம்பர் நான்காம் தேதி இரவு 9:43 மணிக்கு தொடங்கி நவம்பர் 5ஆம் தேதி மாலை 6: 48 மணி வரை திருவண்ணாமலை கிரிவலம் செய்து வழிபாட்டிற்கு ஏற்ற நல்ல நேரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் பௌர்ணமி கிரிவலம் வருவது அதீத சிறப்பாகும்.
"கிரி "என்றால் "மலை" மற்றும் "வலம் "என்றால் "சுற்றுதல்" என்று பொருள்படும். ஒரு புனித இடத்தை சுற்றி வலம் வருவதே 'கிரிவலம் 'ஆகும். கிரிவலம் செய்வதன் மூலம் தெய்வத்தை வலம் வந்து வழி படுவதாகவும் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் நீங்கி தெய்வத்தின் அருளை பெறுவதாகவும் நம்பப்படுகிறது.
கிரிவலம் செல்லும் முறை :
பௌர்ணமி திதி தொடங்கும் நேரத்திற்கு பிறகு கிரிவலம் செல்லத் தொடங்கி பௌர்ணமி திதி முடியும் நேரத்திற்குள் கிரிவலத்தை நிறைவு செய்வது மிகவும் சிறப்பானதாகும். பௌர்ணமி நாளில் கிரிவலம் செல்வது தெய்வீக அருளை பெற மிகச்சிறந்த நாள்.
குறிப்பாக செருப்பு அணியாமல் கிரிவலம் செய்வது அதீத பயனைத் தரும்.
திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வதால் சந்திரனின் கதிர்கள் மலை மீது பட்டு கிரிவலம் வரும் பக்தர்களின் மீது எதிரொலிக்கும் போது அவர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டு,வாழ்க்கை வளம் பெருகும் என்பது ஐதீகம். மேலும் இன்று திருமண நாள் மற்றும் பிறந்த நாள் கொண்டாடும் அனைவருக்கும் தென் தமிழ் சார்பாக நல்வாழ்த்துக்கள். தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி.