Travel story: ஏழு வருடங்கள் போதாது.. அந்த 7 நாள் அனுபவத்தைச் சொல்ல.. ஒரு மினி தொடர்!
- சுதா திருநாராயணன், திருச்சி
வாருங்கள், ஒரு அருமையான, சுவாரஸ்யமான கப்பல் பயணக் கதையை பகிர்ந்து கொள்வோம்.. ஏழு வருடங்கள் போதாது, இந்த ஏழு நாட்கள் அனுபவங்களை சொல்ல.
2019 ஆம் வருடம் ஜூலை மாதம் கார்னிவல் ஸ்ப்லெண்டர் என்ற சொகுசுக் கப்பலில் ஏழு நாட்கள் பயணம் செய்தோம். எங்கள் மகள், மருமகன் மற்றும் இரண்டு பேத்திகளுடன் லாஸ் ஏஞ்சல்ஸ்ஸில் இருந்து மெக்ஸிகோ வரை பயணம் செய்தோம்.
கலிபோர்னியாவில் எங்கள் மகளின் இல்லத்திலிருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் துறைமுகத்திற்கு காரில் பயணம் செய்ய காலை 4.30 மணிக்கு கிளம்பினோம் . வழி நெடுக இயற்கையின் அழகை ரசித்தோம். வயல்களில் ஏரோப்ளேன் மூலம் உரம் தூவுவதை பார்த்தோம். மதியம் 12 30 க்கு துறைமுகம் வந்தடைந்தோம்.
மிகவும் அருமையாக இருந்தது. கப்பலோட்டிய பெருமைக்கு உரியவர் தமிழர் வ.உ. சி. கப்பலுக்குள் ஓடி விளையாடிய தமிழர் நாங்கள். எங்களைத் தவிர வேறு தமிழர் யாரும் வந்ததாகத் தெரியவில்லை. கப்பலா அது, நகரும் மைசூர் மகாராஜாவின் அரண்மனை போலிருந்தது.
மனிதரில் நான்கு வர்ண பேதம் என்றனர் முன்னோர். இங்கோ பல வர்ணங்களைக் கொண்ட மக்கள் பூசிக்கொண்ட ஒரே வர்ணம் மகிழ்ச்சி வர்ணம். கொடி இடையாள்களும், கூந்தல் அழகிகளும், யௌவன முறுக்குகளும் , சுட்டிச் சிறார்களும், முதுமையின் முதிர்ச்சிகளும் , பேசிய ஒரே மொழி ஆனந்தம், மகிழ்ச்சி, குஷி. எங்கு திரும்பினாலும் குதூகலம், கொண்டாட்டம் , கலகலப்பு, காதல். கிள்ளைமொழி ஆற்றும் பஞ்சவர்ண கிளிகளைப் போன்ற அழகு ஓவியங்களுக்கு நிகரான பெண்கள்.
கேளிக்கைகள், வஞ்சனை இல்லாத உணவு, கோலாகலம், ஆரவாரம், திகட்டத் திகட்ட சாப்பாடு, கூடை கூடையாய் பழங்கள், கோப்பை கோப்பையாய் அருந்த காபியும் பழரசங்களும், ஐஸ்கிரீம்களின் அணிவகுப்பு, இந்த சுவர்க்கத்திற்கு பிறகும் வேறு சொர்க்கமும் உண்டோ?
3,500 நபர்களுக்கு 7000 உணவு வகைகள். அதில் மசாலா தோசையும் அடக்கம்,ஆனால் சட்னியும் சாம்பாரும் கிடையாது. அந்த மசால் தோசையும் ஒரே ஒரு நாள்தான் எங்களுக்கு கிடைத்தது. ஒரே ஒரு நாள்தான் அது தயாரிக்கப்பட்டது கப்பலில்.
எண்ணற்ற அயல்நாட்டு சைவ உணவு வகைகள். 35 வருடங்களாக இந்த சொகுசு பயணக் கப்பல் சேவை புரிகிறது. ஒரு மாதத்திற்கு முன்பே சொகுசுப் பயணக் கப்பலில் பயணிப்பதற்காக புதிய ஆடை அணிகலன்கள் வாங்கிக்கொண்டோம்.
புதிய மனிதர்கள், பல மொழிகளின் கலவை கூச்சல். எங்கள் அருகில் ஓர் அழகான இளம் ஜோடி சிறு குழந்தைகளைப் போல கை தட்டி விளையாடிக்கொண்டிருந்தனர். எங்களுக்கும் உற்சாக ஊற்று பீறிட்டுக்கொண்டு வந்தது. எங்கள் பெட்டிகள் பெரிய வண்டிகளில் ஏற்றப்பட்டு கப்பலுக்குள் அனுப்பப்பட்டன. அதைப் பார்த்ததே ரொம்ப புதுமையான அனுபவமாக இருந்தது. எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.
ஒரு வழியாக செக் இன், பாஸ்போர்ட் செக்கிங் எல்லாம் முடிந்து சுபமாக வலது கால் எடுத்து வைத்து க்ரூஸ் கார்னிவல் ஸ்பெலண்டரில் நுழைந்தோம்.
சொர்க்கத்தின் நுழைவு வாயில். உலகமெங்கிலும் இருந்து சுமார் மூவாயிரம் பயணிகள். இடைவிடாத இசை, நடனம், கட்டுப்பாடில்லாத ஐஸ்கிரீம், கேக், பழங்கள், சாலட் வகைகள், காபி, டீ, லெமனேட், பாப்கார்ன், எதைச் சொல்ல எதை விட? Passion fruit, prune, nectarine, persimmon, strawberry, raspberry போன்ற பலவிதமான பழங்கள். ஆல்மண்ட்ஸ்(பாதாம்) , பிஸ்தா, வால்நட், ஹேஜல் நட், வறுத்த பரங்கி விதைகள், அக்ரூட் பருப்பு இன்னும் பல விதமான பருப்புகள் (உளுத்தம் பருப்பு கடலைப்பருப்பு துவரம் பருப்பு தான் இல்லை).
ஓட்ஸில் செய்யப்பட்ட பலவித பதார்த்தங்கள், ஆல்மண்ட் மில்க், சாக்லேட் மில்க் இன்னும் பலவித ஃபிளேவர்களில் பால் - லிட்டர் லிட்டராக எவ்வளவு வேண்டுமானாலும் அருந்தலாம். அதேபோல் தான் பழரசங்களும். உண்டி சுருங்குதல் பெண்டிற்கு அழகு என்ற பழமொழி எல்லாம் செல்லாது இங்கே.
தமிழனின் உயிரான தயிர் சாதம் கூட கிடைத்தது. பிளைன் ரைஸ் ப்ளைன் யோகர்ட் இரண்டையும் கலந்து தயிர் சாதமாக சாப்பிட்டோம். எங்கள் அறையிலிருந்து கடல் அன்னை அழகாக தெரிந்தாள். கப்பலில் மொத்தம் 14 மாடிகள், டெக் என்று கூறினர்.
நீச்சல்குளம், ஸ்பா, சினிமா, மினி கோல்ப் கிரவுண்ட், டேபிள் டென்னிஸ், என்ன இல்லை இங்கே? தியேட்டரில் இடைவிடாத காமெடி ஷோ நடந்துகொண்டே இருந்தது. கப்பலின் உட்புறத்தில் அலங்கார விளக்குகளும், வண்ணத் தோரண விளக்குகளும் ஜாஜ்வல்யமாக ஒளி வீசின. கப்பலில் பார்மல் டின்னருக்காக ஆடம்பரமாக உடையணிந்து சென்றோம். பேத்திகள் இருவரும் மிக அழகாக அலங்காரம் செய்து கொண்டிருந்தனர். நிறையப் புகைப்படம் எடுத்துக் கொண்டோம்.
சுஷி என்ற ஜப்பானிய சைவ உணவு வகையை ருசித்தோம். மெக்சிகோவின் மூன்று நகரங்களை சுற்றிப் பார்த்தோம். அதற்கு கப்பலில் இருந்து பஸ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கப்பல் மெக்சிகோவில் நங்கூரம் இட்டது. நாங்கள் பார்த்த நகரங்கள் காபோ, மஸால்டன், புயார்ட்டோ வல்லார்ட்டா.
(தொடரும்)