உலக சிக்கன நாள் (World Thrift Day )/ (World Savings Day ).. "சிறுதுளி பெருவெள்ளம்"!
- ஸ்வர்ணலட்சுமி
"சிறுதுளி பெருவெள்ளம்"- சிறுக சிறுக சேர்த்தால் தானே பாதுகாப்பான நல்வாழ்வு வாழ முடியும். உலக சிக்கன நாள் 2025 உலக அளவில் அக்டோபர் 31 வெள்ளிக்கிழமை அன்று அனுசரிக்கப்படுகிறது. இருப்பினும் இந்தியாவில்,"சிக்கன நாள் "தேதி வேறுபடும்.
1984 ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் படுகொலை செய்யப்பட்டதால் அந்த நாளை தவிர்த்து அக்டோபர் 30ம் தேதி "உலக சிக்கன நாள்" இந்தியாவில் அனுசரிக்கப்படுகிறது.
உலக சிக்கன நாள் முக்கியத்துவம்: மக்களிடையே சேமிப்பின் முக்கியத்துவத்தையும்,நிதி பாதுகாப்புக்கான விழிப்புணர்வையும் ஏற்படுத்த இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இது தனிப்பட்ட மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு சேமிப்பு எவ்வாறு அவசியம் என்பதை வலியுறுத்துவதற்காகவே கொண்டாடப்படுகிறது.
1924 ஆம் ஆண்டு இத்தாலியின் மிலான் நகரில் நடந்த சர்வதேச சேமிப்பு வங்கி மாநாட்டின் போது அக்டோபர் 31ஆம் தேதி "உலக சிக்கன தினமாக" அறிவித்தனர். இந்தியாவில் அக்டோபர் 30ஆம் தேதி உலக சிக்கன நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.
ஒவ்வொரு நாளும் பொழுதெல்லாம் வேர்வை சிந்தி உழைத்து, களைத்து, கிடைத்த வருமானத்தில் அன்றைய பொழுதை கழித்த பின்னர் மீதமுள்ள பணத்தை அடுத்த நாளைக்காக கிழிந்து போன ஆடையில் முடிந்து கொள்ளும் வறுமையில் செம்மையான வாழ்க்கை நடத்துகின்றவர்களின் சேமிப்பு வழக்கம் என்பது இன்றைய காலங்களில் வங்கிகளிலும் இல்லாத ஆச்சரியப்படுத்தும் சேமிப்பு திட்டமாகும். ஆகவே சேமிப்பதற்கு முந்தைய நிலை என்றால் "சிக்கனம்" என்பதே ஆகும்.
கொஞ்சமாவது சிக்கனமாக இருந்தால் தான் சேமிக்க முடியும் என்பதே யதார்த்தமான உண்மை இன்றைய வாழ்க்கை முறையில். எதிர்கால நல் வாழ்விற்கு சேமிப்பு என்பது மிகவும் அவசியமானது. நாம் சம்பாதிக்கும் பணத்தை விட அதனை சிறுக சிறுக சேமிப்பது என்பது ஒவ்வொருவர் வாழ்விலும் அவசியம். சேமிப்பு என்பது பணத்தை மட்டும் அல்ல.நாம் உண்ணும் உணவு,குடிநீர், ஆடம்பரமான ஆடை அணிகலங்களுக்கு செலவழிக்காமல், நேரம், பெட்ரோல், வீட்டில் உபயோகப்படுத்தும் அனைத்து உணவு பொருட்கள், இயற்கை வளங்கள், மின்சாரம் என அனைத்தையும் உள்ளடக்கியது. "சிக்கனமும் சேமிப்பும்" ஒரு குடும்பத்திற்கு மட்டும் அல்லாமல் நாட்டிற்கும் இரு கண்கள் போன்றது. ஒவ்வொரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் சிக்கனமும், சேமிப்பும் பெரும் பங்கு வகிக்கிறது.
இத்தாலியின் மிலான் நகரில் 1924 ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச சேமிப்பு வங்கிகளின் சிக்கன மாநாட்டிற்கு பல சேமிப்பு வங்கிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டதன் பிறகு மக்கள் அனைவரும் சிக்கனத்தை அறிய வேண்டும் என '"உலக சிக்கன தினம்" அறிமுகப்படுத்தப்பட்டு கொண்டாடப்படுகிறது.
நோக்கம்:
சேமிப்பு மற்றும் சிக்கனம் போன்றவை பற்றி மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டும் என்பதே இந்த உலக சிக்கன தினம் உருவாக்கப்பட்டதன் முக்கிய நோக்கமாகும்.
சிக்கனமும், சேமிப்பும் நம் வாழ்வின் முக்கிய அம்சங்கள் ஆகும். "சிக்கனம் வீட்டை காக்கும், சேமிப்பு நாட்டை காக்கும் ". "சிறுகக்கட்டி பெருகவாழ்" என்பது முதுமொழி.
பெற்றோர் குழந்தைகளுக்கு உண்டியலில் பணத்தை சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி, தங்களுக்கு கிடைக்கும் சிறு சிறு தொகையை அதில் சேர்த்து வைப்பதை ஊக்குவிக்க வேண்டும். பெரியவர்கள் பிறந்த நாள் மற்றும் பண்டிகை நாட்களில் பிள்ளைகளுக்கு அன்பளிப்பாக கொடுக்கும் தொகையை உண்டியலில் போட்டு சேமித்து வையுங்கள்,என்பதற்காக அவர்களுக்கு பரிசு பொருளாக உண்டியலை வாங்கிக் கொடுப்பது, அவர்களை சிறுவயதில் கிடைக்கும் பணத்தை செலவழிக்காமல் சிக்கனமாக சேர்த்து வைக்கும் ஆர்வத்தை தூண்டுவதாகும்.
"வரவு எட்டணா செலவு பத்தணா அதிகம் ரெண்டணா கடைசியில் துந்தனா... து ந்தனா... " இந்த சினிமா பாடல் அனைவரிடத்தும் பிரபலமானது மட்டுமல்ல தத்துவம் நிறைந்தது. இந்த பாடல் 1967 ஆம் ஆண்டு கவிஞர் கண்ணதாசன் "பாமா விஜயம்" எனும் திரைப்படத்திற்காக அன்றே எழுதி சிக்கனத்தின் மேன்மையை உணர்த்துவதை நாம் என்றும் நினைவு கொள்வோமாக.... ஆடம்பரத்திற்காக அதீத செலவு செய்யாமல், பணத்தை வீணாக்காமல், அத்தியாவசிய செலவு செய்து சிக்கனமாக இருந்து சேமிப்பதை உணர்த்தும் பாடல்.
நாம் கடைப்பிடிக்க வேண்டியவை :
உலக சிக்கன நாளில் நாம் கடைப்பிடிக்க வேண்டியவை அன்றாட வாழ்வில் ஒவ்வொருவரும் சிக்கனமாக இருக்க முயற்சி செய்ய வேண்டும்.
தனிநபர் மற்றும் குடும்பத்தின் எதிர்கால நலனுக்காக சேமிக்கும் பழக்கம் வங்கிகளிலோ, தபால் நிலையங்களிலோ சேமிப்பது நன்மை பயக்கும்.
மின்சாரம்,தண்ணீர், உணவு, பெட்ரோல் போன்றவற்றை கவனமாக பயன்படுத்த வேண்டும்.
அத்தியாவசிய தேவைகள், அடிப்படை தேவைகளுக்கு மட்டுமே செலவு செய்து மீதமுள்ள தொகையை சேமிக்க வேண்டும்.
வரவு அறிந்து செலவு செய்வது சிக்கனம் செலவு அறிந்து வரவை சேமிப்பது நற்குணம்
சிக்கனமாய் வாழ்ந்திடுவோம் சிறு துளி பெருவெள்ளம் போல் சிறுகச் சிறுகச் சேர்த்திடுவோம்.
சிக்கனமும் சிறுசேமிப்பும் வாழ்க்கை தரத்தை உயர்த்திடும்,தேவை எல்லாம் பூர்த்தி செய்திடும், சிக்கனம் வீட்டை காத்திடும் சேமிப்பு நாட்டை காத்திடும்.
இன்று பிறந்தநாள் மற்றும் திருமண நாள் கொண்டாடும் அனைவருக்கும் தென் தமிழ் சார்பாக நல்வாழ்த்துக்கள். வரைந்து எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி.