பெங்களூருவின் அழகிய கலைப் பொக்கிஷம்.. பனசங்கரி சிற்பப் பூங்கா
- க.சுமதி
பெங்களூரு: பெங்களூரு சிற்பப் பூங்கா பலரையும் கவர்ந்து வருகிறது. பனசங்கரி பகுதியில் இந்த சிற்பப் பூங்கா, பெரும் கலைப் பொக்கிஷமாக உருவாகியுள்ளது.
கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூரு, பூங்கா நகரம் என்ற புகழுக்கு உரியது. லால்பாக், கப்பன் பார்க் போன்ற பிரம்மாண்டமான நந்தவனங்கள் மட்டுமின்றி, நகரின் மூலைமுடுக்கெல்லாம் பரவியுள்ள சிறு சிறு பூங்காக்கள் பெங்களூருவை ஒரு பசுமைச் சோலையாக மாற்றியுள்ளன.
இந்த நிலையில் புதிதாக ஒரு சிற்பப் பூங்காவை கர்நாடக அரசு உருவாக்கியுள்ளது. இயற்கையோடு இயைந்த வாழ்வை மக்களுக்கு வழங்க அரசு எடுத்துள்ள இந்த முயற்சி, உள்ளூர்வாசிகளை மட்டுமின்றி சுற்றுலாப் பயணிகளையும் வெகுவாக ஈர்க்கிறது.அழகு மிளிரும் மரங்களுக்கும் மலர்களுக்கும் இடையே, ஒரு கலை உலகமே இங்கே ஒளிந்திருக்கிறது. அதுதான் பனசங்கரியில் உள்ள சிற்பப் பூங்கா.
எங்கே உள்ளது இந்த கலைக்கூடம்?
பெங்களூரு மேம்பாட்டு ஆணையத்தால் (BDA) பராமரிக்கப்படும் இந்தப் பூங்கா, பனசங்கரி 6-வது நிலை, சுப்ரமணியபுரா (பாரத் ஹவுசிங் சொசைட்டி) பகுதியில் அமைந்துள்ளது. குட்டி மாமல்லபுரம் என்று சொல்லும் அளவுக்கு இந்தப் பூங்கா அமைந்துள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் அமைந்துள்ள இந்தப் பூங்கா, காண்பவர் கண்களுக்கு ஒரு கலை விருந்தாக அமைகிறது.
இங்குள்ள தத்ரூபமான சிற்பங்களைப் பார்க்கும்போது, ஒரு நிமிடம் நாம் மாமல்லபுரத்திற்கே வந்துவிட்டோமோ என்ற பிரமிப்பு உண்டாகும். மூன்று பேர் பயணிக்கும் மோட்டார் சைக்கிள், துள்ளிக்குதிக்கும் குதிரை, கல்லின் மீது சாய்ந்து உறங்கும் பொம்மை எனச் சிறுவர்களைக் கவரும் பல சுவாரசியமான சிலைகள் இங்கு செதுக்கப்பட்டுள்ளன.
என்னெல்லாம் வசதிகள் உள்ளன?
நடைப்பயிற்சி மேற்கொள்வோருக்குத் தனிப்பாதை, கலாச்சார நிகழ்வுகளுக்கான சிறிய அரங்கம் மற்றும் குழந்தைகள் விளையாடப் பிரத்யேகமான விசாலமான இடங்கள் என அனைத்தும் இங்கே உண்டு. ஒரு நாள் சுற்றுலாவுக்கு ஏற்ற இடமாகவும் இது இருக்கிறது.
குடும்பத்துடன் வார விடுமுறையைக் கழிக்க இது ஒரு மிகச்சிறந்த இடமாகும். பசுமையான புல்வெளியில் அமர்ந்து உரையாடிக்கொண்டே, கலை நயம் மிக்க சிற்பங்களை ரசிப்பது மனதிற்குப் புத்துணர்ச்சி அளிக்கும்.
மெஜஸ்டிக் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் இந்த சிற்பப் பூங்கா உள்ளது. பனசங்கரி செல்லும் நகரப் பேருந்துகள் மூலம் (தடம் எண் 12 போன்றவை) எளிதாக அடையலாம். மெட்ரோவில் வருவோர் பனசங்கரி நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து ஆட்டோ மூலம் பூங்காவை அடையலாம்.
என்னங்க புத்தாண்டை இந்த சிற்பப் பூங்காவுடன் இணைந்து சிறப்பாக கொண்டாடலாமா!
(க.சுமதி, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)