பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து: முக்கிய தலைவர்கள் இரங்கல்!
சென்னை: கடலூர் மாவட்டம், செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து ஏற்பட்டதற்கு தமிழக முக்கிய தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கடலூர் மாவட்டம், செம்மங்குப்பத்தில் இன்று காலை பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பள்ளி வேனில் இருந்த 3 பேர் பலியாகியுள்ளனர். மேலும், இந்த விபத்தில் காயம் அடைந்தவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய கோர விபத்தில் 3 மாணவ - மாணவியர் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன்.
ஆயிரம் கனவுகளோடு பள்ளிக்கு சென்று கொண்டிருந்த இந்த மழலைகளின் மரணம் ஆற்றொணா துயரையும் வேதனையையும் தருகிறது.
இவ்விபத்தில் படுகாயமுற்றவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் பேரில் உரிய சிகிச்சைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு, பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
விபத்தில் பிள்ளைகளை இழந்து தவிக்கும் பெற்றோர்களுக்கு என்னுடைய ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதுமாதிரியான விபத்துகள் இனியும் தொடராத வகையில் அனைத்து தரப்பிலிருந்தும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிட வேண்டும்.
எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளாகியதில் 2 மாணவர்கள் உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன், படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்க, உரிய நடவடிக்கை எடுக்க இந்த திமுக அரசை வலியுறுத்துகிறேன், காயமடைந்த அனைவரும் பூரண உடல் நலன் பெற வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
திமுக எம்.பி. கனிமொழி
கடலூரில் பள்ளி வாகனம் மீது இரயில் மோதிய விபத்தில் இரு குழந்தைகள் உயிரிழந்த செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். இத்துயர்மிகு வேளையில், அக்குடும்பங்களின் கரம்பற்றி எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் காயமடைந்து, சிகிச்சை பெற்றுவரும் குழந்தைகளும் விரைந்து நலம்பெற விழைகிறேன்.
இந்த நாட்டில் மொத்தமுள்ள 68,584 கி.மீ தூரம் ரயில்வே வழித்தடத்தில் வெறும் 1,548 கி.மீ மட்டுமே 'கவாச்' பாதுகாப்பு அமைப்பு நிறுவப்பட்டுள்ளது என்பதைப் பலமுறை சுட்டிக்காட்டிவிட்டோம். இத்தனை விபத்துகள் நேர்ந்த பின்னும், ஒன்றிய அரசுக்கு இதில் துளியளவும் கவலை இல்லை.
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை
கடலூர் அருகே செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் பள்ளிக் குழந்தைகள் இருவர் உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
பொதுமக்கள் தினமும் கடக்கும் ரயில்வே வழிகளில் பாதுகாப்பு இல்லாமல் இருப்பது மிகவும் வருத்தத்திற்குறியது. மக்கள் எங்கு அதிகம் செல்கிறார்களோ அந்த இடங்களில் பாதுகாப்பும், எச்சரிக்கையும் கட்டாயம் இருக்க வேண்டும். இத்தகைய துயரங்களுக்கு ரயில்வே துறை முழு பொறுப்பு ஏற்க வேண்டும். ஒன்றிய ரயில்வே அமைச்சர் நேரடியாக இச்சம்பவத்தைக் கவனித்து, பாதுகாப்பு குறைபாடுகளை உடனடியாக சரி செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாட்டு மக்களின் உயிர்களை பாதுகாப்பது தான் ஒர் அரசின் முதல் கடமையாகும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடும் காயமடைந்தவர்களுக்கு சிறப்பு மருத்துவ சிகிச்சையும் பெற ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது போன்ற விபத்துகள் மீண்டும் நடைபெறாமல் இருக்க ஒன்றிய அரசு மற்றும் ரயில்வே துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து மக்களின் பாதுகாப்பு முறைகளை உறுதி செய்திட வேண்டும்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
கடலூர் செம்மங்குப்பத்தில் மூடுந்து மீது தொடர்வண்டி மோதிய விபத்தில் 2 குழந்தைகள் இறப்பு - இரங்கல்
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே தொடர்வண்டி கடவுப் பாதையை கடக்க முயன்ற தனியார் பள்ளி மூடுந்து மீது தொடர்வண்டி மோதியதில் 2 மாணவர்கள் உயிரிழந்து விட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. உயிரிழந்தோரை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
காயமடைந்து மருத்துவமனைகளில் மருத்துவம் பெற்று வரும் அனைவருக்கும் தரமான மருத்துவம் அளிக்கப்பட வேண்டும். அவர்கள் அனைவரும் விரைவில் முழுமையான உடல்நலம் பெற வேண்டும் என விழைகிறேன்.
விபத்துக்கான காரணம் குறித்து பல தகவல்கள் கூறப்படும் போதிலும் எதுவும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. கடவுப்பாதை பணியாளர் உறங்கி விட்டதால் கதவை மூட மறந்தது தான் விபத்துக் காரணம் என்று ஒரு தரப்பிலும், கதவை மூட பணியாளர் முயன்ற போது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஓட்டுனர் தடையை மீறி மூடுந்தை ஓட்ட முயன்றது தான் விபத்துக்கு காரணம் என்று தொடர்வண்டித் துறை தரப்பிலும் கூறப்படுகிறது. 2 உயிர்கள் பறிபோவதற்கு காரணமான விபத்துக்கு யார் காரணமாக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட ஆளில்லா கடவுப்பாதைகள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதைப் போல, கடவுப்பாதைகள் இருக்கும் இடங்கள் அனைத்திலும் மேம்பாலங்களை அமைக்க மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; இதற்காக வல்லுனர் குழுவை அமைத்து ஆலோசனைகளை பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.